காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. வழக்கத்திற்கு மாறாக, கர்நாடகம் அமைதி காக்கிறது.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக பேசி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஒரு படி மேலே போய் கர்நாடகத்திற்கு ஆதரவாகவே பேசி வருகிறார். மற்றொரு அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனின் குரலை மத்திய அரசை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் குரலாக மதிப்பதேயில்லை. அ.தி.மு.க.-தி.மு.க. எம்.பி.க்கள் இணைந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் பாராளுமன்றத்தின் செயல்பாட்டையே அமளி செய்து அடக்கினார்கள். இதைத் தவிர தமிழகத்திற்கு ஆதரவாக டெல்லியில் எதுவும் நடக்கவில்லை. பாராளுமன்ற துணை சபாநாயகரான தம்பித்துரை மட்டும் தினமும் மீடியாக்களில் பேசுவதோடு சரி.

Advertisment

Karnataka-protest

அதேநேரத்தில் கர்நாடகத்திற்கு டெல்லியில் பேச நிறைய பேர் இருக்கிறார்கள். கர்நாடகா சார்பில் மோடியின் அமைச்சரவையில் இரண்டு மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அனந்த்குமார், சதானந்த கவுடா ஆகிய இருவரும் அமைச்சரவையில் இருந்தே அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மக்களவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக அரசியல் பிரமுகர். இதுதவிர வருங்கால பா.ஜ.க. முதல்வர் என கூறப்படும் எடியூரப்பாவும் தற்போது எம்.பி.யாக இருக்கிறார்.

இதில் அனந்த்குமார் மிகவும் செல்வாக்கு பெற்றவர். அவர் மோடியிடம் நேரடியாக பேசக்கூடியவர். அவர்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என அழுத்தத்தை தருகிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

காவிரி விவகாரத்தில் டெல்லியில் லைம்லைட்டுக்கு வருபவர் முன்னாள் பாரத பிரதமரான தேவகவுடா. ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வந்தது. அப்பொழுது அதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர் தேவகவுடா. தேவகவுடாவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. காவிரி பாயும் கர்நாடக பகுதிகளான மைசூர் மற்றும் மாண்டியாவில் இன்றளவிலும் பலம் வாய்ந்த கட்சியாக திகழ்கிறது தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் முன்பு காவிரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது தமிழக பதிவெண் கொண்ட லாரிகளை கொளுத்தினார்கள். முகநூலில் தமிழகத்திற்கு ஆதரவாக பதிவிட்ட தமிழ் இளைஞன் அசோக் என்பவரை பெங்களூருவில் கடுமையாக தாக்கினார்கள். இன்றும் கர்நாடகா முழுவதும் தமிழகத்திற்கு எதிராக செயல்படும் வேலையை தேவகவுடா செய்து வருகிறார். இருபத்துநான்கு மணி நேர அரசியல்வாதி என பெயரெடுத்துள்ள தேவகவுடாவின் அசைவுகள், காவிரி விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.

Karnataka-protestதேவகவுடாவுடன் இணைந்து காவிரி பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுபவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் "கன்னட ரக்ஷவேதிகே' என்கிற இன்னொரு கன்னட அமைப்பும் செயல்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளும் மேலும்பத்து அமைப்புகளும் இணைந்து தமிழகத்தில் தி.மு.க. முழு அடைப்பு நடத்திய ஐந்தாம் தேதி கர்நாடகாவில் தமிழக-கர்நாடக எல்லை அடைப்பு போராட்டம் நடத்தின. மொத்தம் 20 பேர் கூட அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து ஒரு சிறிய லாரி கூட கர்நாடகத்திற்குள் செல்லவில்லை. கர்நாடகத்திற்குள் இருந்த தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களும் வெளியே வராமல் அங்கங்கே பதுங்கிக் கொண்டன. இதுதான் கர்நாடகத்தில் தமிழகத்திற்கு எதிராக தலைவிரித்தாடும் அரசியல் என்கிறார்கள்.

""இன்னமும் காவிரி பாயும் கர்நாடக பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒருவிதமான பதட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்கிற விஷயத்தை ஒருவித பயத்தை ஏற்படுத்தும் வகையில் தேவகவுடா கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். அந்த மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியும் மறைமுகமாக தேவகவுடா கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது. ஆக மொத்தத்தில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக செய்யும் பிரச்சாரம் தேவகவுடாவின் கட்சிக்கும் காங்கிரசுக்கும் சாதகமாக உள்ளது.

கர்நாடகத்தின் எதிர்ப்பை மீறி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால் கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்வார். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வீரராக காங்கிரஸ் ஆட்சியை அமைப்பார் என்கிற பிரச்சாரம் பெங்களூரு முதல் டெல்லி வரை பரவிக் கிடக்கிறது. இது பா.ஜ.க.வை மேலும் பீதியடைய வைத்துள்ளது'' என்கிறார்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.

modiஇதுகுறித்து கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளரான இம்ரான் குரேஷி, ""காவிரிக்காக சித்தராமையா ராஜினாமா செய்வார் என்பது பொய். காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகத்துக்கு எதிரான விஷயம் என்பது, கர்நாடகத்தில் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் சித்தாந்தம். அதனால் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிர்ப்பு என்பது கர்நாடகாவில் இருக்கிறது. ஆனால் உச்சநீதிமன்றம் காவிரியை சட்டப்படி பிரித்து பெங்களூருக்கு குடிநீர், கர்நாடகத்திற்கு அதிக அளவு தண்ணீர் என தீர்ப்பளித்தபோதே சட்டப்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்கலாம் என்கிற மனநிலைக்கு கர்நாடக அரசியல்வாதிகள் மனதளவில் வந்து விட்டார்கள். அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்களுக்கு தயக்கம் இருக்கிறது'' என்கிறார்.

"வருகிற 17-ம் தேதி கர்நாடகத்தில் முழு அளவிலான பந்த்திற்கு இரண்டு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அந்த முழு அடைப்புக்கு கர்நாடகாவின் எந்த முக்கிய அரசியல் கட்சிகளும் இதுவரை ஆதரவளிக்கவில்லை' என சுட்டிக்காட்டுகிறார் ஸ்வர்ண நியூஸ் என்கிற செய்தி சேனலின் ஆசிரியரான அஜித். ஆனாலும் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டுக்கு எதிராக அரசியல் செய்கின்றன.