காலையில் எழுந்ததும் முதலில் கையில் எடுப்பது செல்போனைத்தான். இரவு எப்போது படுக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதும் செல்போன்தான். கொரோனாவுக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவ-மாணவிய ருக்கு செல்போன் கட்டாயமாகிறது. பாட நேரம் தாண்டியும் செல்போனை கைவிட முடியவில்லை. உடல்ரீதியாகவும் மனரீதி யாகவும் தாக்கம் ஏற்படுத்தும் செல்போன்களைப் பயன்படுத்துவது குறித்து இன்றைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சென்னை லயோலா கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்களிடம் உரையாற்றினார் ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் எழிலன்.

அனைவருக்கும் அவசியமான அவரது உரையிலிருந்து...

ee

Advertisment

"குழந்தைகள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்து வது பற்றி, வீட்டில் நானும் மனைவியும் விவாதம் செய்தோம். குழந்தைகள் செல்போன் பார்க்கற நேரத்தைக் குறைக்க கட்டுப்பாடுகள் விதிக்க முடிவெடுத்தோம். மகன் கவின் பிரபாகர் என்னுடைய, என் மனைவியுடைய செல் போனில் ரோல்பாக்ஸ் கேம் ஆடுவான்.

"இந்தக் குடியிருப்புக்கு நாம் வந்ததே, நிறைய குழந்தைகளுடன் விளையாடத் தான். நீ அவங்களோட போய் விளையாடாமல் மொபைல் போன்ல ஆடறியே ஏன்?'னு கேட்டேன். அதுக்கு, "இல்லப்பா இதில நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு'ன்னு அவன் பதில் சொல்றான். ஒரு கருவி குழந்தைகளை எவ்வளவு தூரம் இழுத்துவெச்சிருக்கு. அப்படின்னா இதோட தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கும்?

Advertisment

அடிக்சனை மூன்றுவிதமா பார்க்கலாம். காட்டு மனிதர்கள் பகலில் வேட்டையாடி முடித்து விட்டு இரவெல்லாம் நெருப்பைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அந்த நெருப் பைப் பார்த்துக்கிட்டே இருக்கிறதுல அவர்களுக்கு சந்தோஷம். அதுதான் அன்றைய அடிக்சன்.

மனிதன் விவசாய சமூகமானபோது நொதிக்க வைத்தலைத் தெரிந்துகொண்டான். அப்ப மதுப் பழக்கம் உருவானது. தவிர காட்டுல சில போதை தரும் தாவரங்களை அடையாளம் தெரிஞ்சு புகையாகவோ உணவாகவோ சாப்பிட்டு போதையை அனுபவித்தான். வேலை செய்ற சமூகம் பொழுதுபோக்கைத் தேடிவரும்போது போதைப் பழக்கக்கத்துக்கு அடிக்சன் ஆகிறது.

ee

இன்றைய சமூகம் மொபைல் போனுக்கு அடிமையாக இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத் துல ஒரு அடிக்சன் இருக்கத்தான் செய்யும். 80-களில் தொலைக்காட்சி வந்தது. அப்ப காலைல தொலைக்காட்சி தொடங்குனா மாலை வரை தொடரும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு அடிமையா இருந்தாங்க.

மொபைல் அடிக்சனுக்கு எதிரா நீங்க செயல்படக் கிளம்பியிருக்கீங்க. விஷுவல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் என்னும் பெயரிலேயே மக்களைத் தொடர்பு கொள்வது -விஷூவல் மீடியாவைப் பயன்படுத்துவது என்பது இருக்கிறது. அவர்கள் காட்சி ரீதியாகத்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆனால் காட்சி ரீதியாக தொடர்புகொள்வதன் தீமைகளைத் தெரிய வைக்கவேண்டும் என்பது ஒரு இரட்டைச் சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ளும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

நான் இன்டர்ன்ஷிப் பண்ணும்போது ஹவுஸ் சர்ஜனா மெட்ராஸ் மெடிக்கல் காலேஜுல வேலை செய்தேன். முதன்முதலா நோக்கியா 3301 மாடல் போனைப் பயன்படுத்தினேன். நம் தொடர்புக்காக வும் பணிக்காகவும் பயன்படுத்தும் சாதனம் கொஞ்சம் கொஞ்சமா விரிவடைந்து, தொழில் நுட்பம் வளர்ந்து போனிலுள்ள பயன்பாடுகள் அதிகமாகி ஸ்மார்ட் போன் வந்துச்சு. ஸ்மார்ட் போன் வந்ததும் உலகத்தை தனக்குள் இழுத்துக் கொண்டது.

