ரசு வேலைக்காக காத்திருக்கும் சுமார் 4 லட்சம் இளைஞர்களின் கனவுகளை சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள் நிர்வாகத்தில் இருப்பவர்கள்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைகளுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 68 லட்சம் பேர். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் 86 ஆயிரம் பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரும் காத்திருக்கிறார்கள். 24 முதல் 35 வயதுவரை உள்ளவர்கள் 25 லட்சம் பேரும், 36 முதல் 50 வயது வரை 12 லட்சம் பேரும் உள்ளனர். இது தவிர, மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரம் பேர்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தைக் கடந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இன்றைய சூழலில், அரசுத் துறைகளில் கிளரிக்கல் போஸ்டிங் தொடங்கி பல்வேறு நிலை உயரதிகாரிகள் வரை சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

tnpsc

Advertisment

இந்த பதவிகளை நிரப்புவதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-3 , குரூப்-4 என வகைப்படுத்தி பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைப்பது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய பணி. ஆனால், கடந்த 2 வருடங்களாக தேர்வாணையத்தின் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. தி.மு.க. ஆட்சியிலும் இந்த பணிகள் வேகம் எடுக்கவில்லை என்கின்றனர் போட்டித் தேர்வுகளுக்காகவே காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்.

நம்மிடம் பேசிய அவர்கள், "2018-ல் அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வுகள் அடிக்கடி தள்ளி வைக்கப்பட்டே வந்தது. சில பதவிகளுக்காக மட்டும் 2019-ல் தேர்வுகள் நடந்தன. ஆனால், அதற்கு பிறகு பல அறிவிப்புகள் வந்ததே தவிர, தேர்வுகளே நடக்கவில்லை. குறிப்பாக, கம்பைண்ட் சிவில் சர்வீஸ் (குரூப்-1), கம்பைண்ட் சிவில் சர்வீஸ் (குரூப்-3), கம்பைண்ட் சிவில் சர்வீஸ் (குரூப்-4), அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் காமர்ஸ் (டெக்னிக்கல்), தோட்டக்கலைத்துறையின் உதவி இயக்குநர், வேளாண்துறையில் உதவி விவசாய அதிகாரி, கம்பைண்ட் இன்ஜினியரிங் சப்பார்டினேட் சர்வீஸ், கம்பைண்ட் ஸ்டேட்டிடிக்ஸ் சர்வீஸ், கம்பைண்ட் ஜியாலஜி சர்வீஸ், நகர திட்டமைப்பு துறையில் உதவி இயக்குநர், பொதுப்பணித்துறையில் ட்ராப்ட்ஸ்மேன், கால்நடை உதவி சர்ஜன்ஸ், மீன் வளத்துறை உதவி இயக்குநர், வேலைவாய்ப்புத்துறை பிரின்சிபல், பெண்கள் சிறையில் பெண் வார்டன், இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு-1 நிர்வாக அதிகாரி, கருவூலத்துறையில் கணக்காளர், மாவட்ட கல்வி அதிகாரி, தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் உள்பட 42 இனங்களில் உள்ள பதவிகளை நிரப்புவதற்காக 2019, 2020 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு 2021-ஜனவரியில் இதற்கான தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், நடத்தப்படவே இல்லை.

தி.மு.க. ஆட்சி வந்ததும் அரசுப் பணிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், சொற்ப எண்ணிக்கை உள்ள ஓரிரு பதவிகளுக்கு மட்டுமே தற்போது அறிவிப்பு செய்யப்பட்டு அடுத்தாண்டு ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளை நடத்துவதில் கடந்த எடப்பாடி அரசு எப்படி மந்தகதியில் செயல்பட்டதோ, அதே சுணக்கம் தி.மு.க. ஆட்சியிலும் நடக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.

