நவம்பர் 10, திங்கள்கிழமை மாலை 6.52 மணிக்கு இந்தியத் தலை நகரான டெல்லியின் செங்கோட்டை யருகே திடீரென ஹூண்டாய் ஐ20 கார் வெடித்தது இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது. இந்த கார் குண்டுவெடிப்பில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
வெடித்த காரை ஓட்டிவந்தது காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் உமர்நபி எனத் தெரியவந்துள்ளது. இவர் அதே தினம் திங்களன்று காலை ஃபரிதாபாத் வழியாக டெல்லியில் நுழைந்துள்ளார். மதியம் மூன்று மணியளவில் செங்கோட்டை வளாகத்தை ஒட்டி 3 மணி நேரத்துக்கு காரை நிறுத்திவைத்ததும், மாலை 6.30 மணியளவில் வண்டியை எடுத்ததும் ஏழு மணிக்கு நெருக்கமாக கார் வெடித்ததும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலமாகத் தெரியவந்துள்ளன.
கார் முழுவதுமாக வெடித்துச் சிதறியதால், உமர்நபியின் சிதறிய உடல் துணுக்குகளைச் சேகரித்து, புல்வாமா விலுள்ள உமரின் தாயாரின் டி.என்.ஏ.வுடன் அதை ஒப்பிட்டுப் பார்க்க விசாரணை அதிகாரிகள் முடிவுசெய் துள்ளனர். தேசத்தையே உலுக்கிய நிகழ்வென்பதால் வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டுவருகிறது.
அதேசமயம், காஷ்மீரில் ஜெய்ஷ்இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வழக்கில், ஃபரிதாபாத்தின் அல்பலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முசம்மில் ஷகீலை, போலீசார் திங்களன்று கைதுசெய்தனர். அப்போது விசாரணைக்காக வந்த இடத்தில், முசம்மில் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட், வெடிகுண்டு தயாரிக்கும் உபகரணங்கள் சிக்கியுள்ளது. தவிரவும் இதற்குமுன்பே த
நவம்பர் 10, திங்கள்கிழமை மாலை 6.52 மணிக்கு இந்தியத் தலை நகரான டெல்லியின் செங்கோட்டை யருகே திடீரென ஹூண்டாய் ஐ20 கார் வெடித்தது இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது. இந்த கார் குண்டுவெடிப்பில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
வெடித்த காரை ஓட்டிவந்தது காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் உமர்நபி எனத் தெரியவந்துள்ளது. இவர் அதே தினம் திங்களன்று காலை ஃபரிதாபாத் வழியாக டெல்லியில் நுழைந்துள்ளார். மதியம் மூன்று மணியளவில் செங்கோட்டை வளாகத்தை ஒட்டி 3 மணி நேரத்துக்கு காரை நிறுத்திவைத்ததும், மாலை 6.30 மணியளவில் வண்டியை எடுத்ததும் ஏழு மணிக்கு நெருக்கமாக கார் வெடித்ததும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலமாகத் தெரியவந்துள்ளன.
கார் முழுவதுமாக வெடித்துச் சிதறியதால், உமர்நபியின் சிதறிய உடல் துணுக்குகளைச் சேகரித்து, புல்வாமா விலுள்ள உமரின் தாயாரின் டி.என்.ஏ.வுடன் அதை ஒப்பிட்டுப் பார்க்க விசாரணை அதிகாரிகள் முடிவுசெய் துள்ளனர். தேசத்தையே உலுக்கிய நிகழ்வென்பதால் வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. மேற்கொண்டுவருகிறது.
