தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி கட்சிகள் தயாராகிவரும் நிலையில், பிரதான கட்சிகளோடு இதர கட்சிகள் வைக்கும் கூட்டணியில் நாம் எத்தனை இடங்கள் கேட்கவேண்டும் என்பது குறித்தும், விவாதிக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், “""பா.ஜ.க., பா.ம.க. இருக்குமிடத்தில் நாங்கள் இருக்கமாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். எண்ணிக்கை பற்றி பிரச்சினை வந்ததில்லை. எண்ணிக்கை பற்றி கட்சியினரும் பேசியதில்லை. எனவே இடங்களை கேட்டுப் பெறுவதில் பிரச்சினை வராது''’என்று கூறினார்.
அவருடைய இந்த கருத்துக்குப் பதிலளிக்கும்விதமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “""எத்தனை தொகுதிகள் இருந்தால் ஏற்றுக் கொள்வது என்பது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கவேண்டிய முடிவே தவிர, தோழமைக் கட்சிகளோ, கூட்டணிக்குத் தலைமை தாங்குகிற கட்சியோ எங்களுக்கு உத்தரவிட முடியாது. தேர்தலைச் சந்திக்கப்போகும் கட்சிகள் தாங்கள் கூட்டணி வைக்கும் பிரதான கட்சிகளிடம் அவரவர் கட்சிக்கான கூடுதல் தொகுதிகளை அனைவரும் கேட்கத்தான் செய்வார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கட்சியில் பிளவு ஏற்படாதா,… யாராவது ஒருவர் இங்குவந்து சேரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். கூடுதல் தொகுதி வேண்டும் என் பதுதான் எங்கள் நிலைப்பாடு. தொகுதி எண் ணிக்கை பற்றி நாங் கள் பேசவில்லை.
தி.மு.க. கூட் டணியில் அதிக தொகுதிகள் கேட்டவர்களெல்லாம் இப்போது குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும் கூட்டணியில் இருப்போம் என கூறிவருகிறார்கள். தோழர் திருமாவளவன், தன் நிலைப்பாட்டை மாற்றி மாற்றிப் பேசிவருகிறார். தொகுதிகளைக் குறைத்து நிற்பதற்கு யாரும் விரும்பமாட்டோம். ஏற்கனவே இருந்த இடங்களைவிட குறைத்து நிற்பதற்கு எந்த கட்சியும் விரும்பாது''’என்றார்.
ம.தி.மு.க. அதிக தொகுதிகள் கேட்டதால் அதன் மாவட்டச் செயலாளர்கள் இரண்டு பேரை தி.மு.க. தன் பக்கம் இழுத்துள்ளது.
""கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க.தரப்பில் அழுத்தம் தரப்படுகிறதா?'' என கேட்டபோது, “""தி.மு.க. தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் எங்களுக்கு இல்லை. என்ன கேட்கவேண்டும், எத்தனை தொகுதிகள் இருந்தால் ஏற்றுக்கொள்வது என்பது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கவேண்டிய முடிவு''’என்றார்.
அரசியலில் எல்லா நிலைப்பாடுகளும் மாற்றத்திற்கு உட்பட்டதுதான். பேசிப் பேசித்தான் தெளிவுக்கு வரவேண்டும். கூட்டணிக் கட்சிகளை தி.மு.க. எப்படி சமாளிக்கப்போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.