"ஏழை மக்களின் வருவாயை உயர்த்தி னால் மட்டும் வறுமை ஒழிந்துவிடாது. அடிப்படை சுகாதார வசதி, முறைப்படியான கல்வி வசதி, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை ஏழைகளுக்கு உத்தரவாதப்படுத்தினால்தான் வறுமையை ஒழிக்க முடியும்''’’
-நோபல் விருதுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இப்படிக் கூறியிருக்கிறார். ஆனால், மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த உத்தரவாதம் எதுவும் இல்லையென்று பொருளாதார அறிஞர்கள் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.
உலகிலேயே அதிகமான விலைக்கு இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விற்கப் படுகிறது. தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் இந்த விலை உயர்வு தேர்தல் சமயத்தில் மட்டுமே இறங்கு முகத்திற்கு வரும் நிலை இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்று பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த கலால் வரியில் 1 ரூபாயும், செஸ் ஒரு ரூபாயும், வாட் வரி 50 பைசாவுமாக 2 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டு ஏழை நடுத்தர மக்களின் தலையில் விலை யேற்றத்தை சுமத்தியிருக்கிறார் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சுகமான போக்குவரத்துக் கும் வசதியான மெட்ரோ ரயில்களுக்குமே இந்த விலை உயர்வு என்று அவர் காரணம் சொல்லியிருக்கிறார். அவர் வெறும் போக்குவரத்து வசதியை மட்டும் குறிவைத் திருக்கிறார். ஆனால், பெட் ரோல், டீசல் விலையை உயர்த் தியதால் அனைத்துப் பொருட் களின் விலையும் உயரக் காரணமாகி, ஏழை நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார் என்கிறார்கள்.
"ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பணம் எடுத்தால் 2 சதவீதம் வட்டி' என்று நிர்மலா அறிவித்திருக்கிறார். இதையெல் லாம் வசதிபடைத்தோர் எளிதில் ஏமாற்றி விடுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். அதிலும் பல உறுப்பினர்கள் உள்ள குடும்பத்தில் இதெல்லாம் செல்லாமல் போய்விடும் என்கிறார்கள்.
"மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள் மீது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருப்பது அநியாயம். இந்த வரியை முதலில் நீக்க வேண்டும். அறிவுக்கே வரியா?' என்று மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி கூறியிருக்கிறார்.
இறக்குமதி செய்யப்படும் புத்தகத்தின் மீது மட்டுமின்றி, இறக்குமதி செய்யப்படும் பத்திரிகை காகிதத்தின் மீது 10 சதவீதம் வரியை விதித்திருக் கிறது மோடி அரசு. இது உள்நாட்டு பத்திரிகை களை முடக்குவதற்கான நடவடிக்கை என்று கடுமையாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால், மலிவு விலையில் வெளிநாட்டு புத்தகங்கள் இந்தியாவுக்குள் வந்து, உள்நாட்டு பதிப்பகங்களை பாதிப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த வரி என் றும் நிர்மலா நியாயப்படுத்துகிறார். அதுபோலவே, உள்நாட்டு பத்திரிகைக் காகித உற்பத்தியை அதி கரிக்கவும், அதை உபயோகிக்கவும் வசதியாகவே இறக்குமதி காகிதத்தின் மீது வரி விதித்ததாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க. அரசு அறிவு வளர்ச்சிக்கு எதிரானது என்பது தெரிந்த விஷயம்தானே என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
2018-2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண் டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. வேலைவாய்ப்பின்மையோ கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்திருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிர்மலா, இந்தியப் பொருளாதாரம் இந்த நிதியாண்டு இறுதியில் 12 சதவீதமாக உயர இலக்கு வைத்திருப்பதாகவும், நிஜத்தில் 7 முதல் 8 சதவீதம் வளரும் என்றும் கூறியிருக்கிறார். இது அவருடைய தவறான புரிதல் என்று பொருளாதார விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். விவசாயத்திற்கு இந்த பட்ஜெட் டிலும் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதே உண்மை. 350 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை இந்திய பொருளாதாரம் 2025-2026ல் எட்டும் என்று விஸ்தாரமான கனவை விதைத்திருக் கிற நிர்மலா, இப்போதைய இந்தியாவின் விவசாய வளர்ச்சி விகிதத்தை கூறவே இல்லை. 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்கும்போது காங்கிரஸ் விட்டுச் சென்ற வளர்ச்சி 4.27 சதவீதம் என்பதை யும் இப்போதைய வளர்ச்சி அதிலிருந்து சரிந்து 2.89 சதவீதம் ஆகியிருக்கிறது என்பதையும் அவர் எப்படி கூறுவார். விவ சாயிகளின் கடன், கட்டுப் படியான விலை, விதை, உரம் ஆகிய அடிப்படை கோரிக்கைகள் எதற்கும் இந்த பட்ஜெட்டிலும் தீர்வு இல்லை என்பது தான் உண்மை.
