அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் நான் தான் என கொடி பிடிக்கும் சசிகலா, சென்னைக் குள் வரும் போது பிரமாண்ட வரவேற்பை தர வேண்டும் என்கிற செயல் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார் தினகரன். சென்னையின் எல்லைக்குள் துவங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை அந்த வரவேற்பு இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைகளும் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. இதனையறிந்து, பராமரிப்பு பணிகளைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா நினைவிடத்தை அவசரமாக மூடிவிட உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சசிகலாவிடம் தினகரன், ""எடப்பாடியின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது சித்தி. சென்னைக்குள் வந்ததும் நீங்கள் அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செய்வீர்கள் என தெரிந்து நினைவிடத்தை மூடியிருக்கிறார்'' என சொல்லியுள்ளார். அதற்கு சசிகலா, ""துரோகிகள் என்னிடமே அரசியல் செய் கிறார்களா? தடையைமீறி உள்ளே நுழைவோம். என்னை யார் தடுக்கிறார்கள் என பார்ப்போம்'' என ஆவேசப் பட்டுள்ளார் சசிகலா. ""போலீஸாரால் தடுக்கப்பட்டால், நினைவிட வாசலிலேயே சசிகலாவின் தர்மயுத்தம் நடக்கும். அனுமதிக்கப்பட்டால் ஜெயலலிதா சமாதியில் மீண்டும் ஒரு சபதத்தை எடுப்பார்'' என்கிறார்கள் தினகரன் தரப்பினர். ""உன்னிடம் நான் சொன்ன விசயம் எந்தளவுக்கு இருக்கிறது?'' என தினகரனிடம் சசி கேட்க, அது குறித்த தகவல்களை அவரிடம் ஒப்புவித்துள்ளார் தினகரன்.
அதாவது, சசிகலாவின் உத்தரவின்பேரில் அமைச்சர் கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரிடமும் பேசும் தினகரன், சென்னைக்கு சசிகலா வந்ததும் அவரை சந்திக்க வர வேண்டும் என அழைத்ததில் பலரும் ஓ.கே. சொல்லியிருப்பதாக சசிகலாவிடம் தெரிவித்திருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் இதனை பகிர்ந்து கொண்ட தினகரன், ’சின்னம்மாவும் ஓ.பி.ஸ்.சும் பேசியிருக்கிறார்கள். அதனால், சின்னம்மாவை வரவேற்க ஓ.பி.எஸ்.சே நேரில் வந்தாலும் ஆச்சரியமில்லை’என்று தெரிவித்ததாக அ.ம.மு.க. வட்டாரம் பரப்பி வருகிறது.
இதற்கிடையே, சசிகலாவின் மூவ்களை கண்காணித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் தகவல்களை சேகரித்து வருகிறார். இதுகுறித்து தனது நலன் விரும்பிகளிடம் மனம் திறக்கும் எடப்பாடி, ""அந்தம்மா (சசிகலா) சென்னையில் இருந்தாலும் சரி; எங்கிருந்தாலும் சரி. உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். தினகரன் சொல் பேச்சுக் கேட்டு அரசியல் நடவடிக்கைகளில் இறங்கினால் அது அவருக்குத்தான் எதிர்மறையாகப் போகும். நாடாளுமன்ற தேர்தலில் 5 சதவீதம் ஓட்டு வாங்கிய அ.ம.மு.க., விக்ரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்ததால் அதன் ஓட்டுகள் 2 சதவீதமாக சரிந்திருக்கும். அதனால்தான் தினகரன் புறக்கணித்தார். சட்டமன்ற தேர்தலிலும் அதே நிலை வரும் என்பதால் தான் அ.தி. மு.க.வோடு இணைப்பு என பரப்பி வருகிறார் தினகரன்.
பார்வர்ட் ப்ளாக் கட்சி போல அ.ம.மு.க.வின் செல்வாக்கு எதிர்காலத்தில் 2 சதவீதத்தில் முடங்கிவிடும். அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காதவர்கள் மட்டுமே அவர்களுக்கு பின்னால் ஓடுவார்கள். என் மீதான எதிர்ப்பு 2%தான். அந்த வாக்குகள் தினகரனுக்கும் போகலாம்; ஸ்டாலினுக்கும் போகலாம். அதனால் அந்தம்மாவை (சசிகலா) மையப்படுத்தி நடக்கும் அரசியல் நம்மை பாதிக்காது'' என்று சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க-அ.ம.மு.க கணிப்புகள் பற்றி அரசியல் விமர்சகரான வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமி, ""நாடாளுமன்ற தேர்தலில் 18.5 சதவீத வாக்குகளை எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வும், 5.5 சதவீத வாக்குகளை தினகரனின் அ.ம.மு.க.வும் வாங்கியது. சசிகலாவை முன்னிலைப்படுத்திய தினகரன் தரப்பு வாங்கிய ஓட்டுகளே அவ்வளவுதான். இடைத்தேர்தலை புறக்கணித் ததால் தினகரன் மீதான பிம்பமும் தொலைந்து விட்டது. அதனால், சட்டமன்ற தேர்தல் என்கிற இந்த இரண்டாவது ரவுண்டில், 5.5 சதவீதம் என்பது 2 சதவீதமாக குறைந்துவிடும் என கணக்கிடுகிறார் எடப்பாடி. தினகரனோ, சசிகலா தற்போது வெளியே வந்திருப்பதால் 5.5 என்பது இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கிறார். ஆளுமைமிக்க தலைவராக சசிகலா தன்னை இன்னும் நிரூபிக்கவில்லை. சசிகலாவைவிட இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் அ.தி.மு.க. வின் வாக்கு வங்கியும் இருக்கும். அதனால் எடப்பாடி கவலைப்படவில்லை'' என்கிறார்.