ee

உறவினர், நண்பர்களைத் தொடர்புகொள் வதற்கான சாதனமாக இருந்தது அடிமைப்படுத்தும் சாதனமாக மாறி, நாம் வாழும் வாழ்க்கையையே பறித்துக்கொள்ளும் சாதனமாக உருவெடுத்திருக்கு.

கம்ப்யூட்டர் கேமிங் பழக்கம், நடத்தை மாறுபாடு, முரட்டுத்தனமான சுபாவம், அடிமை யாகும் தன்மையை உருவாக்குகிறது. முன்பெல்லாம் ஒரு நட்பைச் சந்திக்கவேண்டுமெனில் சிரமப்பட்டு வெளியில்போய் ஐந்தாறு பேரைச் சந்திச்சு காபி சாப்பிட்டு வருவோம். இப்போது மொபைல் போனில் ஒரு குரூப் ஆரம்பித்துவிடுகிறோம். முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் நட்பை உருவாக்கிக்கொள்கிறோம். உட்கார்ந்த இடத்திலேயே சண்டை சச்சரவுகள், கருத்துப் பரிமாற்றங்கள் சாத்தியமாகிடுது.

அன்றைய காலகட்டத்தில் ஒரு மாறுதல் தேவையெனில் கோவிலுக்குப் போவாங்க. சினிமாவுக்கு போனாங்க. இப்ப செல்போனைக் கையிலெடுத்துக்கிறாங்க. வீட்டுத் தலைவி, இது எனக்கான நேரம்னு ஒரு ஒருமணி நேரம் அவங்களுக்குத் தேவையானதைப் பார்க்கிறாங்க. அப்பாவை எடுத்துக்கிட்டா அவரும் செல்போன்தான் பார்க்கிறார். இதையெல்லாம் குழந்தைகள் பார்க்குது. இதுதான் இயல்பு வாழ்க்கைன்னு அவங்க எடுத்துக்கிறாங்க.

தினமும் பல் விளக்கும் பழக்கம் எப்படி இயல்பானதாக ஆகுதோ, அதுபோல மொபைல் போன் பார்க்கிற பழக்கமும் இயல்பானதாக குழந்தைகள் நினைத்துவிடுகிறார்கள். மொபைல் போன் பார்க்கலைன்னா ஏதோ பிரச்சினை இருக்கிறது என்ற எண்ணம் உருவாயிடுது. வெறும் தலைவலி, கழுத்துவலி, வெறுமை உணர்வுன்னு மட்டும் இல்லை. உளவியல்ரீதியா எரிச்சல், மனநிலை மாற்றங்கள்னு எத்தனையோ பிரச்சனைகள்.

ee

சிலருக்கு ஆளுமைப் பிரச்சனைகள் இருக்கும், ஆனா அது நோயாக மாற்றமடையாது. நாம் வளர்ந்த விதங்கள், சமூக அழுத்தங்கள் நமது ஆளுமைப் பிரச் சினைகளை, நோயாக மாறவிடாமல் தடுக்கும். மொபைல் போன் அந்த சமூக மனத்தடையை அகற்றிவிடுகிறது. ஆளுமைக்குறைபாடு நோயாக மாறுற நிலைக்கு போன் கொண்டுவந்துவிட்டது. அதனாலதான் கல்வியில் கவன மின்மை, வேலை செயல்திறன் குறைபாடுகள் உருவாகின்றன. இந்த சமூகத்திலிருந்து தனிமைப்பட்டுவிடுகிறோம்.

விமான நிலையம், புகைவண்டிப் பயணங்கள் இரு வெவ்வேறு குடும்பங்கள் சந்திக்கும் இடமாக இருந்துச்சு. அதில் நட்பு உருவாகும். கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். இன்றைக்கு எல்லா இடத்துலயும் மக்கள் செல் போனை எடுத்து கையில் வைத்துக்கொண்டு தனிமைப் பட்டு நிற்கிறாங்க. தற்போதைய காலத்து இளைஞர் களுக்கு தன்னோட சோகத்தையும், பிரச்சனையும் பகிர்றதுக்கு ஒண்ணு ரெண்டு பேர்தான் இருக்கிறாங்க. மொபைல் போன், மனிதத் தொடர்பை நீக்கிவிடுகிறது.

