"நாங்கள் பழங் குடியினத்தவர்கள் என்ற சான்று கொடுங்கள்!'' எனப் பல்லாண்டுகளாகப் போராடுகிறார்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மக்கள். இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள் ளன. இவற்றில் பூர்வகுடி களான மலையாளி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் (மலையாளி என்றால் மலைப்பகுதியில் பூர்வகுடி களாக வாழும் சமூகம்). இம்மக்களுக்கு வழங்கப் படும் ஜாதிச் சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓ.சி.) எனக் குறிப்பிடப்படுகிறது.

Advertisment

ff

இதே மலையாளி இனத்தைச் சேர்ந்த மக்கள், சேலம், தருமபுரி, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். சேந்த மங்கலம் சட்டமன்ற தொகுதி, எஸ்.டி. எனப்படும் மலையாளி மக்களுக் காகவே ஒதுக்கப்பட்டிருக் கிறது. அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் பட்டியலின பழங்குடியினர் (எஸ்.டி.) என்ற சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. இதனால், அரசு பணி மற்றும் அரசின் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்கின்றன. எனவே, கடம்பூர், அந்தியூர் தொகுதியிலுள்ள பர்கூர் மலைப்பகுதி மலையாளி மக்களும் தங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்றிதழ் வேண்டுமென்று போராடிவருகிறார்கள்.

கோவை மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் பிரிக்கப்பட்டபோது இம்மக்கள் ஓ.சி. பிரிவினராக வகைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறார்கள். அதன்பிறகு முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி எஸ்.டி. சான்றிதழ் வழங்கி யிருக்க வேண்டும். ஆனால் இப்போதுவரை இவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி மலையாளி கள், தங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கக்கோரி, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அடுத்ததாக, கடந்த 20ஆம் தேதி முதல் கடம்பூர் பஸ் நிலையம் அருகே, பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மலையாளிகள், பழங்குடியினர் சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisment

தகவலறிந்த கோபி ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஈரோடு கலெக்டர் எங்களோடு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போராட்டம் இரவு வரை நீடிக்க, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணியளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பட்டியலின பழங்குடியினர் சான்றிதழ் வேண்டுமென்ற கோரிக்கையை கேட்டுக்கொண்ட அவர், "இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கெனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய, மாநில அரசிடம் அனுப்பியுள்ளார். நானும் உங்கள் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பேன்'' என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

jj

"நாங்கள் மலைப்பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் மலையாளி சமூகத்தை சேர்ந்தவர்கள். தமி ழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் வசித்துவருகிறோம். வேறு மாவட்டத்திலிருந்து திருமணம் செய் தால் பழங்குடியினர் சான்றிதழ் இருக்கிறது. ஆனால் எங்கள் குழந்தை களுக்கு மட்டும் இச் சான்றிதழ் இல்லாததால் கல்வி, வேலை வாய்ப்பில் எங்களுக்கான உரிமைகள் பறிபோகின்றன. எங்களுக்கான சான்றிதழை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்'' என்றார் பழங்குடியின மலையாளி மக்கள் நலச்சங்க தலைவர் சின்ராஜ்.

Advertisment

jj

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நிர்வாகி தோழர் மோகன் குமார் "இந்த மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. 20 ஆண்டு களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தொகுதி எம்.பி. சுப்பராயன் இரண்டு முறை பாராளு மன்றத்திலும் பேசிவிட்டார். இறுதியாக, இம்மக்களுக்கு பழங்குடியினர் (எஸ்.டி.) சான்றிதழ் தரவேண்டுமென்று முதல்வரைச் சந்தித்தும் மனு கொடுத்தார். இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் கூறிய பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேயில்லை. இதிலிருந்தே இந்த அரசை, அதிகாரிகள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசின் நலத்திட்டங்களில் சலுகைகள் கேட்பதென்பது வேறு, இங்கே மலை மக்களின் வாழ்வியல் சம்பந்தமான அடிப்படை உரிமையைச் செய்துதரக் கேட்கிறோம். இதை செய்துதர மறுப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை. அதிகாரிகள் மிக விரைந்து இந்த மக்களுக்கு பழங்குடியினர் (எஸ்.டி.) சான்றிதழை கொடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் மக்கள் நலன் சார்ந்த உணர்வோடு செயல்பட வேண்டிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்பது வேதனை!'' என்றார்.

சமத்துவம், சமூக நீதியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் அழுத்தந் திருத்தமாகக் கூறினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால், விளிம்பு நிலையில் வாழும் மக்கள் இதுபோன்று வதைபடவே செய்கிறார்கள்!