வாக்கு சதவீதம் எப்படி இருந்தாலும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா தான்; அவரை நீக்கியது செல்லாது; விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்கிற கோதாவில் குதித்துள்ளது தினகரன் தரப்பு. ஆனால், பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததே சட்டவிதி மீறல் என்கிற போது தினகரன் தரப்பு சொல்லி வருவது எந்த சூழலிலும் ஜெயிக்கப் போவதில்லை என்கிறார்கள் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள்.
பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியிடம் இதுகுறித்து நாம் பேசிய போது, ""அ.தி.மு.க.வின் சட்டவிதிகளின்படி, கட்சியின் பொதுச்செயலாளரை கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச்செயலாளர் இல்லாதபோது அவரால் நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் அல்லது தலைமைக்கழக நிர்வாகிகளின் வசம் அதிகாரம் செல்லும்.
அதிகாரங்களை மாற்றியமைக்கும் அதிகாரங்கள் பொதுக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் பொதுச்செயலாளர் நியமனத்தில் மட்டும் எந்த மாற்றமும் செய்ய முடியாது என கட்சியின் சட்ட விதிகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இடைக்கால ஏற்பாடாக சசிகலாவை பொதுச்செயலாளராக கட்சியின் பொதுக்குழு நியமித்தது. இது சட்டவிரோதம் என்பதால்தான் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதேபோல, ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்புக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவியை காலி செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் என்று சட்டவிதிகளை திருத்தியதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதேபோல சசிகலாவும் வழக்கு போட்டுள்ளார்.
இது தொடர்பான ஒரு வழக்கில், அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் அதிகார உரிமையை யாரும் பறித்துவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். எனவே, கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்காமல் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது. அப்படியிருக்க பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் சொந்தம் கொண்டாட முடியாது. இறுதிக்கட்டத்தில் உள்ள எனது வழக்கு 18-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்'' என்கிறார் உறுதியாக.
இதுமட்டுமல்ல, கட்சியின் முக்கிய பதவிகளுக்கு வருபவர்கள் 5 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக முழுமையாக தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க.வின் சட்டவிதிகள் கூறுகின்றன. அதனால் முக்கிய பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதியையும் சசிகலா இழந்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டு கிறார்கள். சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 12 பேரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 2011 டிசம்பர் 19-ந்தேதி அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா. கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் சசிகலாவை பிறகு ஜெ. திரும்ப அழைத்துக் கொண்டார். இதற்காக சசிகலாவின் கடிதம் ஒன்றும் அப்போது வெளியானது. ஆனாலும், கார்டனுக்குத் திரும்பிய சசிகலா மீண்டும் கட்சி உறுப்பினரானது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
2016, டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மறைந்ததையடுத்து டிசம்பர், 29-ல் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டு பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. டிசம்பர் 31-ந்தேதி கட்சி தலைமையகத்தில் முறைப்படி அப்பொறுப்பை ஏற்றார் சசிகலா.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. வழக்கறி ஞர்கள்,’""கார்டனுக்குள் மீண்டும் சசிகலாவை இணைத்து கொண்ட 2012, மார்ச் 31-ந்தேதியிலேயே கட்சி உறுப்பினராகவும் அவர் சேர்ந்து விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். கட்சி விதிகளின்படி 5 வருடம் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் மட்டுமே கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வரமுடியும். அந்த வகையில் பொதுச்செயலாளராக அவர் பொறுப்பேற்ற 2016, டிசம்பர் 31-ந்தேதியை கணக்கிடும்போது 5 வருடம் பூர்த்தியாகவில்லை. அதனால் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்டதும், அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும் செல்லுபடியாகாது. அதனால், பொதுச்செயலாளர் என கட்சிக்கு உரிமை கோரினாலோ அல்லது இரட்டை இலையை முடக்க முயற்சித்தாலோ இதனை சுட்டிக்காட்டி அ.தி.மு.க.வை கைப்பற்ற துடிக்கும் சசிகலாவின் திட்டத்தை முறியடிக்க எடப்பாடி ஆலோசிப்பதாகத் தெரிகிறது'' என்கிறார்கள்.
படங்கள் : ஸ்டாலின், அசோக், குமரேஷ்