அமித்ஷா தமிழகம் வருகிறார். இந்தமுறை சாதாரணமாக அவரது விசிட்டை திட்டமிடாமல் நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறார். வழக்கமாகத் தங்கும் ஹோட்டல்களுக்குப் பதிலாக பல ரகசிய சந்திப்புகளை நடத்துவதற்கு வசதியாக ஈ.சி.ஆர். பக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலை அமித்ஷா தேர்ந்தெடுத்திருக்கிறார். பதினைந்தாம் தேதி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அமித்ஷா, தனது விசிட்டை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். தூத்துக்குடி, கோவை, சென்னை என ஒரு நகருக்கு மூன்று நாட்கள் என அமித்ஷாவின் விசிட் விரிகிறது. கோவையில் தொழிலதிபர்களை சந்திக்கிறார். தூத்துக்குடியில் கட்சி விழாக்களில் பங்கேற்கிறார். இதற்கிடையே அங்கங்கே அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக் கிறார். அவற்றில் பல சந்திப்புகள் ரகசியமாகவே நடக்கும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை கிண்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கி யிருந்தபோது சீமானை சந்தித்தார். அந்த சந்திப்பு மிகவும் ரகசியமான சந்திப்பு எனச் சொல்லப்பட்டது. சீமானும் நிர்மலாவும் அதை ஒத்துக்கொள்ளவில்லை.
அமித்ஷா தமிழகம் வருவதற்கு முன்தயாரிப்பாக ஓ.பி.எஸ்.ஸை டெல்லிக்கு வரவைத்து சந்தித்தார். அதுவரை தனிக்கட்சி எனச்சொல்லி வந்த ஓ.பி.எஸ்., அமித்ஷா சந்திப்புக்குப் பிறகு ‘"நான் தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை'’ என அறிவித்துவிட்டார். அவர் அ.தி.மு.க.வில் சேருவார் எனச் செய்திகள் வரும் அளவிற்கு அமித்ஷாவின் சந்திப்பு அமைந்தது. ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் சேர்வது பற்றி எடப்பாடி எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. அதே நேரத்தில் டி.டி.வி. தினகரன் விஜய் கூட்டணியில் சேரப்போவதாக தொடர்ந்து பேசிக்கொண்டி ருக்கிறார். டி.டி.வி.க்கு இருக்கும் வருத்தமெல் லாம் அவருக்கு அமித்ஷாவோ, பிரதமரோ மதிப்புக் கொடுப்பதில்லை என்பதுதான். லண்டன் ஹோட்டல் வழக்கு, இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு என இரண்டு முக்கியமான வழக்குகளில் குற்றவாளியான தினகரன், பா.ஜ.க.வை மீறி எதுவும் செய்துவிட முடியாது. ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகிய இரண்டு பேரும் எடப்பாடிக்கு எதிராக துள்ளிக் குதிப்பதன் உண்மைக் காரணம், எடப்பாடியின் கோரிக்கையை ஏற்று, பா.ஜ.க. அ.மலையின் மாநிலத் தலைவர் பதவியை பிடுங்கியதுதான் என, புரிந்து கொண்ட பா.ஜ.க., அ.மலையின் பொம்ம லாட்ட பொம்மைகளாக இருந்த ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.யை வழிக்குக் கொண்டுவர அ.மலையை கூப்பிட்டு கடுமையாக எச்சரித்தது. அமித்ஷாவே நேரடியாக அ.மலையை கடுமையாக எச்சரித்தார். டி.டி.வி.யிடம் போனில் பேசிய அமித்ஷா, அவருக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் விரைவில் நேரில் சந்திப்பதாக வாக்குறுதி அளித்தார். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க பா.ஜ.க. முயல்வதில் தவறேதும் இல்லையென அமித்ஷா வருகைக்கு முன்பே அறிக்கை கொடுத்து அமித்ஷாவை சந்திக்கக் காத்திருக்கிறார் டி.டி.வி.. அ.ம.மு.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்து அவருக்கு தொகுதிகள் வாங்கித் தருவதாக அமித்ஷா உறுதியளித்திருக்கிறார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.
ஆனால் அமித்ஷா ஈ.சி.ஆரில் ஒரு ஹோட்டலை தேர்ந்தெடுத்து தங்குவதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இருக்கிறது. அது வேறொன்றுமில்லை.. சீமானை, நிர்மலா சீதாராமன் ரகசியமாக சந்தித்தது போல், அமித்ஷா நடிகர் விஜய்யை ரகசியமாக சந்திக்கவிருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பு வைப்பதுபோல் இன்று தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக ஆக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் பிரச்சினையைப் பற்றி விஜய் வாய் திறக்கவில்லை. அவரது கட்சிக்காரர்கள் யாரும் அந்தப் பிரச்சினை பற்றி பேசவில்லை. இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் திருவிழாவில் போய் அன்று குல்லா அணிந்து நோன்புக்கஞ்சி குடித்த விஜய், இன்று தமிழகத்தில் இஸ்லாமியர்கள் தங்களது உரிமைப் பிரச்சினையாகக் கருதும் திருப்பரங் குன்ற தர்கா விவகாரத்தில் வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் அமித்ஷாதான்.
காங்கிரஸ் தலைவர் ப்ரவீன் சக்ரவர்த்தியை விஜய் சந்தித்தார் என்பதை அறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் விஜய்யிடம் நேரடியாகப் பேசியது. விஜய் நேரடியாக உபயோகிக்கும் ரகசிய செல்போனில் பேசியவர்கள், விஜய்க்கு இரண்டு எச்சரிக்கைகளை விடுத்தனர். ஒன்று தமிழக அரசு பதிந்துள்ள FIR-ன் அடிப்படை யில் ஆதவ் அர்ஜுனா போட்ட ‘ஜென் சி’ (GEN Z) ட்வீட்டின் அடிப்படையில் தேசவிரோத தீவிரவாத செயல்களை விசாரிக்கும் தேசியப் புலனாய்வு முகமை மூலம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படுவார். நடிகர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில் குற்றவாளி ஆக்கப்படுவார். இன்னும் பல பொருளாதார வழக்குகள் விஜய் மீது பாயும். விஜய் மட்டுமல்ல, விஜய்யின் உறவினர்களும் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதனால்தான் திருப்பரங் குன்ற விவகாரத்தில் மௌனியானார் நடிகர் விஜய் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். இதுதவிர, தி.மு.க. அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் மூலம் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் + அவர்களின் குடும்பத்தினர், மீதும் அமலாக்கத்துறையை ஏவுவது எனப் பல ஏவுகணைகளுடன் அமித்ஷா தமிழகம் வந்துகொண்டிருக்கிறார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/vijay-cbi-2025-12-08-16-28-53.jpg)