சாத்தான்குளம் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதிகளாக சித்திரவதைக்குள்ளான தந்தை-மகன் இருவரும், அடுத்தடுத்து உடல்நலம் குன்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழக்க, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 176(1)(ஆ)(ண்) பிரிவுகளில் இரு வழக்குகளாக பதிவு செய்தது காவல்துறை. எனினும் மக்கள் போராட்டத்தால் வழக்கு சிபிசிஐடிப் போலீசாருக்கு மாற்றப்பட்டு தூத்துக்குடி சிபிசிஐடி குற்றப்பிரிவினரால் குற்ற எண் 01/2020 மற்றும் 02/2020ன் படி இரு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு 342, 302, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இப்பிரிவுகள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருமா.? என்பதே போலீசின் கொடூர சித்திரவதைகளை அறிந்து அதிர்ச்சியாகியிருக்கும். பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

cbcid

""சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது சட்டத்திற்கு உட்பட்டு ஏற்புடையதாக கருதமுடியவில்லை. இந்த வழக்கினைப் பொறுத்தவரை குற்றபிரிவு 302ல் இருந்து 304/2க்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான், மேலும் பலர் கைது செய்யப்படவும், கடும் தண்டனை கிடைக்கவும் வழிவகுக்கும். சி.பி. சி.ஐ.டி.யிடமிருந்து சிபிஐ இந்த வழக்கை பெற்று குற்றப்பிரிவில் மாற்றம் செய்யும் என்றே நம்புகிறேன். அதில் திருத்தம் செய்யும் என்றும் எதிர்பார்க்கிறேன். மேலும் இதுபோன்ற வழக்குகளில் கால தாமதம் ஏற்படாமல் துரிதமாக இந்த வழக்கை விசாரணை செய்து குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் நீதி விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற துன்பியல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க முடியும் என்பது என்னை போன்றோரின் கருத்து'' என்கிறார் நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் வழக்கறிஞர் கண்ணனோ, ""சாத்தான்குளம் வழக்கினைப் பொறுத்தவரை போலீஸ் கஸ்டடியில்தான் சித்திரவதை நடந்திருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. அதாவது காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட காவல் அடைப்பு கைதிகள் போலீஸோட விசாரணையில் இருக்கும்போது இறந்திருப்பதால் அனைத்து சந்தே கங்களும் போலீஸை நோக்கியே செல்கின்றது. தலைமைக்காவலர் முருகன் கொடுத்த புகாரும் பொய்யாகின்றது.. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதியின் விசாரணையின் முன் ஆஜராகி 164 ஈதடஈ படி வாக்குமூலம் கொடுத்திருப்பினும், தலைமைக்காவலர் ரேவதியின் சாட்சியம் தவிர அனைவரின் சாட்சியம் கேள்வி சாட்சியங்களே. குறுக்கு விசாரணையின் போது இது எந்தள விற்கு தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை.

Advertisment

vv

என்னைப் பொறுத்தவரை மேலதிகாரி கூறியதால்தான் மருத்துவச்சான்றிதழ் கொடுத்தேன் எனக் கூறிய மருத்துவர் விண்ணி லாவின் வாக்குமூலம் முக்கியமா னது. அதனை முதன்மைப்படுத்தாமல், இந்த வழக்கு தாக்கு பிடிக்குமா? என்பது சந்தேகமே? ரேவதியின் ஒற்றை சாட்சியம் மட்டும் இந்த வழக்கிற்கு ஜீவனாக இருப்பதால், 342, 302, 201 பிரிவுகளுடன் 109 மற்றும் 120 பி பிரிவுகளை சேர்த்தால் மட்டுமே தண்டணை நிச்சயம்'' என்கிறார் அவர்.

cc

Advertisment

இது இப்படியிருக்க, சி.பி. சி.ஐ.டி.யின் எப்.ஐ.ஆர். கண்டு அதிர்ச்சியுற்ற கனிமொழி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதியினை தொடர்பு கொண்டு கள ஆய்வினை செய்து சித்ரவதைக் கெதிரான புதிய வழக்கினை பதிவுசெய்ய உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை மரணங்கள் மற்றும் காவல்துறை சித்ரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பெனிக்ஸின் நண்பர்களும் ஆஜராகி சாட்சியமளித்துள்ளனர். அதேநேரத்தில், தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி மத்திய அரசு உத்தரவினால் சி.பி.ஐ. கூடுதல் எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான டீம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, கோவில்பட்டி சப்ஜெயில் கண்காணிப்பாளர் தந்த புகாரின் அடிப்படையில், ஜெயராஜ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் போடப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியுள்ளது.

தமிழக போலீசிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, அடுத்தடுத்த கட்ட விசாரணையை சி.பி.ஐ எப்படி நடத்தப்போகிறது என்பதை தமிழ்நாடே எதிர்பார்க்கிறது. யார் விசாரித்தாலும், குற்றவாளிப் போலீசார் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் பென்னிக்ஸின் சகோதரி. அதையேதான் மக்களும் சொல்கிறார்கள். டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா என்ற போலீஸ் அதிகாரி மர்ம மரணம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை ஏமாற்றமே தந்தது. இம்முறையாவது, நீதி கிடைக்குமா?

-நாகேந்திரன்

_____________

கொரோனாவில் இன்னொரு அமைச்சர்!

cc

உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணியும் பாதிக்கப்பட்டிருப்பது அமைச்சரவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருடன் நிகழ்வுகளில் பங்கேற்ற மின்துறை உயரதிகாரிகள் பலரும் அச்சத்தில் உள்ளனர். சமூகப் பரவல் இல்லை என எடப்பாடி திரும்பத் திரும்பச் சொல்லி வரும் நிலையில், அவரைச் சுற்றி கொரோனா பரவிக்கொண்டிருப்பது கோட்டை வட்டாரத்தை கலங்கடித்து வருகிறது.