"விக்டோரியா எட்வர்ட் மன்றத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கொள்ளைக்காரக் கூட்டத்தை வெளியேற்று' - இப்படிப்பட்ட போஸ்டர்களை ஒட்டி மதுரை மாநகரில் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கிறார்கள் அங்குள்ள ’நாம் தமிழர்’ இயக்கத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரிக்கத் தொடங்கினோம்.

mdu

தமிழகத்தில் கன்னிமாரா நூலகத்திற்கு பிறகு, பெரிய நூலகம் என்றால் அது விக்டோரியா எட்வர்ட் மன்றத்தால் நடத்தப்படும் பாரம்பரியம் மிக்க மதுரை விக்டோரியா நூலகம்தான். பெரியார் பேருந்து நிலையத்திற்கருகே, மைதானம், நூலகம், மிகப் பெரிய கலையரங்கம் என 20-க்கும் மேற்பட்ட கடைகள் சூழ அமைந்திருக்கிறது.

இந்த மன்றம் சந்தித்து வரும் பிரச்சினைகள் பற்றி நம்மிடம் பேசிய, மீட்புக் குழுவின் செயலாளரான முத்துக்குமார், ""இப்போது இஸ்மாயில் என்பவர்தான் மன்றத்தின் தலைவராக இருக்கிறார். இவர் எந்தக் கணக்கையும் யாருக்கும் காட்டுவதில்லை. பொய்க் கணக்குகளால் ஏகத்துக்கும் சுருட்டல் நடக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் தனது செல்வாக்கைப் பெருக்கிகொண்டு, அடாவடிகளை அரங்கேற்றுகிறார். இதுவரை மன்றத்திற்கு முறையாகத் தேர்தலையும் இவர் நடத்தியதில்லை'' என்றார் ஆதங்கமாக.

Advertisment

mdu

நாம் தமிழர்’ கட்சிப் பிரமுகர் வெற்றித் திருக்குமரனோ, ""இந்த விக்டோரியா மீட்பு குழுவினரும் நாங்களும் சேர்ந்து கடந்த வருடம் மார்ச்சில் ஒரு கூட்டத்தை நடத்தினோம். அப்போது இந்த இஸ்மாயில், அடியாட்களுடன் உள்ளே புகுந்து கலாட்டா செய்ததோடு எங்கள் மீது வழக்கும் போட வைத்தார். தற்போது இந்த கிளப்பிற்குச் சொந்தமான ரீகல் தியேட்டரை 99 வருட ஒப்பந்தத்தில், மாதம் ரூ 32 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆனால் அதிகமான வாடகையை வாங்கிக்கொள்கிறார்.

அதேபோல் சுற்றி இருக்கும் கடைகளுக்கு மாத வாடகையாக 15 ஆயிரம் ரூபாயை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, 35 ஆயிரம் ரூபாய்வரை வசூலிக்கிறார். மேலும் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதாக 3 லட்ச ரூபாய்க்கு பொய்க்கணக்கு எழுதியதோடு, அதற்கு அட்டை போட்டதாகவும் தனியே 2 லட்ச ரூபாயை சுவாகா செய்திருக்கிறார். யானைக்கு அல்வா வாங்கிய கணக்கு என்பார்களே, அதுபோல பொய்க்கணக்கு எழுதி கோடி கோடியாகக் கொள்ளையடித் திருக்கிறார்கள். எனவே, இந்தப் பாரம்பரியம் மிக்க மன்றத்தை அரசே கையகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் முறையாக நீதிபதிகளின் மேற்பார்வையில் மன்றத்துக்குத் தேர்தலை நடத்த வேண் டும்''’ என்றார் விரிவாகவே.

Advertisment

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, மன்றத்தின் தலைவர் இஸ்மாயிலிடமே விளக்கம் கேட்டோம். அவர் நம்மிடம், ""மன்றத்தை முறைப்படி புதுப் பித்துள்ளோம். 2,500 உறுப்பி னர்களில், வெளியேற்றபட்ட வெறும் 8 பேர் மட்டுமே சேர்ந்து கொண்டு, எங்களை மிரட்டிப் பணம் பறிக்க முயல் கிறார்கள். அனைத்தும் அரசு விதிப்படிதான் இங்கே நடக்கிறது'' என்று முடித்துக் கொண்டார்.

mdu

இதுபோன்ற விவகாரத்தில் மதுரையின் இரண்டாவது பாரம்பரிய கிளப்பான யூனியன் கிளப்பும் சிக்கியிருக்கிறது. தென்தமிழகத்தின் பிரபல கிளப்புகளில் ஒன்றான இதில், பெரும் தொழிலதிபர்களும் அரசியல் வி.வி.ஐ. பி.களுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இங்கும் மெகா மோசடிகள் நடப்பதாக மதுரை வழக்கறிஞரான வெங்கடேசன், கமிஷனரிடம் புகார் கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறார். தனது புகாரில், சுரேஷ், சைபால் சண்முகம், கிருபாகரன், லெட்சுமணன், மேனேஜர் கிருஷ்ணன், எம்.எஸ்.ராஜன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக் கிறார்.

வழக்கறிஞர் வெங்கடேசனை நாம் சந்தித்தபோது, ""கிளப்பில் உள்ள குடோனில் இருந்து ஏப்ரல் 22 ஆம் தேதி 5 லட்சம் மதிப்புள்ள பாரின் மது பாட்டில்களை இரவோடு இரவாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கேட்டதற்கு, காலாவதியான சரக்குகளைத்தான் கொண்டு சென்றோம் என்றார்கள். கிளப்புக்கு புதிய தலை வர் இன்னும் பதவி ஏற்காத நிலையில், மீண்டும் மீண்டும் பொய் கணக்கு சொல்லிக் கொள்ளையடிக்கிறார்கள்.

இந்த நிலையில் புதிய நட்சத்திர அரங்கு மற்றும் மாடி நீச்சல் குளத்தோடு மிகப் பெரிய கட்டிடத்தையும் தங்கும் விடுதியையும் கட்டப்போகிறார்களாம். எனவே இது தொடர்பாக கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதத்திடம் புகாரைக் கொடுத்தோம். அப்படி இருந்தும் எப்.ஐ. ஆர் பதியாமல், ரசீதை மட்டும் கொடுத்துவிட்டு, அட்வைஸ் செய்து அனுப்புகிறார்கள்'' என்றார் ஏக வருத்தமாய்.

யூனியன் கிளப்பின் புதிய தலைவரான சைபால் சண்முகத்தைத் தொடர்பு கொண்டு இது குறித்து நாம் கேட்டபோது,“""தேர்தலில் எங்களுக்கு எதிராக வேலை செய்தவர்கள்தான் இப்போது அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் சொல்லும் எந்தக் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை'' என்றார்.

""தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்? என்பார்கள். ஆனால் இங்கு தேன் அடையையே ஆட்டையைப் போடுகிறார்கள்''’என்கிறார் கிளப் உறுபினரான கிருஷ்ணமூர்த்தி.

ஊழல் கிளப்புகளாகும் உல்லாச கிளப்புகளை யார் தட்டிக் கேட்பது?

- அண்ணல்