அதேசமயம், காஷ்மீரில் ஜெய்ஷ்இ முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வழக்கில், ஃபரிதாபாத்தின் அல்பலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முசம்மில் ஷகீலை, போலீசார் திங்களன்று கைதுசெய்தனர். அப்போது விசாரணைக்காக வந்த இடத்தில், முசம்மில் வாடகைக்குத் தங்கியிருந்த வீட்டில் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட், வெடிகுண்டு தயாரிக்கும் உபகரணங்கள் சிக்கியுள்ளது. தவிரவும் இதற்குமுன்பே தனது காரை வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களை கடத்திவரப் பயன்படுத்தியதாகவும், தீவிரவாத அமைப்பில் பெண்களைச் சேர்ப்பதற்கான நபராக செயல் பட்டதாகவும் கூறி, லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத்தை கைது செய்துள்ளனர். மேலும், அல் பலா கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியர் முகம்மது இஸ்தியாக் வீட்டில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்கள் தவிர பர்வேஸ் அன்சாரி, மோல்வி இர்பான், அடில் ரதேர் ஆகியோரும் வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பர்வேஸ் அன்சாரி, ஷாஹீனின் தம்பி எனத் தெரியவந்துள்ளது. அடில் ரதேர் கைதுதான் மற்றவர்களின் கைதுக்கு வழி வகுத்துள்ளது.
மேற்சொன்ன முசம்மில் குழுவைச் சேர்ந்தவர்தான் உமர் நபி. முசம்மில் உள்ளிட்டவர்கள் போலீஸிடம் சிக்கியது ஏதோ ஒருவிதத்தில் உமர் நபிக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து தானும் போலீஸிடம் சிக்கிவிடக் கூடாது என்ற பதட்டத்தில் உமர் இருந்திருக்கிறார். அப்படி எதுவும் நடக்கும்முன் வந்த காரியத்தை நடத்திவிடவேண்டும் என்ற நோக்கத்தில் நவம்பர் 10-ஆம் தேதி மாலை தன் காரை எடுத்து வெடிக்கச் செய்திருக்கிறார் என காவல்துறை தரப்பில் யூகிக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/delhi-incident1-2025-11-13-16-34-47.jpg)
இந்நிலையில் டெல்லி கார் குண்டு வெடிப்பையடுத்து செங்கோட்டை பகுதியில் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள சில மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து காவல்துறை, "முசம்மில் கைதானபோதும், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதும் உமர்நபி சந்தேக வளையத்தில் இல்லை. உமர்நபி சந்தேக வளையத்தில் வந்தபோது ஃபரிதாபாத்தை விட்டு தப்பியிருந்தான். காரில் வெடித்த குண்டு முழுமையாக உருவாக்கப்படவில்லை. அவசர அவசரமாக அரைகுறையாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் வெடிகுண்டின் தாக்கம் அத்தனை பெரிதாக இல்லை''’என்கிறது.
காவல்துறையைச் சேர்ந்த இன்னும் சிலரோ, "இது தற்கொலைத் தாக்குதலா,… இல்லையா என்பதை முடிவுசெய்ய இது சரியான சமயம் இல்லை. ஃபாரன்சிக் ரிப்போர்ட், வெடிப்பு நடந்த இடத்தில் கிடைத்த பொருட்களின் தன்மை போன்றவை வரவேண்டும். தவிரவும் கார் ஒரு போக்குவரத்து சிக்னல் அருகே வேகம் குறைத்தபோது வெடித்திருக்கிறது. தற்கொலை தாக்குதலாயிருந்தால் மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்திலோ, காவலர்கள், ராணுவத்தினர் இருக்கும் இடத்திலோ வெடிக்கவைத்து ஏற்படுத்தி சேதத்தை அதிகரிக்கவே நினைப்பார்கள். அதனால் அவசர முடிவுகளுக்கு இப்போதே வரவேண்டிய தில்லை''’என்கிறார்கள்.
வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் குறித்து விசாரணையை முடுக்கிய என்.ஐ.ஏ., பதிவெண்ணை வைத்து காரின் ஜாதகத்தை அலசியது. இந்தக் காரை முதலில் வைத்திருந்தது குருகிராமைச் சேர்ந்த முகமது சல்மான். ஒன்றரை ஆண்டுக்கு முன் சல்மான், தேவேந்திரா என்பவருக்கு விற்றிருக்கிறார். பின் அரியானாவைச் சேர்ந்த ஒருவர் வாங்கியிருக்கிறார். அவரிடமிருந்து புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவர் வாங்கியிருக்கிறார். அவரிடமிருந்து உமர் காரை வாங்கியுள்ளார்.
