"தம்பி அவய்ங்க கிடக்குறாய்ங்க... தலைவர் எம்.ஜி.ஆரையே செருப்பால் அடிச்சது இந்த ஜெயக்குமாரோட அப்பாதான்... இவனெல்லாம் பேசுறான் தம்பி. கொஞ்சம் பொறுமையா இருங்க, அடித்து காலி பண்ணிருவோம். சசிகலாவுக்கு ஆதரவாத்தான் இருக்கிறோம்'' என்ற முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூவின் ஆடியோ, அரசியல் வட்டாரத்தில் ஆட்டம்போட ஆரம்பித்துள்ளது.
அந்த ஆடியோவில்... "அண்ணே என்னைத் தெரியுதா? வில்லாபுரம் சக்திவேல் பேசுகிறேன்... இப்ப குவைத்தில் இருக்கிறேன். வீட்டில் எல்லோரும் நலமாண்ணே?'' என்று கேட்க, அதற்கு "அங்க இப்ப என்ன டைம்?'' என்கிறார் செல்லூர் ராஜூ. தொடர்ச்சியாக அந்த உரையாடல், "இப்ப 11 மணி, அங்க 1 மணி ஆகும் அண்ணே'' "ஆமா... ஆமா... சொல்லுப்பா'' "அண்ணே, நம்ம கட்சிக்கான அடையாளம் அம்மாவுக்கு அப்புறம் சின்னம்மாதான் என்றுதானே கொண்டு வந்திருக்கோம்? நீங்கள் எல்லாம் சீனியர் அதை விட்டுக் கொடுக்கலாமா?''
"நாங்களும் அதைத்தான் விரும்புறோம். நேரம் பார்த்துதான் எல்லாம் செய்யணும். இல்லைன்னா அவைங்க கைப்பற்றி போய்ருவாய்ங்க தம்பி. அந்தப்பக்கம் எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டார்கள். நம்ம பொறுமையா கொஞ்சம் கொஞ்சமாக அடித்துக் காலி பண்ணணும்.''
"ஜெயக்குமாரும், சி.வி.சண்முகமும் யாருண்ணே? சின்னாம்மாவை யாரு என்கிறார்கள்.''
"தம்பி அவய்ங்க கிடக்குறாய்ங்க... தலைவர் எம்.ஜி.ஆரையே செருப்பால் அடிச்சது இந்த ஜெயக்குமாரோட அப்பாதான், இவனெல்லாம் பேசுறான். சரி தம்பி, இன்னைக்கு கூட்டம் போட்டி ருக்கோம் அப்புறம் பேசுறேன்...'' என்பதாக முடிகிறது.
சசிகலாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சமூக வலைத்தளங்களில் பரவ, பதட்டத்துக்குள்ளான செல்லூர் ராஜூ பத்திரிகை யாளர் கூட்டத்தைக் கூட்டி, "நகர்ப்புறத் தேர்தல் வருவதால் அ.தி.மு.க.வில் கலகத்தை ஏற்படுத்த இந்த ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். இதில் துளியளவும் உண்மை யில்லை. ஆடியோவில் உள்ள குரல் எனது இல்லை. எனக்கும் அந்த ஆடியோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
என்னுடைய வளர்ச்சி பிடிக்காத சில சமூகவிரோதிகளால் இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. யாராவது இரவு 1:00 மணிக்கு பேசுவார்களா? இதிலிருந்தே தெரியவில்லையா இது பொய் என்று? இதுகுறித்து தலைமையில் கலந்தாலோசித்த பிறகு காவல்துறை சைபர் க்ரைமில் புகாரளிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றவர், "சசிகலா வருகை குறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்'' என்று முடித்துக்கொள்ள... நாம், செல்லூர் ராஜூவிடம் பேசிய வில்லாபுரம் சக்திவேல் யார் என்ற புலனாய்வில் இறங்கினோம்.
குவைத்திலிருக்கும் அவரது நம்பரைக் கண்டறிந்து அவரை தொடர்புகொண்டபோது, "செல்லூர் ராஜூவுக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் செல்லூர் ராஜூவிடம் பேசியது நூற்றுக்கு நூறு உண்மைதான்'' என்றவரிடம், செல்லூர் ராஜூ அதை மறுக்கிறாரே என்றோம். அதற்கு அவர், "சார் யாராவது இரவு 1:00 மணிக்கு பேசுவார்களா? அந்த ஆடியோவில் இரவு 1:00 மணி என்று எங்கேயும் சொல்லவில்லை. பகல் 11 மணி, அங்கு 1:00 மணி இருக்கும் என்றேனே தவிர, இரவு என்று சொல்லவில்லை. அவர் விசயத்தை திசை திருப்ப அப்படிச் சொல்கிறார். உண்மையிலேயே அவரை, சைபர் கிரைமில் புகார் கொடுக்கச் சொல்லுங் கள். அதில் நிரூபிக்கிறேன். பேசியது உண்மையென்பதால் கட்டாயம் அவர் புகார் கொடுக்க மாட்டார். நான் ஏற்கனவே ஜெயக்குமாரிடமும், கடம்பூர் ராஜூவிடமும் பேசியிருக் கிறேன். அந்த குரலை டெஸ்ட் பண்ணி பாருங்க, உண்மை தெரிய வரும். பதவி பறி போயிரும் என்ற பயத்தில் இப்படி சொல்கிறார். தலை மையில் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியும். இப்பகூட செல்லூர் ராஜூவின் முகநூல் பக்கத்தில் தைரியமிருந்தால் புகார் கொடுங்கள், நான் நிரூ பிக்கிறேன் என குறிப்பிட்டுள் ளேன்''" என்று சவால் விடுகிறார் குவைத் சக்திவேல்.
-அண்ணல்
________________
இறுதிச் சுற்று
கவர்னர் பயணத்திற்கானக் காரணம்!
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஞாயிறு மாலையில் டெல்லிக்குத் திடீர் பயணம் மேற்கொண்டது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின்பேரில் அவர் டெல்லி சென்றதால், தி.மு.க. அரசுக்கு எதிரான ரிப்போர்ட்டுடன் செல்கிறார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால், அவர் சென்றதற்கு காரணம், நாகலாந்து விவகாரம்தான். ஏற்கனவே அங்கு ஆளுநராகவும், போராட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவராகவும் இருந்தவர் ஆர்.என்.ரவி.
கடந்த சனிக்கிழமையன்று, தீவிரவாதிகள் வாகனம் என பாதுகாப்புப்படையினர் தவறாகக் குறிவைத்து சுட்டதில், நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் அப்பாவித் தொழிலாளர்கள் 6 பேர் பலியாயினர். பொதுமக்கள் கொந்தளிப்படைந்து மறியலில் இறங்கிய நிலையில், அவர்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் சுட்டனர். பொதுமக்கள் 7 பேர் பலியாயினர். ராணுவ வாகனம் தீயிடப்பட்டதுடன், பாதுகாப்பு வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதனால் நாகலாந்தில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்தே தமிழக ஆளுநரை அவசரமாக அழைத்தது டெல்லி.
-கீரன்