தமிழ்நாட்டின் மையமாக அமைந்துள்ள திருச்சி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் எந்தெந்த கட்சிகளில் வேட்பாளர்களாக யார் யாருக்கு வாய்ப்பு என்பதைக் காண்போம்.
திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.என்.நேரு, அ.தி.மு.க. வேட்பாளர் பத்மநாபனை, 85 ஆயிரத்து 109 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமைச்ச ரானார். இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினர், பிள்ளைமார், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்று, வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் பல சமூகத்தினர் உள்ளனர். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்வது, பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க முயல்வது ஆகியவை இவருக்கு பிளஸ். "இன்னும் சில திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம்' என்று தொகுதி மக்களிடம் அங்கலாய்ப்பு இருப்பது மைனஸ். தி.மு.க சார்பில் கே.என்.நேருவுக்குத்தான் சீட் என்பதால், அவர் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அ.தி.மு.க சார்பில் மருத்துவ அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் செந்தில், தில்லை நகர் பகுதி கழக செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ஜங்ஷன் பகுதி கழகச் செயலாளர் "நாகநாதர்' ஏ.பாண்டி ஆகியோர் சீட் பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.
அடுத்ததாக, திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமாரை 50 ஆயிரத்து 152 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமைச்சரானார். முக்குலத்தோர், பட்டியலினத்தோர், சோழிய வெள்ளாளர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், யாதவர்கள், முத்தரையர் சமூகத்தினர் வாக்குகளை நிர்ணயிக்குமிடத்தில் உள்ளனர். தி.மு.க. சார்பில் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு தான் சீட் என்கிறார்கள். இருந்தாலும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் சீட் கேட்கிறார். அ.தி.மு.க. சார்பில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற மணிகண்டன், திருவெறும் பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், கூத்தப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி. பாண்டியன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தே.மு.தி.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சி.செந்தில்குமார் சீட் பெற முயற்சிக்கிறார்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. சார்பில் புதுமுகமாக தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.கதிரவன், அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதியில் முத்தரையர், பட்டியல் சமூகத்தினர், கவுண்டர்கள், செட்டியார், ரெட்டியார், இஸ்லாமியர் உள்ளிட்ட சமூகத்தினர், வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/trichy1-2026-01-02-13-29-36.jpg)
தி.மு.க. சார்பில் எஸ்.கதிரவன் மறுபடியும் சீட் கேட்கிறார். முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசனும் சீட் பெறும் ரேஸில் இருக்கிறார். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி, கடந்த எம்.பி. தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிட்ட என்.டி.சந்திரமோகன் ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார்கள்.
துறையூர் (தனி) தொகுதியில், பட்டியலினத்தோர், முத்தரையர், வெள்ளாளர், இஸ்லாமியர் சமூக மக்கள், வெற்றியை நிர்ணயிக்குமிடத்தில் இருக்கிறார்கள். கடந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஸ்டாலின் குமார், அ.தி.மு.க.வின் இந்திராகாந்தியைவிட 22 ஆயிரம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். ஸ்டாலின் குமார் மீண்டும் தி.மு.க.வில் சீட் கேட்கிறார். இவரைத் தவிர, துறையூர் மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சரண்யா மோகன்தாஸ், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் செ.சுரேஷ்குமார் ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில், எம்.ஜி.ஆர். மன்ற வடக்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், துறையூர் நகர்மன்ற உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான சரோஜா இளங்கோவன், மருத்துவர் மணியம்மை, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் முன்னணியிலிருக்கிறார்கள்.
