Skip to main content

சூலூரில் பண வெள்ளம்! -வெற்றிக்குப் போராடும் வேட்பாளர்கள்!

முதல்வரின் கவனம் அதிகம் பாயும் தொகுதியான சூலூர் வேட்பாளராக, முன்னாள் எம்.எல்.ஏ. கனகராஜின் சித்தப்பா பையன் கந்தசாமியை களமிறக்கியுள்ளது அ.தி.மு.க. அவருக்கு எதிராக தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியை நிறுத்தியிருக்கிறது தி.மு.க.

"பொங்கலூரா'? என அ.தி.மு.க. கந்தசாமி தரப்பு அதிர்ச்சியடைந்தாலும், அந்த அதிர்ச்சியை அதிகப்படுத்தவேண்டிய பொங்கலூரார் சுறுசுறுப்பு காட்டாதது வெற்றிக்கு பெரிய பின்னடைவு என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

ss


""ஈஸியா ஜெயிக்கவேண்டிய தொகுதி சார் இது. சுவரொட்டி ஒட்ற தோழர்கள், பிளக்ஸ் அடிச்சவங்க, பிரச்சார வண்டிகளை வடிவமைச்சவங்க, பூத் ஆட்கள், வாக்குசேகரிக்கச் செல்கிற உடன்பிறப்புகள் யாருக்கும் ஒத்தப் பைசாகூட கொடுக்கமாட்டேங்கறாரு பொங்கலூர் பழனிச்சாமி. இருந்தாலும் தொகுதிப் பொறுப்பாளர்களாய் இருக்கும் எ.வ.வேலு, ஆ.ராசா, இவங்களுக்கு வேண்டியும், தளபதி தலைமையில தி.மு.க. ஆட்சியில உட்காரணும்ங்கிறதுக் காகவும்தான் நாங்க கைக்காசு செலவுபண்ணி வேலை செய்யுறோம் .

இன்னொரு முக்கியமான விஷயம்... இந்த சூலூர்ல தேவர் ஓட்டுக்கள் அதிகம். கடந்த 2001- 2006 எலெக்சன்ல தி.மு.க. வேட்பாளராய் நின்ற தேவர் கம்யூனிட்டியைச் சேர்ந்த பொன்முடியை தோற்கடிக்க பொங்கலூர் பழனிச்சாமி, அ.தி.மு.க. வேலுச்சாமியோடு சேர்ந்து தி.மு.க.வை தோற்கடித்தார்ங்கிற பேச்சு அச்சமுதாய மக்களிடம் பரவிக்கிட்டிருக்கு. இதைச் சரிசெய்ய எ.வ.வேலு சூலூரில் தேவர் சமுதாய சங்கத்தினரை சமாதானம் செய்ய நினைத்து அழைக்க, வெறும் எட்டு பேர் மட்டுமே அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள, ரொம்பவும் அப்செட் ஆயிட்டாரு எ.வ.வேலு.

இதையெல்லாம் மீறி தளபதி பிரச்சாரம் பெருசா தொகுதிக்குள் எடுபட்டிருக்கு. கூட்டணிக் கட்சிக்காரங்க பலரும் உண்மையா வேலைசெய்யுறாங்க.
dd
சூலூர் தொகுதி தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் என இரண்டாக இருக்கிறது. அதில் வடக்கு ஒன்றியத்தில் மோப்பேரிபாளையம் ஊராட்சித் தலைவராக இருந்த அ.தி.மு.க. தெப்பீஸ்வரன் செ.ம. வேலுச்சாமியின் விசுவாசி.

செ.ம.வுக்கு சீட் கொடுக்கவில்லை என்கிற கோபத்தில் அந்த ஊராட்சி முழுக்க ரெட்டை இலை சின்னத்தை எந்த வீட்டு சுவர்கள்லயும் வரையவே விடலை.

காடம்பாடி ஊராட்சிக்குள்ள வர்ற செங்கத்துறை செ.ம. ஊருங்குறதால அங்கேயும் ரெட்டை இலை வரையப்படலை. அங்குள்ள மக்களும் ரெட்டை இலைக்கு ஓட்டுப்போட தயாரா இல்லை. இதுதெரிஞ்சும் பொங்கலூரார் சுறுசுறுப்பு காட்டாம காசை இறுக்கி முடிச்சு வச்சிருக்கார். அதை பலரும் தலைமைக்குச் சொல்லிச் சொல்லி, இப்பதான் வேலை செஞ்சவங்களோட பணத்தை செட்டில் பண்றதா சொல்லியிருக்கிறாரு. எப்படியாவது தி.மு.க.வை ஜெயிக்க வைக்க முயற்சி செய்றோம் சார்''’என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

எஸ்.பி.வேலுமணிதான் சூலூருக்குப் பொறுப்பு என்பதால், இதை கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு வரிந்துகட்டி வேலை செய்கிறார். கொங்கு மண்டலத்தில் பலவீனமாயிருக்கும் தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளித்துவிடக்கூடாதென முதல்வர், துணைமுதல்வர் என பிரச்சாரம் பலமாக இருக்கிறது.

அவர்களின் பலமே பணம்தான். ஓட்டுக்கு 2000 ரூபாய் என்பது உறுதி. ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுள்ள பகுதிகளில் ஓட்டுக்கு 3,000 ரூபாய் என்கிற கணக்குகளை கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான பி.ஆர்.ஜி. அருண்குமார் வசம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

அந்தப் பணத்தை தேர்தல் ஆணையம் கண்ணுக்குத் தெரியாமல் பட்டுவாடா செய்ய, கோவை வடக்குத் தொகுதி 21- வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் செயலாளரான பி.பி.நாகராஜின் மகன் நல்லமுத்துவை நியமித்திருக்கிறார் அருண்குமார். நல்லமுத்துவின் கரன்சி விநியோகம் பற்றி சொன்னால் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அம்மா இருக்கும்போதே டி.டி.வி. தினகரனுடன் செ.ம.வுக்கு நல்ல பழக்கம் இருக்கு. அந்த நட்புல தினகரன் செ.ம.வைக் கூப்பிட்டு... "எடப்பாடி டீமை விட்டு ஒதுங்கியே இருங்க... நான் சொல்றதுக்கு வேண்டி பரிசுப் பெட்டி சின்னத்துல நிக்கற சுகுமார்கிட்ட 3 கோடியை கொடுத்துருங்க'ன்னு சொன்னதா சொல்றாரு ஒரு அ.தி.மு.க. தொண்டர்.

"செ.ம. 3 கோடியை கொடுத்துவிட்டதனாலதான் நாங்க குடுக்கற மாதிரியே, ஓட்டுக்கு 2000 ரூபாய்னு அடிச்சு வீசுறாங்க தினகரன் ஆட்கள்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர் .

இந்த களேபரங்களுக்கு இடையில்... கமல்ஹாசனின் வேட்பாளர் மயில்சாமியும், சீமானின் வேட்பாளர் விஜயராகவனும்... மண்ணின் மைந்தர்கள் என்ற துணிவோடு தொகுதியை வலம்வருகிறார்கள்.

-அருள்குமார்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்