திண்டுக்கல் மாவட்டத்தின் வத்தலக் குண்டு நகரைச் சேர்ந்த நாகராஜ், பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர். இவரது முதல் மனைவியான பாண்டியம்மாளின் மகன் மணிகண்டன். பாண்டி யம்மாள் இறந்ததால் நாகராஜ் மறுமணம் செய்து கொண்டார். நாகராஜுக்கு அதன்மூலம் சபரீஸ்வரன் என்கிற மகனும் உண்டு.. வத்தலக்குண்டில் ஆட்டோ ஓட்டி வந்த மணிகண்டனுக்குப் போதிய வருமானம் கிடைக்காமல் போனதால், தம்பியான சிறுவன் சபரீஸ்வரனையும் நெல்லைக்கு அழைத்துக் கொண்டு, தாய்மாமன் ஐயப்பனின் லோடு ஆட்டோவின்மூலம் காய்கறி விற்பனை செய்திருக்கிறான்.

dd

இந்தச் சூழலில் கடந்த மே, 9-ஆம் தேதிக்குப் பிறகு, தந்தை நாகராஜூக்கு மணிகண்ட னிடமிருந்து போன் வாரமல் போகவே, சந்தேக மடைந்த நாகராஜ், தனது உறவினர்களிடம் கூறி ஐந்து நாட்களாகத் தனது மகன்கள் இருவரையும் தேடியலைய, அவர்கள் பயன்படுத்திய லோடு ஆட்டோ சுத்தமல்லிப் பகுதியின் ரிமோட் ஏரியாவின் பாரதிநகர் ரயில்வேகேட் பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்தது தெரியவந்தது. அதனையடுத்து மே 16-ஆம் தேதியன்று உறவினர்கள் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜீன்குமாரும், போலீசாரும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுத்தமல்லியைச் சேர்ந்த சதீஷ்குமார், அவனது தம்பி பார்த்திபன் ஆகி யோர், சகோதரர்களான மணிகண்டன், சபரீஸ்வரனை அடுத்தடுத்து அழைத் துச் செல்வது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, சதீஷ்குமார், பார்த்திபன் இருவரையும் போலீசார் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பகட்ட விசாரணையிலேயே, மணிகண்டனையும், சபரீஸ்வரனையும் கழுத்தை நெறித்துக் கொன்றதை ஒப்புக்கொண்ட சதீஷகுமாரும், பார்த்திபனும், தங்களின் கஞ்சா விற்பனைத் தொழிலைப் போலீசிடம் மணிகண்டன் தெரிவித்ததால் அவர்களிருவரையும் கழுத்தை நெரித்துக் கொன்றதையும், நடந்தவற்றையும் துளியும் அச்சமின்றித் தெரிவித்துள்ளனர்.

பின்னர், கொலை ஸ்பாட்டான கொண்டா நகரம் ரயில்வேகேட்டை அடுத்த ராகவேந்திர கோவி லின் பின்பகுதியி லுள்ள குன்றின் பாழடைந்த கட்டிடத்தில், கை, கால்கள் துணியினால் கட்டப்பட்டு, அழுகி வீச்சமெடுத்த நிலையில் மணிகண்டனின் உடலை மீட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவனது தம்பி சபரீஸ்வரனின் உடலைத் தேடியபோது அது கிடைக்கவில்லை. மாறாக அந்தப் பகுதியில் ஆங்காங்கே எலும்புகள் சிதறிக் கிடந்துள்ளன. சற்றுத் தொலைவில் மண்டை ஓடு கிடந்திருக்கிறது. அதனையொட்டிக் கிடந்த சபரீஸ்வரனின் சட்டை யையும் கைப்பற்றிய போலீசார், கைப்பற்றப்பட்ட எலும்புகளும் மண்டையோடும் சிறுவன் சபரீஸ் வரனுடையதுதானா என்பதைக் கண்டறியும் பொருட்டு சென்னையிலுள்ள உடற்கூறு மற்றும் ஃபாரன்சிக் ஆய்வு மையத்திற்கு சூப்பர் இம்போ சிஸிற்காக அனுப்புகிற நிலையில் உள்ளனராம்.