என்னோட நட்பு என்னோட மொபைல் வழியாகத் தான் என்ற சூழல் உருவாகிவிட்டது. நண்பனைச் சந்திக்க ணும்னா ஒரு முயற்சி எடுக்கணும். அவனைப் போய்ச் சந்திக்கணும். அந்த முயற்சியைத் தவிர்க்கிற சூழலை மொபைல் உருவாக்குது. மானுடத் தன்மையான இயல்பான வாழ்க்கை, இயற்கையான வாழ்க்கையிலிருந்து தொடர்புகொள்கிற வாழ்க்கையிலிருந்து விலகிப்போய் நோய்க்கூறான வாழ்க்கைக்கு உட்படுகிறோம். நாற்பது அறுபது வயதில் வரக்கூடிய இரத்த அழுத்தம், இதய அடைப்பு, உடல் பருமன், சர்க்கரை போன்ற நோய்கள் ரொம்ப சின்ன வயசுலயே வர ஆரம்பிக்குது.

நிர்வாகச் சிரமத்தைத் தவிர்க்கத்தான் ஆன்லைன் பயன்பாடுகள் வந்துச்சு. ஓய்வூதியத் திட்டம், விதவையர் நலத்திட்டப் பயன்களை, அரசு சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே பெறலாம். அதை மக்கள் பயன்படுத்த மாட்டறாங்க. ஆனா பொழுதுபோக்குக்கு மட்டும் பயன்படுத்த றாங்க.

மொபைலின் தவறான பயன்பாட் டைத் தவிர்த்து சரியான விதத்தில் பயன் படுத்த முயற்சிக்கணும். இந்த மாற்றத்தைக் கொண்டுவர முயற்சியெடுக்கணும். யூடியுப்ல ஒரு வீடியோ போட்டோ, வகுப்பெடுத்தோ மாற்றமுடியாது. எனது ஆயிரம்விளக்கு சட்ட மன்றத்தை இதற்கான ஒரு ஆய்வகமா பயன் படுத்த விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாண வர்களை அழைக்கிறேன். தொகுதியிலுள்ள பள்ளிகளில் கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்களை பயன்படுத்த அழைக்கிறேன்.

80-களில் தாய்ப்பால் பழக்கத்துக்கு மாற்றா டின் பால் பழக்கத்தை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் உலகத்தையே விளம்பரங்களால் திக்குமுக்காட வைச்சாங்க. தாய்ப்பாலையே நிறுத்திடுங்கன்னு பிரச்சாரம் பண்ணுனாங்க. பிறகு ஐந்தாறு குழந்தை கள் நல மருத்துவர்கள் தாய்ப்பாலின் நன் மைகள் குறித்து, தொடர்ச்சியான பிரச்சாரம் செய்து தாய்ப்பால் பழக்கத்தை அதிகரித்தார்கள். தொடர்புகொள்தலின் ஆற்றல் அது.

சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாண வர்கள், மொபைல் போனை எப்படி சரியாகப் பயன்படுத்தலாம், பார்க்கும் நேரத்தை எப்படிக் குறைக்கலாம்னு கற்றுத் தர என்னுடைய சட்டமன்றத் தொகுதி வரை வந்திருக்கீங்க. இதை ஆவணப்படமா ஆக்கி, மக்களிடம் மாற்றத்தை உருவாக்குங்கள்.

சிறிய அடியெடுப்புகள்தான் பெரிய வெற்றியாக ஆகும். ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் உங்களுக்குத் துணை நிற்கிறேன்.''

-மருத்துவர் எழிலன் அறிவியல்பூர்வ மாகவும் உளவியல் அடிப்படையிலும் முன் வைத்த கருத்துகள், செல்போனிலேயே குடி யிருக்கும் இன்றைய சமுதாயத்தினரின் உடலுக்கும் மனதிற்குமான மிகச் சிறந்த முதற்கட்ட சிகிச்சை.