சென்னையில் ஏப்ரல் 12 முதல் 23 வரை 13 நாட்கள் மூன்று பெரும் ஓவியர்களான கே.மாதவன், ஆர்.மாதவன், ஆர்.நடராஜனை கௌரவிக்கும் விதமாக நூற்றாண்டு விழா நடைபெற்றது. "ஓவிய மன்னர்' என அன்புடன் அழைக்கப்படும் கே.மாதவனின் ரசிகர்கள் முன்னெடுப்பில், அம்பத்தூரிலுள்ள "டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' பள்ளியில் இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி பிரமாண்ட ஓவியக் கண்காட்சி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், இலவச ஓவியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவை நடத்தப்பட்டன. விழாவில் குழந்தைகளும், ஓவிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன் தொடக்கவிழாவில் நடிகர் சிவக்குமார், பொன்வண்ணன், ஓவியர்கள் மாருதி, வேதாச்சலம், ஜெ.பி.கிருஷ்ணா, மா.செ., மருது, ஜெயராஜ், ஸ்யாம், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். விழாவினை ஒருங்கிணைத்த கே.மாதவன் நற்பணி சங்கச் செயலாளர் ராமேஷ், “"சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்''’என்றார்.
நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பது இந்திய மரபு. ஆனால் இது ஓவியக் கலைஞர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வென்பதால், குத்துவிளக்கை நேரடியாக ஏற்றாமல் குத்துவிளக்கு ஓவியம் ஒன்று வரையப்பட்டு அதன் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு ஓவியக் கலைஞர்கள் தூரிகை துணைகொண்டு தீபமேற்றிய புதுமை, பார்த்தவர்களை வியப்புக்கொள்ள வைத்தது.
விழாவில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “"நானும் ஒரு ஆர்ட்டிஸ்ட்தான். ஓவியர் ஜெயராஜின் படங்கள் பலவற்றைப் பார்த்து வரைய முயற்சி செய்திருக்கிறேன். ஓவியக் கலைஞர் ஒருவருக்கான நிகழ்வில், இத்தனை பெரிய ஓவியக் கலைஞர்கள் நடுவே ஒரு ஓவியராக மதித்து என்னையும் அழைத்தது எனது பாக்கியம்''’என நெகிழ்ந்தார்.
ஓவியர் கே.மாதவன் சிறப்புகளைப் பற்றி நக்கீரனுக்காக விரிவாகப் பேசிய நடிகர் பொன்வண்ணன், "கே. மாதவன், திருவனந்தபுரத்தில் 1906-ஆம் வருடம் பிறந்தவர். அவருடைய அப்பா. திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஒரு ஓவியராகப் பணியாற்றியவர். சிறுவயதில் இருந்தே மாதவன் ஐயாவுக்கு ஓவியத்தின் மேல் பெரிய ஈடுபாடு உண்டு. நாடகங்களுக்கான பின்னணி திரைச்சீலை, நாடகங்கள் திரைப்படமானபோது பின்னணி ப்ளோர் ஓவியங்கள், பேனர், கட்அவுட், காலண்டர், பத்திரிகை என தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப தன்னையும் வளர்த்துக்கொண்டவர் மாதவன் ஐயா.
மாதவன் ஐயாவுடைய ஓவியங்கள் தமிழக மரபிலேயே இருந்தது. வட இந்திய கடவுள்களைப்போல இல்லாம, புராணத்துல காணப்படுகிற கடவுள்கள் மாதிரி இல்லாம, அதை உடைச்சி எளிமைப்படுத்தி இந்த மண்ணுக்கான கடவுள்கள், இந்த மண்ணுக்கான குணாதிசயம், நிறங்கள், நகைகள், அந்தப் பின்னணினு தனக்குன்னு ஒரு தனி பாணியில அவரு வரைய ஆரம்பிச்சாரு "சந்திரலேகா' படத்துக்கு சென்னையிலயும், மும்பையிலயும் மிகப்பெரிய கட்அவுட் வெச்சாங்க. அந்த கட்அவுட்ல ராஜகுமாரி அவர்களுடைய கட்அவுட் பாத்தீங்கன்னா, கிட்டத்தட்ட 60 அடி. முகத்த மட்டும் அவ்வளவு பெரிசா கட்அவுட்ல செஞ்சிருப்பாங்க. மாதவன் ஐயா பெருசா ஒர்க்பண்ணி பெரிய அளவுல பேர் எடுத்தாரு. அண்ணா காலட்டத்துல அப்போ மாதவன் ஐயா வரைந்த ஓவியங்கள்தான் இன்னிக்கும் சட்டசபைக்குள்ளேயும் பல அரசு அலுவலகங்கள்லயும் அங்கீகரிக்கப்பட்ட ஓவியங்களா இருக்கு.
இந்த தலைமுறை அவரைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டு அவரை பெரிய அளவுல கொண்டாடணும், மதிக்கணும். அவரைப் பற்றி அடுத்த அடுத்த தலை முறைக்கும் கொண்டுசேர்க்கிற வேலையச் செய்யணும்''’என்று குறிப்பிட்டார்.
மூன்று ஓவியக் கலைஞர்களோடு, ஓவியர்கள் பொருளாதார நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதையும் ஓவியக் கலைஞர் ஸ்யாம் விவரித்தார்.
"கே.மாதவனின் வாரிசுகள், ரசிகர்கள்தான் இந்த விழாவை நடத்தினாங்க. ஓவியக் கலைஞர்கள் கே.மாதவன், ஆர்.மாதவன், ஆர். நடராஜன் மூன்று பேரும் திறமையானவங்க.… அவங்க திறமை உலகத்துக்குத் தெரியாமப் போச்சு. அது தெரியவேண்டும் என்பதற்காக, கே.மாதவன் வாரிசுகள் இந்த விழாவுக்காக சென்னை வந்து தமிழகத்திலுள்ள ஓவியக் கலைஞர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி இந்த விழாவை சிறப்பாக நடத்த சிரத்தை எடுத்திருந்தது மகிழ்ச்சியளித்தது.
ஓவியர் மாருதி, கே.மாதவன், நடராஜனோட நேரடி சிஷ்யர். நடிகர் சிவக்குமார் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் படிச்சதனால இந்த ஓவியர்களை நேரில் சென்று பார்த்த அனுபவங்களைக் கொண்டவர். அதனால் இவர்கள் இருவரும் மாதவன், நடராஜனோட நேரடி அனுபவங்கள் பத்தி விழாவில் பேசியது எல்லாரையும் கவர்ந்தது.
விழாவில் பலரும் ஓவியர் மாதவன் ரொம்ப வறுமையில வாடுனதா பேசினார்கள். ஒரு ஓவியன் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குப் போகமுடியும். நூற்றுக்கணக்கான ஓவியர்கள் இந்தியாவுல இருக்காங்க. அவங்க யாருமே கோடீஸ்வரங்களா ஆனதில்லை. ஓவியர்கள் தங்களோட ஓவியத்தைப்போலவே புத்திசாலித்தனத்தையும் தீட்டணும். இல்லேன்னா ரீச் ஆகமுடியாது.
இத்தகைய நூற்றாண்டு விழாக்கள் ஒரு விளம்பரம் மாதிரிதான். காலத்தை வரைந்து கலையின் வழி வென்றுநின்ற கலைஞர்களின் ஒரு அறிமுகத்தையும், அவர்களது ஓவியத்தின் வீச்சுக்களையும் மக்களிடம் இத்தகைய விழாக்கள்தான் எடுத்துச்சொல்லும்''’என்று குறிப்பிட்டார்.