குற்றவியல் மனநிலையில் சிறைகளில் அடைபட்டுள்ள கைதிகள் எந்த நேரத்தில் என்ன பண்ணுவார்கள் என்று கணித்துவிடமுடியாது. அதனாலேயே, சிறைகள் பலவும் அவ்வப்போது களேபரமாகிவிடுகின்றன. விருதுநகர் மாவட்டச் சிறையிலும் கைதிகளுக்குள் மோதல் நிகழ்ந்து கடந்த 12ஆம் தேதி பரபரப்பானது.

Advertisment

12 அறைகளைக் கொண்ட விருதுநகர் மாவட்டச் சிறையில், 200 கைதிகளை அடைக்கும் இடத்தில் 250க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்துள்ளதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இச்சிறையில் கைதிகளிடம் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி எழுந்த நிலையில்தான் மோதல் நடந்துள்ளது. அதன் பின்னணி குறித்தறிய களமிறங்கினோம்.

Advertisment

vv

2021 ஜூலை 12-ஆம் தேதி தாழையூத்தைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் கண்ணன் கொலை செய்யப்பட்டார். இவர், ராக்கெட் ராஜாவின் கூட்டாளியான ஜேக்கப்பின் நண்பராவார். பாளை சிறையில் முத்துமனோ என்ற கைதி கொலை செய்யப்பட்ட தற்குப் பழிவாங்கவே அப்போது கண்ணனின் உயிர் பறிக்கப்பட்டது. கண்ணன் கொலை வழக்கில் நெல்லையைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் உள்ளிட்டோர் கைதானார்கள். இந்தக் கொலை வழக்கை 6 மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லை கோர்ட்டுக்கு உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை.

கண்ணன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணபிரான் உள்ளிட்ட 12 கைதிகளை வெவ்வேறு சிறைகளில் இருந்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச்சென்றபோது, அந்த வழியிலுள்ள விருதுநகர் மாவட்டச் சிறையில் 2 பிளாக்குகளை ஒதுக்கி அடைத்திருந்தனர். பாதுகாப்பு கருதி இவர்களைத் தனியாகவும் சாப்பிடவைத்தனர். சிறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, அந்தச் சிறையில் இருந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த கைதிகளுக்குப் பாரபட்சமாகத் தெரிய, கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பே தங்களின் எதிர்ப்பை மூர்க்கத்தனமாக வெளிப்படுத்தினர்.

Advertisment

உதவி சிறை அலுவலரிடம், "இது என்ன அவங்களுக்கு மட்டும் தனிச்சலுகை? ஒருநாள் வந்துட்டு மறுநாள் போறவங்களுக்கு இத்தனை வசதி எதுக்கு பண்ணித் தர்றீங்க?''’என்று சாதி ரீதியான பகைமையோடு தகராறு செய்தனர். தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்திய கொலை வழக்கு கைதி கண்ணனையும், வடிவேல் முருகனையும் வெவ்வேறு அறைக்கு மாற்ற ஏற்பாடு செய்தபோது, வடிவேல் முருகன் அந்த அறையிலிருந்த வடமாநில கைதி எழுமின் அகமத்திடம் பீடி கேட்டு பிரச்சனை செய்ததோடு, முகத்தில் மிதித்து காயத்தை ஏற்படுத்தினார். இந்தச் சூழ்நிலையில், கைதி ஒருவரை காவலர் தாக்கியதாக கூச்சல் எழ, மொத்த சிறையும் பதற்றமானது. ஒருவர் தோளில் ஒருவர் ஏறி அங்கிருந்த ஃபேன்களின் இறக்கைகளைப் பிய்த்து எறிந்தனர். டியூப் லைட்டுகளை உடைத்தனர். தகவல் கிடைத்து மதுரை சரக சிறைத்துறை துணைத்தலைவர் பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் அங்குவர, நிலைமை கட்டுக்குள் வந்தது.

11ஆம் தேதி இரவு அட்டூழியம் செய்த 24 கைதிகளை, மறுநாள் காலை 7-30 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்ய, இரண்டு போலீஸ் வேன்களில் ஏற்றியபோது, "வடிவேல் முருகன் உள்ளிட்ட 4 கைதிகள் ‘எங்களை என்கவுன்டரில் கொலை செய்வதற்குத்தானே கூட்டிட்டுப் போறீங்க?''’என்று வேன் ஜன்னல் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்தனர். உடைந்த கண்ணாடி சில்லால் ரத்தம் வருமளவுக்கு உடம்பில் கீறிக்கொண்டனர். கண்ணாடித் துகள்களைக் கையிலெடுத்து முகத்தில் பூசிக்கொண்டனர். அதனால், நான்கு கைதிகளின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. ஆனாலும், காவல்துறையினர் பாதுகாப்புடன் அந்தக் கைதிகளை மதுரை மத்திய சிறைக்குக் கொண்டுசென்று அடைத்தனர்.

கைதிகள் அடிமைகள் அல்ல, அவர்களுக்கு அரசியலமைப்பு உரிமைகள் உள்ளன என்கிறது நீதித்துறை. சமுதாயத்தில் அமைதி நிலவவேண்டும் என்ற காரணத்துக்காகவே அர்ப்பணிப்போடு இயங்குகிறது சிறைத்துறை. இவையெல்லாம் ஏட்டில் மட்டுமே காணப்படும் நிலையில், கைதிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வை கேள்விக்குறியாக்கிவிடுகின்றன, சிறைகளில் நடக்கின்ற வன்முறைச் சம்பவங்கள்!