வேங்கை வயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தின் உஷ்ணம் அடங்குவதற்குள் நாமக்கல் அருகே, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரின் முகத்தில் சாதிய வன்மத்துடன் லாரி அதிபர் எச்சில் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவிநாசிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். தி.மு.க. பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு கவுன்சிலராக உள்ளார். திருச்செங்கோடு அருகே உள்ள கிளாப் பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். லாரி அதிபர். முருகேசனும், சுரேஷும் கூட்டாக சேர்ந்து ஐ.ஓ.சி. நிறுவனத்தில் லாரி வாடகை ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்து வந்துள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனை யில்தான் தன்மீது சாதிரீதியான வன்கொடுமை நிகழ்த்தப்பட்டதாக சொல்கிறார்.
முருகேசன் நம்மிடம் கூறுகையில், "நானும் சுரேஷும் 15 ஆண்டுக்கும் மேலாக நண்பர்கள். நான் செருப்பு தைக்கும் சமூகத்தைச் சேர்ந்தவன். அவர் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். சங்ககிரியில் உள்ள ஐ.ஓ.சி. நிறு வனத்தில் காலி சிலிண்டர்களை ஏற்றிச்செல்ல லாரி வாடகை ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வந்தது. பட்டியல் சமூகத்தினருக்கு ஒப்பந்தப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டதால், கடந்த 2018ம் ஆண்டில் என் பெயரில் 5 ஆண்டுக்கான லாரி வாடகை ஒப்பந்தப் பணியை அவருக்கு எடுத்துக் கொடுத்தேன்.
இதற்காக நான்கு லாரிகளை புதிதாக வாங்குவதாகவும், ஒப்பந்தக்கால முடிவில் ஒரு லாரியையும், அதன்மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்தையும் எனக்கே கொடுத்து விடுவதாகவும் சுரேஷ் சொன்னார். என் பெயரில் மூன்று லாரிகளையும், ரூ.70 லட்சம் கடனும் வாங்கிக்கொண்டார். இதற்காக எனக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் சொத்து மதிப்பு ஆவணங்களைப் பயன்டுத்திக்கொண்டார்.
அவர் மீதான நம்பிக்கையின்பேரில் அவர் நீட்டிய அத்தனை வெற்றுப் பத்திரங்களிலும், வங்கி ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன். ஆனால் சொன்னபடி எனக்கு லாபத்தில் பங்கு தரவில்லை. மாதம் 30 ஆயிரம் வீதம் சம்பளமாகத் தரக்கேட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக கடந்த ஆண்டு, எனக்கும் சுரேஷுக்கும் நடந்த வாக்குவாதத்தில், ஆத்திரமான சுரேஷ், பலர் முன்னிலையில் என் முகத்தில் காரித் துப்பினார். அவமானத்தில் கூனிக்குறுகிப் போனேன்.
இந்நிலையில், கடந்த 26.11.2022ம் தேதி, சுரேஷிடம் என் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தகங்கள், காசோலைகளைத் திருப்பிக் கேட்டதற்கு என்னை ஆபாசமாகவும், சாதிப்பெயரைச் சொல்லியும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக எலச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் உடனடியாகப் புகாரளித்தும், கடந்த டிசம்பர் 16ஆம் தேதிதான் சுரேஷ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். நேர்மையான விசாரணை நடத்தவில்லை.'' என்றார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ., நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கூறுகையில், "திருச்செங்கோடு லாரி அதிபர் சுரேஷ், ஏற்கனவே ஒரு பேக்கரி கடையை ஆட்களுடன் சேர்ந்து அடித்து நொறுக்கிய வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். அவருடைய ரிக் வண்டியில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவரை வேலைக்கு வரவில்லையென் பதற்காக அடித்து உதைத்தார். தற்போது தி.மு.க. கவுன்சில ரின் கணவர் முருகேசனை சாதியைச் சொல்லி மிரட்டி இருக்கிறார். அவரை கைது செய்யாமல் காவல்துறையினர் அவருக்கு உடந்தையாக இருக்கின்றனர்" என்றார்.
காவல்துறையினரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, ஜனவரி 27ஆம் தேதி, எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., தி.மு.க., காங்கிரஸ், தமிழ்ப்புலிகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இது தொடர்பாக எலச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் குலசேகரன், "டி.எஸ்.பி. என்ன சொன்னாரோ, அதன்படிதான் எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது,'' என்றார்.
லாரி அதிபர் சுரேஷிடம் பேசினோம். "சார், சூதுவாது தெரியாத அப்பாவியான முருகேசனை சிலர் தூண்டிவிட்டதால் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். ஐ.ஓ.சி. நிறுவனத்தில் லாரி வாடகை ஒப்பந்தம் போட்டு 5 ஆண்டுகள் ஆகப்போகிறது. அவருக்கு நான் 50 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்று இப்போது சொல்வதை யாராவது நம்புவார்களா?. முருகேசன் தான் என்னிடம் 90 லட் சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அந்தப் பணத்தைக் கேட்டதற்கு, என் மீது சாதி வன் கொடுமை பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார்.'' என்றார் சுரேஷ்.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி செயலாளர் ஜிஜேந்திரன், "முருகேசன் எங்கள் கட்சிக்காரர் என்பதாலும், சுரேஷ் எனது உறவினர் என்பதாலும் இருவரையும் அழைத்து நியாயத்தைப் பேசினோம். முருகேசனின் ஆடிட்டிங் பிரச்சனை சரியானதும் அவருடைய ஆவணங்களை சுரேஷிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறினோம். தன் மனைவி, மகனிடம் கலந்து பேசிவிட்டு வருவதாகச் சென்றவர் அதன்பின் வரவில்லை'' என்றார்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமியிடம் கேட்டபோது, "சாதி வன்கொடுமை வழக்கில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கைது செய்துவிட முடியாது. தீவிர விசாரணை நடக்கிறது'' என்றார். சாதி மோதலாக உருவெடுக்குமுன் தீர்க்கப்படவேண்டும்.