கோவை அன்னூர் ஒற்றர்பாளையம் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலகம்.

"கோபால்சாமி சார்... பட்டா பெயர் மாற்றம் பண்றதுக்கு நீங்க கொண்டு வந்திருக்கிற ரெக்கார்ட்ஸ் பத்தாது. யார் பெயர்ல பட்டா மாத்தணுமோ, அவுங்களோட ஒரிஜினல் ரெக்கார்ட்சை கொண்டுவந்து கொடுங்க'' எனச் சொல்லிவிட்டார் வி.ஏ.ஓ.வான கலைச்செல்வி.

"என்னது ஒரிஜினலை கொண்டுவந்து கொடுக்கணுமா? அதைய உக்காந்துட்டே சொல்றே? அந்த அளவுக்கு பெரிய ஆளா நீ?'' என ஒருமை வார்த்தைகளை கலைச்செல்வியிடம் கொட்டத் தொடங்கிவிட்டார் கோபால்சாமி.

gg

Advertisment

"ஏங்க ஒரு கவர்மெண்டு அதிகாரிகிட்ட இப்படிப் பேசலாமா? போய் அந்தப் பக்கம் உக்காருங்க'' என கலைச்செல்வியின் உதவியாளரான முத்துசாமி சொல்லிக்கொண்டே கோபால்சாமி யைத் தள்ள முயற்சித்தார்.

"முத்தா... என்ன இது? நீ எல்லாம் என் முன்னால நின்னு பேசறதே தப்பு. தொட்டுப் பேசற அளவுக்கு ஆளாயிட்டியா? என்னயத் தொட்டு பேசுனதுக்கு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு முத்தா... கேக்கலைன்னா நீ ஊருக்குள்ள நடமாட முடியாது ஆமா?'' என கோபால்சாமி சத்தம் போட...

"அய்யோ...என்னைய மன்னிச்சுருங்க... என்னைய மன்னிச்சுருங்க...'' என முத்துசாமி கோபால்சாமியின் இரண்டு கால்களையும் கட்டிக்கொண்டு, மன்னிப்பு கேட்டு அழுதார். இதைக்கண்ட கலைச் செல்வி... "முத்தண்ணா எந்திரிங்க... இது மாதிரி செய்யாதீங்க'' என்றார்.

Advertisment

முத்துசாமி எழுந்து, மீண்டும் கோபால் சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அங்கிருந்த நபர்களும் முத்துசாமியின் கைகளைப் பிடித்து தூக்க முயல... தலையிலடித்துக் கொண்டு, "மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க' என அழுதார். உடனே கோபால்சாமி, "மன்னிச்சுட்டேன் முத்தா.. உன் மேலயும் தப்பு இருக்கு.. என் மேலயும் தப்பு இருக்கு'' என சொல்லிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

"சம்பந்தப்பட்ட நபர் கோபால்சாமியை சாதி வன்கொடுமை வழக்கில் கைது செய்ய வேண்டும்' என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அன்னூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில் உதவி யாளர் முத்துசாமி காலில் விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, தான் அறிந்த நபருடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது.

அந்த ஆடியோவில் "என்ன நடந்தது முத்துசாமி?'' என ஒருவர் கேட்க...

kovai

முத்துசாமியோ, "பட்டா மாறுதல் பண்ணனும்னா பத்திரம், அது இது எல்லாம் எடுத்துட்டு வரணுமில்லைங்க. எதுவுமே எடுத்துட்டு வராம கத்த ஆரம்பிச்சுட்டாருங்க. ஏதோ கொஞ்சம் மப்பு அடிச்சுருப்பாருபோல தெரியுதுங்க. நான் போயி "உட்காருங்க'ன்னுதான் சொன்னேங்க. அதேதானுங்க... ஏற்கனவே என்னைய தோட் டத்துல எல்லாம் கண்டபடி பேசி , சாதி சொல்லி பேசுவாங்க, நானும் கண்டுக்காம வந்துருவேங்க'' என்கிறார்.

எதிர்முனை நபரோ, "நீங்க என்னமோ கால்ல விழுந்து கதறுனீங்களாமா? அவன் அடிக்க வந்தானாமா? நீங்க எதுக்கு கால்ல விழறீங்க?'' என கேட்கிறார்.

அதற்கு... "என்ன பண்றதுங்க? நாமதான் எஸ்.சி. ஆச்சுங்களே? அனுசரிச்சுத்தானே போகணும்ங்களே? நான் எப்பவுமே அப்டித்தானுங்க. அந்த சாதிக்காரங்களைக் கண்டா கொஞ்சம் மதிச்சு நடப்பேனுங்க'' என்கிறார் குரல் கம்ம.

"கால்ல விழுந்ததுக்கு மன்னிச்சுட்டாரா?''

"இல்லைங்க... நான் அடிச்சு போட்டேன்னு போலீஸ்ல கம்ளைண்டு கொடுத்து இருக்கறாருங்க'' என்கிறார் முத்துசாமி.

இந்த ஆடியோவைக் கேட்ட, மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட வருவாய் அதிகாரி லீனா அலெக்ஸ், மாவட்ட சூப்பிரெண்ட் செல்வரத்தினம் ஆகியோர் நடவடிக்கைக்கு தயாராயினர்.

சாதிவெறி பிடித்த கோபால்சாமி மீது கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் பிரிவிலும், உதவியாளர் முத்துசாமி அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

இந்த சாதிவெறி சம்பவத்தைப் பற்றி பேசும் த.பெ. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், "முத்துசாமி என்னதான் அரசு ஊழியராக இருந்தாலும், ஆதிக்க சாதிகளிடம் அடிமையாய்த்தான் இருக்கவேண்டும் என ஆண்டாண்டு காலமாய் சொல்லப்பட்டதை வழி மொழிகிறது. இங்கே மட்டுமல்ல, ஒலிம்பிக்கில் ஆக்கி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து புகழ்பெற்ற முதல் வீராங்கனையான வந்தனா பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்பதால், இந்திய ஆக்கி அணி தோல்வி அடைந்தபோது... வந்தனா வீட்டு முன்பு பட்டாசு வெடித்து சாதி வெறியை கொண்டாடியிருக்கிறார்கள். இந்த நிலை மாற, நாங்கள் இன்னும் போராடவேண்டியிருக்கிறது என்பது மட்டும் உறுதியாய் தெரிகிறது'' என்கிறார் உணர்ச்சியாய்.