தேசிய விருது பெற்ற "ஜோக்கர்'’ படத்தில் டாய்லெட்’ ஊழல் அம்பலப்படுத்தப்பட்டது. அந்த சினிமாவையே ஓவர்டேக்பண்ணும் அளவுக்கு… ஊரில் வசிக் காதவர்கள், ஏன்… இந்த உலகத்திலேயே வசிக்காத வர்கள் (இறந்தவர்களின் பெயர்களிலும்), வேறு நிதியுதவிகளில் கழிவறைகள் கட்டியவர்களின் பெயர்களிலெல்லாம் ‘"டாய்லெட்'’ கட்டியதாக கணக்கு காண்பித்து லட்சக்கணக்கில் ‘"ஸ்வாஹா'’ பண்ணியிருப்பது ஆதாரபூர்வ மாக அம்பலமாகியிருக்கிறது.

toilet

ஊழல் நடந்த நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் திருமலாபுரத்தைச் சேர்ந்த மதிசேகர் நம்மிடம், “""எங்க ஊர்ல நிறைய பேருக்கு கழிவறை கட்டிக் கொடுக்கப்படல. அதனால, கழிவறை கட்டிய பயனாளிகளின் பட்டியலைக் கொடுங்கன்னு கேட்டதுக்கு, பி.டி.ஓ. தர மறுத்துட்டார். அதனால்தான், ஆர்.டி.ஐ. மூலமா தகவல் கேட்டேன். எங்க ஊர்ல மட்டும் 276 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும், இதற்காக 33 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், கழிவறை கட்டுவதற்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 51 நபர்களுக்கு 95,995 ரூபாய் ஊதியம் வழங்கியிருப்பதாகவும் கணக்கு காண்பித்திருப்பதை ஆர்.டி.ஐ. தகவலாக கொடுத்தார்கள் அதிகாரிகள்.

Advertisment

276 பேர் பயனாளிகள் என்று அதிகாரிகள் கொடுத்த பட்டியலை பரிசோதித்தபோதுதான் இறந்துபோனவர்கள், பல வருடங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து சென்றவர்கள், அணுமின் நிலையத்தின் மூலம் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட கழிவறைகள், ஒரே வீட்டில் இரண்டு கழிப்பறைகள், ஒரே பெயரில் இரண்டு கழிப்பறைகள் என முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கழிவறைகள் இல்லாததால் ஆண்களைவிட கிராமப்புறங்கள்ல பெண்கள் பாத்ரூம் போகமுடியாம மரண அவஸ்தைப் படுறாங்க. இரவு நேரங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுறாங்க உள்ளிட்ட பல காரணங்களாலதான் டாய்லெட் கட்டச்சொல்லி அரசாங்கம் ஒவ்வொருத்தருக்கும் 12,000 ரூபாய் நிதியுதவி செய்யுது. உண்மையான பயனாளிகளுக்கு பணத்தைக் கொடுக்காம இப்படி அதிகாரிகளே திருடிக்கிட்டா எப்படிங்க?''’என்று கேள்வி எழுப்புகிறார் பரிதாபமாக.

toilet

இதுகுறித்து, நாம் மேலும் விசாரித்தபோது, 75 வயது பாட்டி செல்லத்தாய் நம்மிடம், “""நான் தினமும் மோர் வித்து பொழைச்சிக்கிட்டிருக் கேம்பா. எங்க வீட்டுல பாத்ரூமே கிடையாது. எடுபட்ட பயலுக, பாத்ரூம் கட்டினதா எம்பேர்லே யும் பணத்தை எடுத்திருக்காணுங்கப்பா''’என்று சாபம் விட்டுவிட்டுச் செல்கிறார். இதே ஊரைச் சேர்ந்த ராமசுந்தரத்தின் மனைவி இறந்து 4 வருடங் களாகிவிட்டன. ஆனால், போனவருடம் உயிருடன் இருந்த மாதிரியும், இவருக்கு 2017 டிசம்பர் 6-ந் தேதி டாய்லெட் கட்டிக் கொடுத்ததாகவும் அதற்குரிய 12,000 ரூபாய் பணத்தை இறந்துபோன பெண்ணே ரசீதில் கையெழுத்துப் போட்டதாகவும் கணக்கு காண்பித்திருப்பதை கண்டறிந்து பேரதிர்ச்சி அடைந்தோம்.

