ரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை, அக்டோபர் 13 முதல் சி.பி.ஐ. கையிலெடுத்துள்ளது. 

Advertisment

இந்நிலையில், எஸ்.ஐ.டி. குழுவினர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் கரூர் மேற்கு மா.செ. மதியழகன் (ஏ-1), பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் (ஏ-2), துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் (ஏ-3) ஆகியோர் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து அதன் அறிக்கையை கடந்த 24ஆம் தேதி மாலை, கரூர் ஜே.எம். கோர்ட் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் தாக்கல் செய்தார் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் மனோகரன். இதன்படி, புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர், 28ஆம் தேதி காலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

இது, த.வெ.க. நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சி.பி.ஐ.யின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிய, நமக்கு நெருக்கமான டெல்லி சோர்ஸிடம் பேசினோம். 

"தமிழ்நாடு அரசு நியமித்த ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான எஸ்.ஐ.டி. குழுவினரின் விசாரணையும், அறிக்கையும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் மட்டுமே, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தபடியே மதியழகன், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இது முதற்கட்டம் தான். அடுத்து சார்ஜ் ஷீட் போடுவதற்குமுன் நடக்கவுள்ள விரிவான விசாரணைக்காக அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட விஜய்யின் பிரச்சாரப் பேருந்து பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, அந்தரங்க ஆலோசகர் ஜெகதீஸ் மற்றும் ஆதவ் அர்ஜுனா உட்பட த.வெ.க.வின் இதர முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன''’எனக் கூறியது டெல்லி சோர்ஸ். 

Advertisment

அடுத்து, த.வெ.க.வின் அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கிவரும் சிலரிடம் பேசினோம். “"கரூர் வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஆதவ் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார் விஜய். அதேபோல, அரசியல் விவகாரங் களில் புஸ்ஸி ஆனந்த் வெறும் புஸ்வாணம் தான் என்பதையும் லேட்டாகவே உணர்ந்துள்ளார். 

இப்போதைக்கு அவரது நம்பிக்கை அருண்ராஜ் மட்டும்தான். ஆனால், அந்த அருண் ராஜும் கொள்கை எதிரியான பா.ஜ.க.வின் கைப் பிள்ளையாக இருப்பாரோ எனச் சந்தேகப்படும் விஜய்யின் தந்தை சந்திரசேகர், அது பற்றியும் எச்சரித்து வருவதால் கடும் குழப்பத்தில் இருக்கும் விஜய், தற்போது சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் கமிசனில் விண்ணப்பித்திருந்தாலும், “எனக்கு கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம்” என ரஜினி பாணி முடிவுக்கு வருவதற்கும்கூட தயாராக இருப்பதாகவே தெரிகிறது. 

எது எப்படியோ “ஆகா, சி.பி.ஐ. வந்தாச்சு! கவலையெல்லாம் தீர்ந்தாச்சு!” எனக் குதூகலித்த நிர்வாகிகள், “அய்யோ, சி.பி.ஐ.யும் நம்மளை குறி வச்சுடுச்சு!” என மிரளுவது தான் தற்போதைய த.வெ.க. நிலவரமாக உள்ளது!    

இதற்கிடையே கரூர் வந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்திக்க இயலாத நிலையில் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. நிர்வாகிகள், நேரிலும், செல்போனிலும் தொடர்புகொண்டு, சென்னை செல்ல விருப்பமா? எனவும், எத்தனை பேர் வருகின்றனர் என்ற விபரங்களையும் கேட்டறிந்தனர்.

இதையடுத்து அக்டோபர் 27ஆம் தேதி, சென்னை மகாபலிபுரத்திலுள்ள போர் பாய்ண்ட் என்ற ரிசார்ட்டில் விஜய், அவர்களை சந்திக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அழைத்துச் செல்வதற்காக 5 பேருந்துகள்வரை தயார் செய்யப்பட்டது. இவர்களில் சில குடும்பத்தினர் 30ஆம் நாள் வழிபாடு செய்வதாகக் கூறியிருந்த தால், எத்தனை குடும்பத்தினர் வருவார்களென் பது சந்தேகத்தோடிருந்தது. அவர்களை, சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்வது சர்ச்சையாகும் என்பதால் பேருந்துகளை நகருக்கு வெளியி லிருந்து புறப்படும் வகையில் ரகசியமாக ஏற்பாடு செய்துவிட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களை கார் மற்றும் மினி வேன் மூலம் பேருந்து இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஏமூர்புதூர் பகுதியில் 4 குடும் பங்களைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பகுதிக்கு அக்டோபர் 26ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு கார், மினி வேனுடன் வந்த த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இவற்றை புகைப்படம் எடுத்த செய்தியாளர்களிடம், "படங்கள் எடுக்கவேண்டாம், இதனால் பிரச்சினை ஏற்படும், புறப்படுங்கள்'' என எச்சரித்ததையடுத்து செய்தியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். மொத்தமுள்ள 38 குடும்பங்களில், 35 குடும்பத்தினர் மட்டும் மகாபலிபுரத்துக்கு கிளம்பி யுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கரூர் வெண்ணெய்மலையிலிருந்து பேருந்துகள் நண்பகல் புறப்பட்டு, அன்றிரவே சென்னை மகாபலிபுரம் விடுதிக்கு சென்றடைந்தன.

நடிகர் விஜய், அவரது அப்பாவையே மதிக்காமல், ஒதுக்கிவைத்து செயல்படுவதாகவும், அப்படிப்பட்டவரை நம்பி ஆறுதல்தேடிச் செல்கிறார்களே என்று சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்த சூழலில், விஜய் தனது தந்தையையும் மகாபலிபுரம் ரிசார்ட்டுக்கு வரவழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.