முசிறி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தியாகராஜன், அ.தி.மு.க.வின் செல்வராஜுவைவிட 26 ஆயிரத்து 836 வாக்குகள் கூடுத லாகப் பெற்று வெற்றிபெற்றார். இந்த தொகுதியைப் பொறுத்தவரை முத்தரையர், பட்டியலினத்தோர், வெள்ளாளர், பிள்ளைமார், ரெட்டியார், செட்டியார், உடையார், கவுண்டர்கள், இஸ்லாமியர் சமூகத்தினர் வெற்றிக்கான வாக்குகளை நிர்ணயிக்குமிடத்தில் இருக்கிறார்கள். தி.மு.க. சார்பில் தியாகராஜன் மறுபடியும் சீட் கேட் கிறார். கட்சி பாகுபாடின்றி அனை வரிடமும் இணக்கமாக இருப்பது இவருக்கு பிளஸ். இவரைத்தவிர, முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் ஆகியோர் சீட் பெற கடுமையாக முயற்சிக் கிறார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில், முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி முயற்சிக் கிறார். இவரைத் தவிர, சிவானி கல்லூரி தாளா ளர் செல்வராஜ், முசிறி நகரச் செயலாளர் 'ஸ்வீட் ராஜா' மாணிக்கம், முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/trichy2-2026-01-02-13-29-57.jpg)
லால்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சௌந்தர பாண்டியன், அ.தி.மு.க.வின் தர்மராஜை 16ஆயிரத்து 949 வாக்குகள் வித்தி யாசத்தில் வென்றார். இத்தொகுதியில் உடையார், முத்தரையர், பட்டியலினத்தோர், முக்குலத்தோர், இஸ்லாமிய சமூகத்தினர் வெற்றியை நிர்ணயிக்குமிடத்தில் இருக்கிறார்கள். தி.மு.க. சார்பில் சௌந்தரபாண்டியன் மீண்டும் சீட் கேட்கிறார். இவரைத்தவிர, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மத்திய மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் துரை.கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினரான கருணாநிதி ஆகியோர் சீட்டுக்காக மோதுகிறார்கள். அ.தி.மு.க.வில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் ராஜேஷ் தங்கராஜன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் தின்னக்குளம் டி.என்.சிவகுமார், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் "சூப்பர்' டி.என்.டி நடேசன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டால், டி.ஆர்.தர்மராஜ் சீட் பெற முயற்சிப்பார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பழனியாண்டி, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை 19 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இத்தொகுதியில் முத்தரையர், உடையார், பட்டியலினத்தோர், வெள்ளாளர், பிராமணர்கள், கிறிஸ்தவ சமூகத்தினர், வெற்றியை நிர்ணயிக்கும் இடத்திலிருக்கிறார்கள். தி.மு.க. சார்பில் பழனியாண்டி மறுபடியும் சீட் பெறும் முயற்சியிலிருக்கிறார்.
இவரைத் தவிர, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர் என்.ஆனந்த், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ் ஆகியோரும் முயற்சிக்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க.வில் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, கட்சியின் அமைப்புச் செயலாளரான மனோகர் ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/trichy3-2026-01-02-13-30-10.jpg)
மணப்பாறை தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ம.ம.க. வேட்பாளர் அப்துல்சமது, அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை 12ஆயிரத்து 243 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இத்தொகுதியில் ஊராளிக்கவுண்டர், பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், முக்குலத்தோர், உடையார், செட்டியார் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ம.ம.க. சார்பில் அப்துல்சமது மறுபடியும் சீட்டுக்காக முயற்சிக்கிறார். ஒருவேளை இத்தொகுதியில் தி.மு.க.வே களமிறங்கினால், தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், மணப்பாறை முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி, வையம்பட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி ஆகியோர் சீட்டுக்கான கோதாவில் இறங்குவார்கள்.
அதேபோல், காங்கிரஸும் இத்தொகுதியில் கண் பதித்திருப்பதால், திருச்சி தெற்கு மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் 'மிலிட்டரி' முருகன் ஆகியோரும் சீட்பெறும் முயற்சியில் இறங்குவார்கள். அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. இரா.சந்திரசேகர், மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளர் மருத்துவர் விஜயகுமார், மருங்காபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி ஆகியோர் சீட் பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட புதுமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை 53 ஆயிரத்து 797 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள், யாதவர்கள், பிள்ளைமார் என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் பல சமூகத்தினர் உள்ளனர். மறுபடியும் தி.மு.க. சார்பில் போட்டியிட இனிகோ இருதயராஜ் சீட் கேட்கிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இந்த தொகுதியின் மீதும் ஒரு கண் இருக்கிறது.
மேலும், கிழக்கு மாநகர செயலாளர் மனோகரன், திருச்சி மேயர் அன்பழகன் ஆகியோர் தி.மு.க.வில் சீட் கேட்கிறார்கள். காங்கிரஸும் இந்த தொகுதியைக் கேட்டு காய் நகர்த்தி வருவதால், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோர் இக்கட்சி சார்பாக சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க.வில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் சீட் கேட்கிறார். ஓ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார். வருகின்ற 2026 தேர்தலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப் புள்ளதாகவும், புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாமென்ற எதிர்பார்ப்பும் இம்மாவட்டத்தில் நிலவுகிறது. தி.மு.க.வின் கோட்டையாக உள்ள இம்மாவட்டத்தில் ஆதிக்கம் தொடருமாவென்பதை வேட்பாளர் தேர்வு நிர்ணயிக்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/trichy-2026-01-02-13-29-24.jpg)