பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்தும், அது தொடர்பாக முன் னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், முன்னாள் தேர்வாணை யர் லீலா ஆகியோர் மீது சேலம் விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது குறித்தும், ஏற்கனவே நமது நக்கீரனில் விரிவாக எழுதியிருக்கிறோம். இந்த நிலையில், தற்போது மேலும் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் அளித் திருக்கிறது அப்பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் குழு.
பெரியார் பல்கலையின் சிண்டிகேட் குழுக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி, சென்னையில் நடந்தது. வழக்கமாக பல்கலை அரங்கத்தில் நடத்தப்பட்டு வரும் இந்தக் கூட்டம், இந்தமுறை வழக்கத்திற்கு மாறாக உயர்கல்வித் துறை செயலர் அலுவலகத்தில் நடந்தது. ஊழல் விவகாரங்கள் பற்றி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தக் கூட்டம் துறைச் செயலர் அலுவலகத்தில் நடத்தப்பட்டதாக சொல்கின்றனர். இதில் என்ன நடந்தது என்ற விசாரணையில் இறங்கினோம். ஊழல் புகார்களில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, விஜிலன்ஸ் போலீசாருக்கு பரிந்துரை செய்வதுதான் இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான அஜண்டாவாக இருந்தது.
அதன்படி துணை பதிவாளர் செந்தில்குமார், உதவிப் பதிவாளர் பிரேம ராணி ஆகிய இருவரும் தேர்வில் தோல்வி அடைந்த எம்.ஃபில் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றதாக போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக எழுந்த புகார்களின் அடிப்படை யில், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இந்த சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டி ருக்கிறது. அதேபோல், இதழியல் துறைக்கு, 3 குளிர்சாதன இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் போலி ’பில்’ மூலம் ஊழல் செய்ததாக இதழியல் துறையின் முன்னாள் தலைவர் நடராஜன் மீது புகார் கிளம்பியது. இவர் மீது விஜிலன்ஸ் போலீசும் முதல்கட்ட விசாரணை நடத்தியது. தற்போது, இவர் மீதும் எப்.ஐ.ஆர் போட சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறது.
முன்னாள் தேர்வாணையர்களான பேராசிரியர் இளங்கோவன், லீலா, நிதி அலுவலர் முருகேசன் ஆகியோர், மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் விடைத்தாள்கள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
இவர்கள் தவிர, ஊட்டச் சத்தியல் துறைத்தலைவர் நாஸினி, தன்னிடம் பி.ஹெச்.டி., ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மாணவி ஒருவரை தேர்ச்சி பெறவைக்க, லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட புகாரின் பேரில், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி எவ்வித விளக்கமும் கோரப்படாமலேயே திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க மூன்றுபேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார் துணைவேந்தர் ஜெகநாதன். அந்தக் குழு விசா ரணை அறிக்கையை சமர்ப்பித் துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஒரு குழுவை அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். அதேபோல, பெரியார் பல்கலையின் தொலைதூரக் கல்வி மைய (பிரைடு) முன்னாள் இயக்குநரான ஓய்வுபெற்ற பேராசிரியர் குணசேக ரன், உதவிப் பதிவாளர் ராமன் ஆகியோர் ஸ்டடி சென்டர்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான விசாரணை அறிக்கை, தற்போதைய துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதுவும் சிண்டிகேட் குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விஜிலன்ஸ் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுள் ஒருவரான முன்னாள் தேர்வாணையர் இளங்கோவனிடம் பேசினோம். "நானோ அல்லது எனக்குப் பிறகு தேர்வாணையராக வந்த பேராசிரியர் லீலாவோ, தன்னிச்சையாக ஒரு தனியார் நிறுவனத்திடம் விடைத்தாள்களைக் கொள்முதல் செய்துவிட முடியாது. அதற்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட அதிகாரம் எல்லாம் அப்போது இருந்த துணைவேந்தர் சுவாமிநாதனுக்குதான் உண்டு. அவ்வாறு இருக்கையில், என்னை பலிகடாவாக்க முயற்சிப்பது முரணாக இருக்கிறது. நான் எங்கே பெரியார் பல்கலையின் துணை வேந்தர் பதவிக்கு வந்துவிடுவேனோ என்ற உள்நோக்கத்துடன் என்னை பொய்ப் புகாரில் சிக்க வைக்கவே சிலர் சதி செய்கின்றனர்''’என்றவர் தொடர்ந்தார்.
"இந்தப் பல்கலையில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணைவேந்தர் பதவிக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, பிற சமூகத்தினர் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஆகிவிடக்கூடாது என்று சதி செய்கின்றனர்'' என்றார் வருத்தத்தோடு.
இதழியல் துறை பேராசிரியர் நடராஜனிடம் கேட்டபோது, ''தற்கொலை செய்துகொண்ட முன்னாள் பதிவாளர் அங்கமுத்து, அதற்கு முன்பு உடற்கல்வி இயக்குநராக இருந்தார். கற்பித்தல் அனுபவமற்ற அவரை பதிவாளர் பதவியில் நியமிப்பது சட்டவிதிகளுக்கு எதிரானது என எதிர்ப்பு தெரிவித்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டு, என் மீது போலி "பில்' மூலம் ஏ.சி. மெஷின் வாங்கியதில் ஊழல் என்ற பொய்யான குற்றச்சாட்டைக் கிளப்பிவிட்டார். இது குறித்து ஏற்கனவே விஜிலன்ஸ் போலீசில் முதல்கட்ட விசாரணையின்போது தெரிவித்து இருக்கிறேன். சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பேன்'' என்றார்.
பல்கலைக்கழக முறைகேட்டில் சிக்கியவர்கள் அனைவரும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு சட்டபடி தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல், பல்கலைக்கழகமே ஊழல் வெள்ளத்தில் மூழ்கிவிடும்.