பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் தொடர்பாக 24.2.2016 அன்று பொள்ளாச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் கல்லூரியின் பெயரை பொள்ளாச்சி போலீசார் வெளியிட்டு பிற பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க விடாமல் தடுக்கின்றனர் என்ற விமர்சனம் எழுந்தது. மேலும், ""அரசியல் வாதிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் மாறி மாறி அறிவித்து வந்ததால் இந்த வழக்கில் பொள்ளாச்சி போலீசாரின் செயல்பாடுகள் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது.

உண்மையான குற்றவாளிகள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றும், அரசியல் லாபத்திற் காக ஆளுங்கட்சி தலையீட்டில் இந்த வழக்கை முடிக்க நினைப்பதும் பொள்ளாச்சி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

c

c

Advertisment

இதனையடுத்து 12-3-2019 அன்று தமிழக டி.ஜி.பி. கடித எண் த.ஈ.சர்.: 71327-1 படி தனது துறை ரீதியான உத்தரவின் மூலம் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்கு களையும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டுமென்று ஒரு உத்தரவு பிறப்பிக்கிறார். ஆனால் அன்றைய தினமே இந்த இரு வழக்குகளிலும் இணையதளம், வீடியோக்கள், பேஸ்புக், வாட்ஸ்அப் என சம்பந்தப்பட்டிருப்பதால் டெக்னிக்கல் அறிவுடன் கூடிய விசாரணை தேவைப்படுவதால் இந்த 2 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பதை விட சி.பி.ஐ. விசாரிப்பதே நலன் பயக்கும் என்று தமிழக உள்துறைக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளார். அவரது கடிதத்தை மேற்கோள் காட்டி மறுதினமே 13-3-2019 அன்று தமிழக உள்துறை துரிதமாக செயல்பட்டு அரசாணை எண்: 169 மூலம் பொள்ளாச்சி வழக்குகள் இரண்டையும் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று ஆணை பிறப்பித்தது.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இளமுகில் என்பவர் பொள் ளாச்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு கோரிக் கைகளுடன் பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அடங்கிய அமர்வு 15-3-2019 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது.

அதில் தமிழக அரசின் உள்துறை பொள் ளாச்சி வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து பிறப்பித்த அரசாணையில் (எண்: 169) பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி போலீசாருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அந்தப் பெண்ணிற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவுடன் அரசாணையை ரத்து செய்தனர். பொள்ளாச்சி வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்வது தொடர் பாக புதிய அரசாணை பிறப்பிக்கவும் தங்களது உத்தரவில் குறிப்பிடப்பட்டனர். அந்த உத்தரவில், பொள்ளாச்சி வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. தொடர்ந்து விசாரிக்கலாம் என்று எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஓரிரு நாளில் நக்கீரன் ஆசிரியர் மீது துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நக்கீரன் ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆஜரான அரசு வழக் கறிஞர், மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ள தகவலை கூறி புதிய அர சாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் அதற் கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார். இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், ""தமிழக அரசு பொள்ளாச்சி தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்வதில் உறுதியாக இருப்பதால் நக்கீரன் ஆசிரியர் மீதான வழக்கையும் சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யலாம்'' எனக் கூறி 19-3-2019 அன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு வந்த மறுநாளிலிருந்தே சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொள்ளாச்சி வழக்குகளை அவசர அவசரமாக விசாரிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார், தி.மு.க.வை சேர்ந்த மணிமாறன் மற்றும் நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலரை தொடர்ச்சியாக விசா ரணைக்கு அழைத்து தகவல்களையும், ஆவணங் களையும் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் நாம் விசாரித்தபோது, ""13-3-2019-ல் தமிழக அரசு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து அரசாணை எண்: 169 கொண்டு வந்த போதே 12-3-2019 டி.ஜி.பி. கடித எண் : த.ஈ.சர்.: 71327-1 படி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்த உத்தரவு காலாவதியாகிவிட்டது. அதன்பிறகு 15-3-2019-ல் உயர்நீதிமன்றம் தலையிட்டு அரசாணை 169ஐ ரத்து செய்கிறது. அதன்பிறகும் காலாவதியான டி.ஜி.பி. உத்தரவை அடிப்படையாக வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருவது முழுமையான சட்ட விதிமீறல் ஆகும். ஒருவேளை அரசு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யவில்லை என்று புதிய அரசாணை பிறப்பிக்காமல் இருந்தால் கூட இந்த வழக்குகளை முதலில் பதிவு செய்த பொள்ளாச்சி போலீசார்தான் விசாரிக்க வேண்டும். இடையில் வந்து காலாவதியான ஆணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிப்பதில் எந்தவிதத்திலும் நியாயமில்லை'' என்று கருத்து கூறினார்.

உயர்நீதிமன்ற உத்தரவில் கூறியிருந்தபடி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க வேண்டிய ரூ.25 லட்சத்தை இதுவரை அரசு வழங்கவில்லை. புதிய அரசாணையும் பிறப்பிக்கவில்லை. ஆனால், அரசாணை ரத்து செய்ததை மட்டும் அரசு எல்லா நீதிமன்றங்களிலும் கூறி வருவது வியப்பளிக்கிறது. 12-3-2019 அன்று டி.ஜி.பி. பரிந்துரை செய்த மறு நாளே, அரசாணை பிறப்பித்த தமிழக உள்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 20 நாட்கள் கடந்தபின்பும் புதிய அரசாணை பிறப்பிக்காமல் இருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைத்து, அரசின் மோசடிகளை அம்பலப்படுத்தும் நக்கீரனை பழிவாங்கத் துடித்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது அரசு.

-குமார்