மிழகம், ஆன்மீகத்தில் புகழ்பெற்ற பல்வேறு திருத்தலங்களைக் கொண்டிருப்பதுபோல, அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கிவருகிறது. திருக்காட்டுப் பள்ளி அருகே பள்ளி மாணவியின் தற்கொலையை வைத்து மதரீதியான பிரச்சனையை தமிழகத்தில் உருவாக்கி, மதங்களிடையேயும், மனித மனங் களின் இடையேயும் பிளவுகளை ஏற்படுத்த பல்வேறு தீய சக்திகள் முயன்றுவரும் இன்றைய சூழலில், அதற்கெல்லாம் நாங்கள் இடம்தர மாட்டோம், சமூக நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்குவதே தமிழ்நாடு என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் விருத்தாசலம் மக்கள்.

hhh

விருத்தாசலத் தில் ஆழத்து விநாயகர், பழ மலைநாதர், விருத்த கிரீஸ்வரர், பாலாம்பிகை, விருத்தாம்பிகை, ஏனைய தெய்வங்கள் கோயில் கொண்டுள்ள பிரசித்திபெற்ற பழமலை நாதர் ஆலயத்தில் பிப்ரவரி 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கென, விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் திருப்பணி செம்மல் அகர்சந்த் தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, எளிய பக்தர்கள் முதல் செல்வந்தர்கள்வரை இந்தத் திருப்பணிக்கு திருக்கொடை பெறப்பட்டு, கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த ஆலயத்தைத் தழுவிச்செல்லும் மணிமுத்தா நதியிலிருந்து கும்பாபிஷேக நீர், ஊர்வலமாக யாக சாலைக்குக் கொண்டுவரப்பட்டு, கடந்த 3-ம் தேதி, தருமபுரம் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. அன்று மாலை 6 மணி அளவில், சிவாச்சாரியார் கள் வாசவி மடத்திலிருந்து விசேஷ பூஜைகள் முடித்து ஊர்வலமாக யாகசாலைக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருப்பணிக் கமிட்டித் தலைவர் அகர்சந்த் மற்றும் நிர்வாகிகள், அமைச்சர் சி.வி. கணேசன்., எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் முத்துராஜா, கும்பாபிஷேகத் திருப்பணிச் சிறப்புக் கமிட்டி தலைவர்களுள் ஒருவரான நக்கீரன் ஆசிரியர் மற்றும் நகர முக்கிய பிரமுகர் கள், பக்தர்கள், சிவனடியார்கள் உட்பட ஏராளமானவர்கள், நான்காம் கால யாக பூஜையில் பங்கேற்றனர்

இந்த நிலையில் பழமலைநாதர் ஆலய கும்பாபி ஷேகத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வு நடைபெற்றது. விருத்தாசலம் நகர இஸ்லாமியப் பெருமக்கள் பலரும் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர். இஸ்லாமியப் பெருமக்கள், தங்களின் ஒருமித்த பங்களிப்பாக கோயில் திருப்பணி செலவினங்களுக் காக, ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாயை கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர்சந்த்திடம் வழங்கினார்கள். அந்த நிகழ்வில், கோல்டன் கேட் முகமது, ஜெயம் ராஜா, வானவில் அன்சார் அலி, முன்னாள் அ.தி.மு.க. நகரச் செயலாளர் சோழன் சம்சுதீன் உட்பட, நகரிலுள்ள இஸ்லாமியப் பெரியவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்து மதக்கோவிலின் புனரமைப்புப் பணிக்காக இஸ்லாமியப் பெருமக்கள் நன்கொடை வழங்கிய நிகழ்வு, கோவில் வளாகத்தில் குழுமியிருந்த சிவனடியார்கள், பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் அனைவர் மத்தியிலும் ஒருவித மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. விருத்தாசலத்திலுள்ள அனைத்து மக்களும் ஜாதி, மத எல்லைகள் கடந்து, அன்பே சிவம் என்ற எண்ணத்தோடு இணைந்துள்ளனர் என்றால் மிகையில்லை.

Advertisment

kk

நமது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள், பழமலைநாதர் கோயில் திருப்பணிக்காக 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையை திருப்பணிக் கமிட்டித் தலைவர் அகர்சந்த் அவர்களிடம் ஒப்படைத்தார். விருத்தாசலம் பழமலைநாதர் கோயில் கும்பாபிஷேகம், வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலையிலிருந்து சுமந்து செல்லப்பட்ட புனிதநீரை ஐந்து கோபுரக் கலசங்கள் மீதும் ஊற்றி, பக்தர்களின் 'அரோகரா' 'ஓம் நமச்சிவாய' என்ற கோஷங்கள் விண்ணதிர, கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டர்கள் மூலம் கோபுரங்களின் மீது பூமாரி பொழிந் தனர், புனித நீரை பக்தர்கள்மீது தெளித்தனர். நகரெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் பழமலைநாதர் கோவில், 1893-ம் ஆண்டு புனரமைக்கப் பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, 1910-ம் ஆண்டிலும், 1956 ஆண்டிலும் ஆலயம் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 1983-ம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் வழி காட்டுதலோடு குடமுழுக்கு நடை பெற்றுள்ளது. இறுதியாக, 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இருபத்தி ஒன்பதாம் தேதி குடமுழுக்கு நடத்தப் பட்டது. அப்போதும் தற்போதைய குடமுழுக்குக் கமிட்டி தலைவராக உள்ள அகர்சந்த் தலைமையில் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு கோயில் பணிகள் செய்து குடமுழுக்கு நடந்துள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களிலெல்லாம் தீய சக்திகளால் மத வெறி ஊட்டப்படுவதால், மதக்கலவரங்களில் ஈடுபடுவதையும், சிறுபான்மை மக்கள்மீது வன்முறை ஏவப்படுவதையும் தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறோம். இதேவேளை, மனதால் பிணைந்துள்ள எங்களை, மதத்தால் பிரித்துவிட முடியாது என்பதை அழுத்தமாகச் சொல்லாமல் சொல்லியுள்ளனர் விருத்தாசலம் இஸ் லாமிய மக்கள். இதுதானே உண்மை யான தேசபக்தியும், ஆன்மீகமும்!

Advertisment