சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மாணவ, மாணவிகளிடம் சாதிய ரீதியாகப் பேசியது, பிஹெச்.டி., மாணவர்களை வீட்டு வேலைக் காரர்களாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகார்களின்பேரில் பேராசிரியர் ஒருவரிடம் மூவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisment

சேலம் பெரியார் பல்கலையில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பெரியசாமி. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இவர், மாணவ, மாணவிகளிடம் சாதிவெறியுடன் அவதூறாகப் பேசியதாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் புகார்கள் கிளம்பின.

இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக உயர் கல்வித்துறை, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை முன்னாள் டீன் மணியன் தலைமையில், பெரியார் பல்கலை பயோ கெமிஸ்ட்ரி துறை உதவிப் பேராசிரியர் கிருஷ்ணவேணி, சிண்டிகேட் குழு உறுப்பினர் வெங்கடாசலம் ஆகிய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்தது. 

இந்தக் குழு, பேராசிரியர் பெரியசாமி மீது புகாரளித்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் 9 பேர், 4 ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் 2 பேர் உள்பட 17 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது. 

Advertisment

இதையடுத்து ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய இரு நாள்களாக பல்கலையில் உள்ள கூடுதல் சிண்டிகேட் கூட்ட அரங்கில், ஒவ்வொருவரிடமும் மூவர் குழுவினர் விசாரணை நடத்தினர். மொத்தம் 17 மணி நேரம் விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட நபர்களின் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக பெரியார் பல்கலை. வட்டாரத்தில் விசாரித்ததில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளி யாகின... 

''பேராசிரியர் பெரியசாமி, முதன்முதலில் பெரியார் பல்கலை.யில் உதவிப் பேரா சிரியராக பணியில் சேரும்போது சமர்ப்பித்த அனுபவச் சான்றிதழ்கள் போலியானவை. அவர் பிஹெச்.டி., படிப்பை முழுநேரமாகப் படித்ததாக கல்விச் சான்றிதழ் அளித்துள்ளார். அவர் ஆராய்ச்சிப்படிப்பு படித்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், ஒரு கோயிலில் ஓதுவாராகவும், ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியதாக அனுபவச் சான்றிதழ்கள் சமர்ப்பித்து இருந்தார். 

Advertisment

ஒரே நபர், "தசாவதாரம்' கமல் போல ஒரே நேரத்தில் எப்படி ஓதுவார், விரிவுரையாளர், ஆராய்ச்சி மாணவர் எனப் பல "கெட்அப்' போட முடியும்? இதுகுறித்து ஆதாரப்பூர்வமாக புகாரளித்தும் முந்தைய துணைவேந்தர்கள் ஜெகநாதன், குழந்தைவேல் ஆகியோர் சாதிப்பாசம் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

பேராசிரியர் பெரியசாமியிடம் பிஹெச்.டி., ஆய்வுப் படிப்பிற்காக சேர்ந்த வர்களில் 19 பேர், இவருடைய தொல்லை மற்றும் சாதிப்பாகுபாடு காரணமாக ஆராய்ச்சிப் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே ஓடிவிட்டனர். இவர்களில் 7 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிஹெச்.டி. மாணவர்களை, தன்னுடைய இரு மகன்களையும் பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்று விடும் டிரைவராகவும், தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சவும், வேலைக்காரர்களாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். 

கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் ஒரு மாணவியிடம், "உன் லட்சணம் சரியில்ல. அதனால்தான் புருஷன் உன்னை விட்டுட்டு ஓடிப்போயிட்டான். நீ என்னத்த படிச்சிக் கிழிக்கப்போற?' என்று பாலியல் ரீதியாக அருவருப்பாக பேசியுள்ளார்'' என்கிறார்கள் பல்கலை. பேராசிரியர்கள்.  

ஆசிரியரல்லா பணியாளர்களோ, ''பெரியசாமியின் மனைவி கவிதாவுக்கு, இதே பல்கலையில் தன்னுடைய சாதி, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இனச்சுழற்சி விதிகளை மீறி வேலை வாங்கிக் கொடுத்த புகார் குறித்து துணைவேந்தர்கள் விசாரிக்கவே இல்லை. பெரியசாமி, வருமானத்தை மீறி கோடிக்கணக்கில் நிலபுலன்கள், வீடுகள் என 60 வகையான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது குறித்து விஜிலன்ஸ் போலீசாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். நீண்ட காலமாக தமிழ்த்துறைத் தலைவராக இருந்துவந்த பெரியசாமியை முதல்கட்டமாக அப்பொறுப்பிலிருந்து கடந்த ஜூன் மாதம் தூக்கியடித்துள்ளனர். பெரியசாமி, ஒரு செமஸ்டரில் மொத்தமே 4 மணி நேரம் தான் வகுப்பு நடத்தியிருக்கிறார். பாடம் நடத்தாமலேயே மாதந்தோறும் சம்பளம் வாங்கி வந்துள்ளார்'' என்கிறார்கள். 

மூவர் குழுவினர் விசாரணைக்கு வருவதையறிந்து திடீர் விடுப்பில் சென்று விட்டார் பெரியசாமி. 

"தலைக்கு மேல் கத்தி தொங்குவதை அறிந்த பேராசிரியர் பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி, கொ.ம.தே.க. ஈஸ்வரன் ஆகி யோரிடம் உதவி கேட்டிருக்கிறார். பா.ஜ.க. பிரமுகர்கள் மூலமும் காய் நகர்த்திவருகிறார்'' என்று பெரியசாமிக்கு நெருக்கமான ஒரு பேராசிரியரே கூறுகிறார். இந்தப் புகார்கள் தொடர் பாக பெரியசாமி யிடம் விளக்கம் பெற அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, "சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டி ருந்தது. 

மூவர் குழு விசாரணை குறித்து பெரியார் பல்கலை. கன்வீனர் கமிட்டி ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் சுப்ரமணியிடம் கேட்டபோது, "விசாரணையின் உள் விவரங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இக்குழுவினர் விரைவில் விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள்.'' என்றார். சாதி மற்றும் அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு பெரியார் பல்கலையை சீரழித்து வந்த பேராசிரியர் பெரியசாமியை, கடந்த வெள்ளியன்று சஸ்பெண்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம்.