கிராம மேம்பாடு, வேலைவாய்ப்பு, சிறு தொழில் வளர்ச்சி குறித்து பட்ஜெட் பேசு கிறது. ஆனால், 100 நாள் வேலை உறுதித் திட்டத் திற்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப் பட்டிருக்கிறது. சிறு தொழில்களுக்கு 59 நிமி டத்தில் கடன் கிடைக்கும் என்று சொல்லப்பட் டாலும், 10 ஆண்டுகளில் 100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காத கம்பெனிகளுக்கு இந்தச் சலுகை கிடைக்காது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்த்து, அந்தத் துறையில் தனியார் முதலீட்டுக்கே வகை செய்யப்பட்டிருக்கிறது. ரயில்வேயை தனியார் நடத்தினால் கட்டணம் அதிகமாக இருக்குமே என்று கேட்டால், தனியார் ரயிலில்தான் பயணிக்க வேண்டும் என்று மக்களை வற்புறுத்த மாட்டோம் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வித்தியாசமாக விளக்கம் தருகிறார்.
சட்டியில் இருப்பதற்குள் பசியைப் போக்க வழி தெரியாமல், முந்தைய அரசுகள் மக்களுக்காக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பொதுத்துறை நிறு வனங்களுக்கு சொந்தமான 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் பங்குகளை தனியாருக்கு விற்க பா.ஜ.க. அரசு முடிவு செய்திருப்பது மிகப்பெரிய துரோகம் என்று தொழிற்சங்கங்கள் கண்டித்திருக் கின்றன. 51 சதவீத பங்குகள் அரசு வசம் இருந்தால் தான் அந்த நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் தனியார் ஆதிக்கத்திற்கு பொதுத்துறை நிறுவனங் களை தள்ளிவிட மோடி அரசு தீர்மானித்திருப்ப தாக அவை கூறுகின்றன. குறிப்பாக ஒரே தனியா ருக்கு ஏதேனும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்றால் அந்த நிறுவனம் குறிப்பிட்ட அந்த தனியாரின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். ஏர் இந்தியாவில் தொடங்கி பல பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு இப் படி குறிவைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
-ஆதனூர் சோழன்
______________
சொல்வதும் செய்வதும்!
""பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறப்பட்டாலும், கடந்த மூன்றாண்டுகளாகவே இதைத்தான் சொல்லி வரு கிறார்கள். ஆனால், அடிப்படை கட்டு மானங்களையோ, தொழில்நுட்ப வசதி களையோ மத்திய அரசு உருவாக்கவே இல்லை. ஒருபக்கம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக்கொண்டே மரபணு மாற்றப்பட்ட விதைகளை தொடர்ந்து மத்திய அரசு ஊக்குவிப்பது எந்த வகையில் நியாயம்'' என்கிறார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
______________
உயரும் கட்டணம்!
"ரயில்வேயில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் 50 லட்சம்கோடி முதலீடு என்று பட்ஜெட்டில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நிதி ஆதாரம் எங்கே என்று சொல்லவில்லை. அதாவது ரயில்வேயை தனியார் மயம் ஆக்க 2017 ஆம் ஆண்டிலேயே விவேக் தேவராய் கமிட்டி பரிந்துரை செய்துவிட்டது. இதற்காக ரயில்வே வளர்ச்சி ஆணையம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்த ரயில்வே சட்டத்தை திருத்தவும், முதல் கட்டமாக பயணிகள் ரயில்களை தனியாருக்கு சம அளவில் இயக்க வாய்ப்பளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இப்போது, அத்தகைய ஆணையம் அமைக்காமல், ரயில்வே நிர்வாகமே நேரடியாக தனியாரை அனுமதிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் ரயில்களில் கட்டணம் உயராது என்பதெல்லாம் பொய்'' என்கிறார் ரயில்வே சங்கமான டி.ஆர்.இ.யூ. துணைத்தலைவர் இளங்கோவன்.