Advertisment

குரூப்-1 சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் சிலர், எங்களின் பெயர்களை குறிப்பிட்டு விடாதீர்கள் என்ற கண்டிஷனோடு நம்மிடம் பேசிய போது, ’"ஒவ்வொரு வருடத்தின் திட்டப்படி தேர்வுகளை நடத்தி அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய தேர்வாணையம், போட்டித் தேர்வுகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்துவதில் அக்கறை காட்டுவதில்லை. குரூப்-1 சர்வீஸ் தேர்வுகளுக்காக மட்டுமே சுமார் 20 லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கிறார்கள். அரசுத் தேர்வு குறித்த எந்தவித அட்டவணையையும் வெளியிடாமல் மௌனம் சாதிக்கிறது தேர்வாணையம். இது குறித்து தேர்வாணையத்தில் விசாரித்தால் யாருமே அக்கறையாக பதில் சொல்வதில்லை. அலட்சியமாக கடந்து சென்றுவிடுகின்றனர்.

ddநிதி நெருக்கடி, கொரோனா நெருக்கடி என சொல்லி 2 வருடங் களாக கடத்திவிட்டனர். ஆனால், இதே கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தங்களுக்குரிய தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசின் பணியாளர் தேர்வாணை யத்தின் அக்கறையற்ற நிலைப்பாடு கவலையடைய வைக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழுக்கான தகுதித் தேர்வு கொண்டுவரப்படும் என கடந்த சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான பாடத்திட்டம் கூட (சிலபஸ்) இன்று வரை அறிவிக்கப்படவில்லை. அதேபோல, இந்தாண்டு ஜனவரியில் குரூப்-1 க்கான முதல்நிலை தேர்வு நடந்து முடிந்த நிலையில், அதற்கான முதன்மைத் தேர்வு இன்று வரை நடக்கவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்த கடந்த 5 மாதங்களாக முக்கிய போட்டித் தேர்வுகளுக்கான எந்த அறிவிப்புமே வராதது எங்களுக்கு ஏமாற்றமே'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்வாணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஆணையத்தின் சேர்மன் மற்றும் 15 உறுப்பினர்களை கவர்னர் நியமிப்பார். தமிழக அரசின் சிபாரிசின்படி இந்த நியமனங்கள் நடக்கும். கடந்த ஆட்சியில், சேர்மனாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அதேபோல 7 உறுப் பினர்கள் நியமிக்கப்பட்டதில் எழுந்த சர்ச்சைகளால் சிலரின் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகுமார், பாலுசாமி ஆகிய 2 பேர்தான் உறுப்பினர்களாக இருந்தனர். தி.மு.க. ஆட்சி வந்ததும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், டாக்டர் அருள்மதி, பாதிரியார் ராஜ் மரியசூசை ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டனர். இன்னும் 9 உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும்.

உறுப்பினர்களாக இருப்பவர்கள், தேர்வாணையத்தின் முக்கிய பணிகளை கண்காணிக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டனவா? எந்தெந்த பதவிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்படாமல் இருக்கிறது? அறிவிப்பு கொடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பது என்னென்ன? என்றெல்லாம் கவனித்து, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எந்த இடத்தில் தேக்கம் இருக்கிறதோ, அதை சரி செய்ய வேண்டும். அத்தகைய செயல்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் உறுப்பினர்களை நியமித்த கையோடு கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப் படாததால் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வயதில் 2 ஆண்டுகள் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. இதைத்தாண்டி, அரசு பணியிடங்களை நிரப்புவதில் வேகம் காட்டாத போக்கு தேர்வாணையத்தில் நிலவுகிறது. அரசுக்குள்ள நிதி நெருக்கடியால் போட்டித் தேர்வுகளை விரைந்து நடத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன'' என்று விவரிக்கிறார்கள்.

பணியாளர்கள் தேர்வுகளில் காலதாமதம் ஏற்படுவது குறித்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், "குறிப்பிட்ட கால வரையறைக்குள் பணியாளர்கள் தேர்வினை நடத்தி முடிக்கப்படவில்லையெனில், அது அர்த்தமற்றதாகிவிடும்'' என்று தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில்... தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் போட்டித் தேர்வுகளை நடத்துவதில் நிலவும் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்வாணையத்தின் சேர்மன் பாலச்சந்திரனின் கருத்தறிய, ஆணையத்தின் அலுவலகத்தை நாம் பலமுறை தொடர்புகொண்டபோதும் அலுவலக எண் பிஸியாகவே இருக்கிறது.

"போட்டித் தேர்வுகளுக்காகவே தயாராகிக்கொண்டிருக்கும் எங்களின் கனவுகளை தமிழக அரசு சிதைத்துவிடக்கூடாது' என்கிறார்கள் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள்.