தகவல் உரிமை ஆணையத்தின் ஆணையர் ராஜகோபால் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகப் புகார் கிளம்பியுள்ளது. "சென்னை தகவல் தாத்தா' என்று அழைக்கப்படும் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் ராஜகோபால் மீது எஸ்.சி./எஸ்.டி. கமிஷன் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும், அதன் உண்மைத்தன்மை யையும் தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் கேட்பதும், அதன் நியாயத்துக்காக நீதிமன்றங்களை நாடுவதுமான சேவையில் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறார் கல்யாணசுந்தரம். அந்த வகையில், சென்னையில் தரமற்றுக் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியக் கட்டிடம் குறித்தும், தற்போது சென்னையில் சி.எம்.டி.ஏ. சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி தகவல் உரிமை ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார். அதற்கான பதில்கள் வராததால், அதுகுறித்து அவர் கேள்வியெழுப்பினார். அதன்பின்னர், அவருக்கு பதிலளிப்பதற்காக, சி.எம்.டி.ஏ. அதிகாரியை உள்ளடக்கிய விசாரணைக்கு ஜூலை 26-ம் தேதி வருமாறு அவரை அழைத்துள்ளது.
விசாரணை ஆணையத்தில், சி.எம்.டி.ஏ. பொது தகவல் அலுவலர் சாந்தசுதா, மனுதாரர் கல்யாணசுந்தரம் ஆகியோர் அமர்ந்திருந்த நிலையில், தலைமை தகவல் ஆணையர் ராஜகோபால், மனுதாரரை விசாரிக்க ஆரம்பித்தார். "நீங்க என்ன கேள்வி கேட்டிருந்தீங்க? நாங்க என்ன பதில் கொடுக்கவில்லை?' என்று விசாரித்திருக்கிறார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த கல்யாணசுந்தரம், "சி.எம்.டி.ஏ. கட்டிடங்கள் பற்றிய தகவலைக் கேட்டிருந்தேன்' என்று கூறியிருக்கிறார்.
அதற்கு தகவல் ஆணையர் ராஜகோபால், "என்முன்னே நீங்கள் எப்படி அமர்ந்துகொண்டு பேசலாம். எழுந்து நின்று பேசு'’என்று கூறியுள்ளார். அதற்கு மனுதாரர், "அய்யா எனக்கு வயது 78 ஆகிறது. எழுந்து நின்று பேசினால் உடல் நடுக்கம் ஏற்படும்' என்று கூறியதும், அடுத்ததாக, "என்ன என் முன்னே கையை நீட்டி பேசுற? எப்படி கை நீட்டிப் பேசலாம்?' என்று தொடர்ந்து இழிவுபடுத்தியிருக்கிறார். இதையடுத்து, "என்னை இப்படி இழிவு செய்வதால் நான் விசாரணையிலிருந்து வெளியேறுகிறேன்' என்று எழுந்துள்ளார். அதற்கு மீண்டும் அவர், "உன் தகுதி அறிந்து நடந்துகொள்ள வேண்டும். நீ யார் என்பது எனக்குத் தெரியும்' என்று ஜாதிரீதியாக மீண்டும் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார்.
அதற்கு கல்யாணசுந்தரம், "மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். அவர்களைக் கனிவாக நடத்த வேண்டும் என அரசாணையே உள்ளது. அதை மீறி இப்படிச் செய்வது நியாயமா?'' என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜ கோபால், "எவன் அந்த உத்தரவை போட்டானோ அவனிடம் போய் கேட்டுப் பார். இது தன்னாட்சி பெற்றது. எங்களை கேள்விகேட்க அரசுக்கே உரிமையில்லை'' என்று ஏகவசனத் தில் அரசையும் சேர்த்தே திட்டியிருக்கிறார். இதனால் மன முடைந்த கல்யாணசுந்தரம் புகார் அளித்ததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு எஸ்.சி./எஸ்.டி. கமிஷன், கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்விவகாரத்தில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஆர்டிக்கிள் 338-ன்படி சிவில் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவிடர் முதன்மை செயலாளர் மணிவாசகத்திற்கு இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழக தகவல் உரிமை ஆணையம் இவ்விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்வியை ஆதிதிராவிடர் நலத்துறை முன்வைத்துள்ளது. அக்கேள்விக்கு தற்போதுவரை பதில் தரப்படவில்லை. இதனை முறையாக விசாரித்தால், ஜாதியால் இழிவுசெய்யும் பலரும் சிக்கக்கூடும்.
இது குறித்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "பிறப்பால் வேறுபாடு காண்பது இனப்படுகொலைக்குச் சமமானது என்கிறது ஐ.நா. முறைப்படி தகவலைக் கேட்டதற்கு சாதிப்பாகுபாட்டு வெறுப்பினைக் கக்கி விரட்டுவது ஏற்கமுடியாத ஒன்று, ஒரு தகவலை நாங்கள் கேட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம், இத்தகவலைக் கேட்டுக் கடிதம் வந்துள்ளது. இத்தகவலைக் கொடுக்கலாமா என்று அவர்களுக்குள் பேசி, தகவலை மறைப்பதற்காக இருவரும் கூட்டுக் களவாணிகளாக மாறிவிடு கிறார்கள். இது நாட்டின் ஜனநாயகத்துக்கே விடப்படும் சவால். தகவல் ஆணையம் சரியான வழியில் செயல்படவேயில்லை. இதுபோன்ற அதிகாரிகள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த அரசு பாடம் புகட்டவேண்டும்'' என்றார்.
இதுதொடர்பாக தலைமை தகவல் ஆணையர் ராஜகோபாலிடம் கேட்டபோது பேச மறுத்துவிட்டார். தமிழக தகவல் ஆணையத்தின் பதிவாளரிடம் கேட்டபோதும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டபோது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தத் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டினார்.
இன்றைய தமிழ்நாடு முதல்வரால் அன்றே மறுக்கப்பட்ட நபர் தான் இன்றைக்கு ஒட்டுமொத்த பொதுமக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல், ஜாதித் தீண்டாமை வெறுப்பை விதைத்து, தான் சொல்வதுதான் சட்டம் என்ற போர்வையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். வெளிச்சத்திற்கு வந்தது இந்த ஒரு விவகாரம்தான். வெளியில் வராத பல பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய தவறுகள் வெளித்தெரியும்போதே நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்களும் தங்களைத் திருத்திக்கொள்வார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.