Advertisment

dd

சிறுவன் சபரீஸ்வரனின் உடலைக் காட்டு நாய்கள் இழுத்துச்சென்று சதைகளனைத்தையும் தின்று விட்டு எலும்புகளை மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றன என்று விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்தியதுதான் ரத்தம் உறைய வைக்கிற சங்கதி. கொடூரமான கொலை வெறியின் உள் நோக்கம் குறித்து விசாரிக்கையில், "மணிகண்டன், சபரீஸ்வரனுக்கு தள்ளுவண்டியில் பழம் விற்று வந்த சுப்பையாவின் நட்பு கிடைத்திருக்கிறது. அவர் மூலம், மணிகண்டனுக்கு அவரது மகன்களான சதீஷ்குமார், பார்த்திபனின் சிநேகம் கிடைக்க, மூன்று பேரும் சகாக்களாயிருக்கின்றனர். இந்த நட்பின் விளைவு மூன்று பேரும் ஒன்றாக இணைந்து சரக்கு அடிப்பது வழக்கமாம். இந்நிலையில் சுப்பையாவுக்கு பழ வியாபாரம் கைகொடுக்கவில்லை என்பதால் அவர் தனது சொந்த ஊரான கயத்தாறுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் அவருக்குச் சொந்தமான சுத்தமல்லியிலிருக்கும் வீட்டில் சதீஷ்குமாரும், பார்த்திபனும் தங்கிக்கொண்டு வேலையில்லாமல் விடலைகளாகத் திரிந்துள்ள னர்.

சதீஷ்குமார், சரக் கடித்துவிட்டு அடிதடி யிலிறங்குவதும், திருடுவதும் அவ்வப்போது நடந் தேறியதால் சுத்தமல்லி, நெல்லை டவுண் காவல் லிமிட்களில் வழக்காகி, ஜெயில் சகவாசத்தால் தேர்ந்த கிரிமினலாக மாறியுள்ளான். வெளியே வந்தவனுக்குப் பணப் புழக்கம் குறைந்து போனதால், பணத்துக்காகக் கஞ்சாப் பொட்டல வியாபாரத்திலிறங்கியவன், தன்னுடைய சுத்தமல்லிப் பகுதியில் வைத்துக் கொண்டால் மாட்டிக்கொள்வோம் என்பதால், அருகிலுள்ள பேட்டை, நெல்லை, டவுன் பகுதிகளில் நீண்ட நாட்களாகப் பொட்டல வியாபாரத்தை நடத்திவந்திருக்கிறான்.

இச்சமயத்தில், வெங்காய வியாபாரம் செய்துவந்த மணிகண்டனின் நட்பு சதீஷ் குமாருக்கும் பார்த்திபனுக்கும் கிடைத்திருக்கிறது. மணிகண்டனுக்குக் கடனாகக் கொடுத்த பத்தாயிரம் பணத்தைத் திரும்பக் கேட்டதில் சதீஷ்குமாருக்கும் மணிகண்டனுக்கும் வாக்குவாதமாகி, கைகலப்பாக, சதீஷ்குமாரின் கஞ்சா வியாபாரம் குறித்த அனைத்து விவரத்தையும் பேட்டை காவல் நிலையத்தில் போட்டுக் கொடுத்திருக்கிறான் மணிகண்டன். அதன்காரணமாக சதீஷ்குமார் போலீஸில் பிடிபட்டு ஜெயிலுக்குச் சென்று பிணையில் வெளிவர, ஆள்காட்டியாகச் செயல்பட்ட மணிகண்டனைத் தீர்த்துக்கட்ட, தம்பி பார்த்திபனுடன் சேர்ந்து திட்டமிட்டான். திட்டமிட்டபடி, மே 10 அன்று மணிகண்டனிடம் நைச்சியமாகப் பேசி கொண்டாநகரம் காட்டுப் பகுதியின் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்ற சகோதரர்கள், அங்கு மணிகண்டனை நன்றாகக் குடிக்க வைத்து, போதை உச்சத்தில் அவனது கை கால்களைக் கட்டிப்போட்டு கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். சிறுவன் சபரீஸ்வரன் இச்சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாதென்பதற்காக அவனையும் கழுத்தை நெரித்துக் கொன்றுபோட்டதை விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள்.

காவல்துறை ஆட்காட்டிகள் படுகொலை செய்யப்பட்டது தென்மாவட்டத்தை அதிர வைத்துள்ளது.

Advertisment