வெடிப்பு நடந்த இடத்தில் ஒரு புதுமையான சிலிண்டரும் கிடைத்துள்ளது. அது வழக்கமான சமையல் எரிவாயு சிலிண்டர் அல்ல. அது எங்கிருந்து வந்தது…? அதன் பயன்பாடு என்ன? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடந்த கார் வெடிகுண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 5 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். டெல்லியைச் சேர்ந்த ஒருவரும் பலியாகியுள்ளார். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/delhi-incident2-2025-11-13-16-35-30.jpg)
இதற்கிடையில் கார் வெடி விபத்தில் சிதறிப்போன உமர்நபிக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், வெடி விபத்தில் இறந்த முகமது உமர்நபி, வெடிபொருட்களை வைத்திருந்த முசம்மில் ஷகீல், கைதான அப்துல்ஹமீது, ஷாஹீன் என அனைவருமே மருத்துவர்கள்.
உயிரைக் காக்கவேண்டியவர்கள், மக்கள் உயிரை எடுக்க குண்டு வைத்திருக்கிறார்கள். வொயிட் காலர் பணியிலிருப்பவர்கள், இத்தகைய கறுப்புச் செயல்களில் ஈடுபட்டிருப்பது பலரையும் அதிரவைத்திருக்கிறது.
அதேசமயம், நடந்த குண்டு வெடிப்பு வழக்கமான ஆர்.டி.எக்ஸ். குண்டு வெடிப்பா, வேறு வகையான குண்டு வெடிப்பா என்பது காவல்துறையால் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை.
சம்பவம் நடந்த அன்றுதான் முசம்மில் ஷகீல் போன்றோர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அக்டோபர் முதலே காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரித்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஷாஹீன் கைதுசெய்யப்பட்டார். ஷாஹீனின் கார் வெடிபொருட்களை கடத்த உதவியுள்ளதாக போலீஸ் கூறுகிறது. அப்படியிருக்க, சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருந்தால் உமரையும் கைது செய்திருக்க முடியும். ஆக, உமர் விவகாரத்தில் போலீஸ் கோட்டை விட்டதா?
அல் பலா கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு பேராசிரியர் முகம்மது இஸ்தியாக் வீட்டில் 2,900 கிலோ வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இத்தனை பெரிய அளவில் வெடிமருந்து சேகரிக்கப்படும் வரை உளவு அமைப்புகள் என்ன செய்துகொண்டிருந்தன?. இவை வெடிபொருட்களாக மாற்றப்பட்டு வெடிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? -என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, "இந்தியாவுக்கு முழுநேர வெறுப்புப் பிரச்சார அமைச்சரல்ல, திறமையான உள்துறை அமைச்சரே தேவை'' என்றும்,” கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, "உளவுத்துறை தோல்வியால் இன்னும் எத்தனை பேர் இறக்கவேண்டும். சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அமித்ஷா உடனடியாக பதவி விலகவேண்டும்''’என்றும் குரலெழுப்பி யுள்ளனர்.
காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் பவன்கெராவோ, "குண்டுவெடிப்பு குறித்து ஒன்றிய அரசிடமிருந்தோ, உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ எந்த தெளிவு படுத்தலும் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம்''” என அமித்ஷாவை ஒரு பிடி பிடித்துள்ளார்.
பா.ஜ.க, 2014-ல் ஆட்சிக்கு வந்தது முதல் பதான்கோட் விமானப்படை தாக்குதல், உரி ராணுவ தாக்குதல், அமர்நாத் யாத்திரை தாக்குதல், பஹல்காம் தாக்குதல், தற்போது டெல்லி குண்டுவெடிப்பு என பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியின்போது விமர்சித்து உரக்கக் குரல் கொடுத்த மோடியும், அமித்ஷாவும் இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறார்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us