ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.40 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல்துறை துணைச்சரகத்திற்குட்பட்ட கூட்டாத்து அய்யம் பாளையம் பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் கை துண்டிக்கப்பட்டு, உடலெங்கும் வெட்டுப்பட்ட நிலையில் இளைஞரின் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்திருக்கிறது. உடனடியாக அது தங்களுடைய எல்கைக்குட்பட்டு இருக்கலாம் என விளாம்பட்டி, விருவீடு, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை காவல் நிலைய காவல்   துறையினர் அங்கு ஆஜர். ஒருவழியாக, தங்களுடைய எல்கை என முடிவிற்கு வந்தபிறகே விசாரணையை ஆரம்பித்திருக்கின்றனர் நிலக்கோட்டை போலீஸார். 

Advertisment

உடலெங்கும் வெட்டுப்பட்டு, கை தனியாக துண்டிக்கப்பட்ட அந்த உயிரற்ற உடலுக்குச் சொந்தக்காரர் வத்தலக்குண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்றும், கொலைசெய்தது அவரின் மாமனாரான விருவீடு அருகேயுள்ள கணபதிபட்டி கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி சந்திரனாக இருக்கலாம் எனவும் விசாரணையைத் தொடங்கியது நிலக்கோட்டை போலீஸ். இதேவேளையில் ராமச்சந்திரன் கொலையுண்ட தகவல்தெரிய, "சாதிவெறியால் ஆணவக்கொலை நடந்துள்ளது'' என உறவினர்கள் வத்தலக்குண்டு ஆண்டிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

Advertisment

"கிராமந்தோறும் பால் கறவை செய் வதுதான் கொலையான ராமச்சந்திரனுக்கு தொழில். அதுபோல் பால் கறவைத் தொழிலுக்காகச் சென்ற நிலையில் கணபதிப்பட்டியிலுள்ள சந்திரனின் மகள் ஆர்த்தியோடு காதல் ஏற்பட்டுள்ளது. கரூரி லுள்ள தனியார் கல்லூரி யில் (இ.ஸ்ரீர்ம்) இரண்டா மாண்டு படித்துவந்த நிலையில் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும் பத்தினர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து போனிலும், நேரிலும் மாப்பிள்ளை ராமச்சந்திரனையும், மகள் ஆர்த்தியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவந்திருக்கின்றார் பெண்ணின் தந்தையான சந்திரன். அதனுடைய வெளிப்பாடுதான் இது'' என்றார் கொலையான ராமச்சந்திரனின் உறவினரான லோகேஷ் கண்ணன்.  

kolai1

சாதி மாறி திருமணம் செய்ததால்தான் ஐந்து மாதங்கள் காத்திருந்து இந்த கொலை நடந்துள்ளது. மாமனார் சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச் சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது.  இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம். எனவே,  உண்மைக் கொலையாளிகளை கைதுசெய்ய வேண்டுமெனக் கூறி கொலையுண்ட ராமச்சந்திரனின் பெற்றோர் செல்வராஜுவும், செல்வியும் நிலக்கோட்டை போலீஸாரிடம் புகாரளிக்க, தொடர் விசாரணை செய்யாமல் மாமனார் சந்திரனை மட்டும் கைதுசெய்தது போலீஸ். முன்னதாக, மாமனார் சந்திரன் கொலைமிரட்டல் விடுக்கும்போது, உரிய பாதுகாப்பு கொடுக்காமல் "இனிமேல் இப்படி எல்லாம் மிரட்டக்கூடாது' என எழுதிமட்டும் வாங்கி அனுப்பிவைத்துள்ளது அசட்டை போலீஸ்.

Advertisment

கொலையுண்ட ராமச்சந்திரனின் மனைவி யான ஆர்த்தியோ, "மூன்று வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்தோம். திருமணத்தின் பொழுது கணவரையும், என்னையும் கொன்றுவிடுவதாக என் குடும்பத்தினர் மிரட்டினர். வீட்டிற்கு நேரில் வந்த எனது அப்பா தகராறு செய்ததோடு உங்கள் இருவரையும் சும்மா விடமாட்டேன் என ஆத்திரத்தோடு கூறினார். அப்போதே நான் உங்களுடன் வந்துவிடுகிறேன். கணவரை எதுவும் செய்யாதீர்கள் என கெஞ்சி னேன். இந்நிலையில் எனது கணவரை கொலை செய்துவிட்டார். எனது கணவர் கொலையின் பின்னணியில் அப்பா, சித்தப்பா, தாய்மாமன் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்களையும் கைதுசெய்ய வேண்டும். இப்பொழுது என்னையும் கொலை செய்துவிடுவதாக என் அண்ணனும் அம்மாவும் மிரட்டியுள்ளனர்'' என்றார் அவர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட ராமச்சந்திரனின் உயிரற்ற உடலை வாங்க காவல்துறையினர் வற்புறுத்தியும், "பெண்ணிற்கு பாதுகாப்பு, கொலையுண்ட குடும்பத்திற்கான வாழ்வாதாரம் மற்றும் அனைத்து கொலையாளிகளையும் கைது செய்வது உள்ளிட்ட நிபந்தனைகளை நிறை வேற்றினால் மட்டுமே உடலை வாங்குவோம்'' என செவ்வாய்க்கிழமை வரை போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர் கொலையுண்டவரின் உறவினர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக் கறிஞர் மணிகண்டனோ, "ஆணவப் படுகொலைக்கு சாதி மிக முக்கிய காரணமாக இருந்தாலும்கூட சாதியால் மட்டுமே ஆணவப் படுகொலைகள் நடை பெறுவதாக இல்லை. மதத்தின் அடிப்படையில், பொருளாதாரத்தின் அடிப்படையில்,  கல்வித் தகுதியின் அடிப்படையில் என பல்வேறு காரணங்களினாலும் ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. ஆணவப் படுகொலைகள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிறது. 

காதல் திருமணங்கள் பெரும்பாலும் காவல் நிலையத்தின் மூலமாகவே நடைபெறுகின்றன. அப்படி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சமடையும் தம்பதியின் பெற்றோரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்து அந்த மனுவை சாதாரண மனுக்களைப்போல் முடித்து வைத்துவிடுகின்றனர். எதிர்வரும் காலங்களில் காவல் நிலையத்தில் இதற்கான சிறப்பு காவல் அதிகாரிகளை நியமித்து காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் பெற்றோர்களுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனை வழங்கவேண்டும். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்கூட தமிழக அரசு ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். காலத்திற்கேற்ற சட்டங்களை இயற்றவேண்டியது அரசின் கடமையாகும்'' என்கிறார்.

இனிமேலாவது காதல் திருமணத்தில் காவல்துறை அசட்டை காண்பிக்காமல் போதுமான பாதுகாப்பு கொடுத்தால் இதுபோல் ஆணவப் படுகொலைகள் நடக்காது என்பது பலரின் எண்ணம்.

-நா.ஆதித்யா