நாம் மேலும் விசாரித்தபோது, “"இந்த ஊரோட டாய்லெட் டார்கெட் 509. ஆர்.டி.ஐ. தகவல் மூலம் பார்த்தால், கட்டிக் கொடுத்தது 276 டாய்லெட்தான். ஆனா, 309 பேருக்கு பணம் வந்திருக்கு. பணம் வாங்கின ஒவ்வொருத்தர்கிட்டே யும் 1,000 ரூபாய் லஞ்சம் வேற வாங்கியிருக்காங்க. "இந்த ஊரில் திறந்தவெளியில் யாரும் மலம் கழிப்பதில்லை'ன்னு சொல்லி 2017 டிசம்பர் மாசமே அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி க்ளோஸ் பண்ணிட்டாங்க அதிகாரிகள்'’என்று குற்றச்சாட்டு வர... தகவலை கையெழுத்திட்டு அளித்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலியை தொடர்புகொண்டு கேட்டோம். “""2013-ல் கணக்கெடுத்த லிஸ்ட்டை கம்ப்யூட்டர்ல வெச்சிருப்போம் சார். திடீர்னு அவசரமா சென்னை, டெல்லி ஆபீஸ்களிலேர்ந்து பாத்ரூம் கட்டி முடிச்ச லிஸ்ட்டை கம்ப்யூட்டரில் அப்லோடு பண்ணச் சொல்வாங்க. அப்படி, அவசரத்துல அப்லோடு பண்ணின தகவலைத் தான் ஆர்.டி.ஐ.ல அனுப்பிட்டாங்க''’என்று மழுப்பியவரிடம், "அப்படின்னா, எல்லோருடைய பேருக்கும் முன்னாலயும் பணம் கொடுத்த மாதிரி லிஸ்ட்டுல இருக்கே சார்?'’என்று நாம் கொக்கி போட்டோம். ""எங்க ஆபீஸ்ல கோ-ஆர்டினேட்டர் முருகன்னு இருக்கார், அவர்தான் இஷ்டத்துக்கு வவுச்சர் நம்பர்லாம் போட்டு வெச்சிப்பாரு. இந்தமாதிரியான தவறுகள்தான் தமிழகம் முழுக்க நடக்கலாம்''’என்று ஓப்பனாகவே சொல்லி நம்மை அதிரவைத்தார்.

இதைவிடக் கொடுமை, பயனாளிகளின் பேங்க் அக்கவுண்டில் பணத்தைப் போடாமல் கழிவறை காண்டிராக்ட் எடுத்த சுசீலா என்பவரது அக்கவுண் டில் பணம் போடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இத்திட்ட பி.டி.ஓ. சுசீலா பீட்டரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “""இந்த பிரச்சனை நடக்கும்போது சுப்பிரமணியன்தான் பி.டி.ஓ.வா இருந்தாரு. கலெக்டர்கிட்ட புகார் கொடுத்திருக் காங்க. விசாரணை நடக்குது. எல்லாத்தையும் விளக்கமா சொல்ல முடியாது''’என்று டென்ஷனாக போனை துண்டித்தார். முந்தைய பி.டி.ஓ. சுப்பிர மணியத்திடம் கேட்டபோது... ""விடுபட்டவங் களுக்கு பணத்தை கொடுக்கச் சொல்லி ரெகுலர் பி.டி.ஓ. ருக்மணி சொல்லிட்டாங்க. விஷயத்த பெரிசு படுத்தாதீங்க சார்''’என்றார் பவ்யமாக.

"ஓர் ஒன்றியத்திலேயே இப்படி ஊழல் நடந்திருக்கிறது என்றால் தமிழ்நாடு முழுக்க "தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகள் எத்தனை? எவ்வளவு கோடி மோசடி நடந்திருக்கிறது' என்று யோசிக்கும்போதே தலை சுற்றுகிறது. ‘

-வினாயக்பாபு