வழக்கமாக பீகார், உ.பி., மத்தியப்பிரதேசம் போன்ற மாவட்டங்களில் தான், இறந்த உடலை மருத்துவமனையிலிருந்து ஏற்றிச்செல்ல அமரர் ஊர்தி கிடைக்காமல் தோளிலும், சைக்கிளிலும் ஏற்றிச் செல்வார்கள். அந்தக் காட்சி தமிழகத்திலும், தமிழக துணைமுதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அரங்கேறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேனி மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் வரை 43 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதிசெய்யப் பட்டிருந்தது. அதுபோல் மே மாதத்தில் 66 பேருக்கும் ஜூன் மாதத்தில் 593 பேருக்கும் தொற்று உறுதியானதன் மூலம் மூன்று பேர்தான் இறந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் திடீரென அரசு ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், பொதுமக்கள் மற்றும் ஓ.பி.எஸ். தம்பி ராஜா உட்பட உள்பட 4326 பேருக்கு கொரோனா பரவியது.
91 பேர் இந்த ஒரே மாதத்தில் மட்டும் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். தற்போது ஆறாயிரத்திற்கு மேற்பட் டோருக்கு தொற்று பரவியும், மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு மாறுவதாக இல்லை.
தி.மு.க., சி.பி.எம். உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்தும்கூட தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது. துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அடிக்கடி ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடத்தினாலும்கூட தடுப்பு பணிகள் என்பது பெயரளவிலேயே இருந்துவருகிறது.
இந்த நிலையில்தான் கூடலூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பொன்னம்மாளுக்கு ஜூலை 28-ஆம் தேதி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உடனே தேனி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இருந்தும் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சுகாதாரத் துறையினர் மெத்தனப் போக்கை கடைப்பிடித்தனர். திடீரென அந்த மூதாட்டி கடந்த 31-ம் தேதி இரவு இறந்துவிட்டார். உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தும் மறுநாள் ஆகஸ்டு 1-ஆம் தேதி மதியம் பன்னிரண்டு மணிவரை ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதி மக்கள் கொரோனா தொற்றால் இறந்த உடலை ஊருக்குள் வைக்கக் கூடாது உடனே அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
இதனால் உறவினர்கள் அந்த மூதாட்டியின் உடலை போர்வையால் சுற்றி அப்பகுதியிலிருந்து ஒரு தள்ளுவண்டியை வரவழைத்து அதில் மூதாட்டியின் உடலைப் போட்டு சுடுகாடு வரை தள்ளிச் சென்று உடலை தகனம்செய்தது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுசம்பந்தமாக தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசனிடம் கேட்டபோது... ""சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால், பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு முறையாக கொரோனா டெஸ்ட் பண்ண வில்லை. சென்னையைப் போல பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்தபோது, மாவட் டத்தில் போதுமான அளவு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் ஆர்வம்காட்டுவதும் இல்லை. கடந்த வாரம் பண்ணபுரத்தை சேர்ந்த முருகேசனுக்கு தொற்று உறுதியானபின்பும் ஒரு வாரம் வரை அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லவில்லை கடைசியில் நாங்கள்தான் ஒரு ஆட்டோவைப் பிடித்து அனுப்பிவைத்தோம். மாவட்ட நிர்வாகத்தின் காலதாமதத்தால் அந்த குடும்பத்தாருக்கும் தொற்று பரவியது.
போடி. தாசன்பட்டி, அரண்மனை புதூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி உள்பட பல பகுதிகளில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததாலும் தொற்று அதிவேகமாக பரவிவருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் குதித்து மாவட்ட கலெக்டரை மாற்றக்கோரியும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. கொரோனா நடவடிக்கைக்காக போடப்பட்ட ஐ.ஏ.எஸ். கார்த்திக்கும் ஒரு நாள் வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுப் போய்விட்டாரே தவிர மற்றபடி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. துணை முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த தொற்று காட்டுத்தீ போல் பரவிவருவதையும் கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கை ஓ.பி.எஸ்.சும் கடைப்பிடித்து வருவதுதான் வருத்தமாக இருக்கிறது''’ என்றார்.
""மாவட்டத்தில் தினசரி 800-க்கும் மேற் பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. மாவட்டத்திலுள்ள சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரிவர ஆர்வம் காட்டுவதில்லை. மாவட்டத்திலேயே துணைமுதல்வர் சொந்த ஊரான பெரியகுளத்தில்தான் கொரோனா தொற்று அதிகமாக பரவியிருக்கிறது'' என்றார் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் விளக்கம் கேட்க பலமுறை செல்மூலம் தொடர்புகொண்டும்கூட லைனில் பிடிக்க முடியவில்லை.
-சக்தி