இம்மாதத் தொடக்கத்தில், ஈரோடு மாவட்டம் சிவகிரியருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இக்கொலைச் சம்பவத்தை வைத்து அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் பெரிய அளவில் அரசியல் செய்தனர். இதேபோன்ற சம்பவம், பல்லடம் அருகேயுள்ள செமலைகவுண்டனூரிலு நடந்துள்ளது. இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க எந்தத் தடயமும் இல்லாததால் காவல்துறைக்கு பெருஞ்சவாலாக இருந்தது.
இந்நிலையில், குற்றவாளிகளைக் கண்டுபிடித்தே தீர்வதென்ற வைராக்கியத்துடன் களமிறங்கினார் தமிழகக் காவல்துறையின் மேற்கு மண்டல தலைவரான த.செந்தில்குமார் ஐ.பி.எஸ். தேடுதல் பணியில் 12 குழுக்களில் 400க்கும் மேற்பட்ட போலீசார் இரவுபகலாக இப்பணியில் ஈடுபட்டனர்.
சிவகிரியின் சுற்றுவட்டாரத்தில் சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள ஆயிரக்கணக்கான சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்களை ஆய்வுசெய்தனர். ஐ.ஜி. செந்தில்குமார் மேற்பார்வையில், கோவை சரக ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு எஸ்.பி. சுஜாதா உட்பட நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி என மேற்கு மண்டலத்திலுள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் இப்பணியில் ஈடுபட்டனர். இறுதியில் கொலையாளிகளை சரியாக அடையாளம் கண்டு தூக்கியிருக்கிறது காவல்துறை!
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவரும் தான் இந்த கொடூர கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல், சென்னிமலை, பல்லடம், சிவகிரி எனத் தொடர்ச்சியாக நடந்த கொலை, கொள்ளையிலும் இந்த குற்றவாளிகள் மூவரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"இந்த கொலைச் சம்பவத்தில் கால் பாத ரேகையைத் தவிர எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஆனால் சி.சி.டி.வி. புட்டேஜ் எங்களுக்கு பேருதவியாக இருந்தது. தோட்டத்து வீட்டுக்கு செல்லும் பாதையான வாய்க்கால் பாதை, விளக்கேத்தி, மோளபாளையம் நால்ரோடு, முத்தூர் சாலை என எல்லா இடங்களிலும் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து, அதில் பதிவாகியுள்ள வாகனங்கள், ஆட்களைத் தொடர்ந்து ஆய்வு செய்தோம். திருப்பூர், நாமக்கல், சேலம், தாராபுரம், காங்கேயம் எனப் பல ஊர்களுக்கு அங்கு பதிவான வாகனங்கள் செல் வதையும் கண்காணித்தோம். அவற்றில் ஒரேயொரு காட்சிப் பதிவு மட்டுமே எங்களுக்கு க்ளூவாகக் கிடைத்தது. அதில் பதிவான ஒரேயொரு லைட் வெளிச்சம் தான் எங்களுக்கு தடயம்.
சம்பவம் நடந்த தோட்டத்து வீட்டருகே 500 மீட்டர் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்து சி.சி.டி.வி. காட்சிகளை எடுத்ததில், கொலை நடந்த 28ஆம் தேதி இரவு ஒரு பஜாஜ் பைக்கின் லைட் வெளிச்சம் பாஸ் ஆகிறது. திரும்பவும் நள்ளிரவு அந்த பைக் லைட் வெளிச்சம் செல்கிறது. சங்கிலி போல் அதைப் பின்தொடர்ந்தோம்.
அரச்சலூர் பகுதிக் காட்சிகளில் அது பைக் என்பது தெரியவந்தது. அதில் மூவர் பயணிப் பதையும் உறுதிப்படுத்தினோம். அடுத்தடுத்து கண்காணித்ததில், சென்னிமலை அருகே தலவமலை பகுதிவரை சென்று அந்த பைக் காணாமல் போகிறது.
அப்பகுதியைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்த மக்களையும் ஆய்வு செய்தோம். அந்தப் பகுதிகளில் பல வருடங்களாக சிறு, பெரிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்தவர்கள், போலீஸ் பதிவேட்டிலுள்ள குற்றவாளிகள் என அனைத்துப் பட்டியல்களையும் ஆய்வுசெய்த தில் தான் முக்கிய குற்றவாளியான ஆட்சியப்பன் அங்கு வசிப்பது தெரிந்தது. இரண்டு நாட் களாக ஆட்சியப்பனை தீவிரமாகக் கண் காணித்தோம்.
சம்பந்தப்பட்ட பஜாஜ் பைக்கை ஆட்சியப்பன் பயன்படுத்தியதை உறுதி செய்தோம். அதன்பிறகு எங்களது விசாரணையில் அதே பகுதியிலிருந்த மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய குற்றவாளிகளையும் பிடித்து விசாரித்ததில் கொலை, கொள்ளையை ஒப்புக்கொண்டனர். பல்லடத்தில் நடந்த மூவர் கொலையையும் இவர்கள்தான் செய்துள்ளார்கள்.
தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதாகக் கூறிக்கொண்டு முதியவர்களை நோட்ட மிடுவார்கள். இரவில் தோட்டத்து வீடுகளுக்குள் புகுந்து, கழிவறைப் பகுதியில் மறைந்து கொள்வார்கள். இரவில் சிறுநீர் கழிக்க வீட்டைத் திறந்துவரும்போது தாக்கி கொள்ளை யடிப்பார்கள். சிவகிரி வீட்டில், 10 மணிக்கு நுழைந்தவர்கள், 11 மணிக்கு மின்சாரம் கட்டானபோது பாக்கியம் அம்மாள் வெளியே வர, அவரை வாசலிலேயே தாக்கிவிட்டு, உள்ளேயிருந்த பெரியவர் ராமசாமியையும் தாக்கியுள்ளனர். மண்வெட்டியின் மரக் கைப்பிடி தான் இவர்களின் ஆயுதம். தலையில் மாறிமாறி அடித்தே அனைத்துக் கொலைகளையும் செய்துள்ளனர்.
இவர்கள் கொள்ளையடித்த நகைகளை வாங்கி, அதை உருக்கிக்கொடுத்த சென்னி மலைபாளையம் நகை வியாபாரி ஞான சேகரனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். இந்த குற்றவாளிகளின் அனைத்து கிரிமினல் சம்பவங்களையும் விரிவாக விசாரிக்கவுள்ளோம். இந்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்பது உறுதி'' எனக்கூறினார் ஐ.ஜி. செந்தில்குமார்.
சிவகிரி கொலை, கொள்ளை சம்பவம் நடந்த பதினைந்து நாட்களில் கொடூர குற்றவாளிகளைக் கண்டறிந்த காவல்துறையின் குழுவுக்கு தலைமையேற்ற ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு எஸ்.பி. சுஜாதா, ஏ.டி.எஸ்.பி.க்கள் விவேகானந்தன், கோகுல கிருஷ்ணன், வேலுமணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை 20-ஆம் தேதி சென்னைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.