பத்துக்கு பத்து அளவுள்ள சிறிய அறை. அதில் கால்பாகத்தில் ஓடாத கைத்தறி இயந்திரம். மீதியுள்ள இடத்தில் விருதுகள், சான்றிதழ்கள் என அடுக்கி வைத்துள்ளனர். அங்கே பெரியளவிலான செம்பு தகட்டை முதலமைச்சரிடம் தரவேண்டும் எனக் கடந்த ஓராண்டாக காத்துக்கொண்டிருக் கிறார்கள் இக்குடும்பத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் அருகிலுள்ள ஆவணியாபுரம் கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சரவணன்- ரேவதி தம்பதி. இவர்களுக்கு சங்கீதப்ரியா, சஹானா, சபரீசன் என மூன்று பிள்ளைகள். மூத்த மகள் கல்லூரியில் முதலாமாண்டும், சஹானா 12-ஆம் வகுப்பும், மகன் 10-ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.
விவசாயக் கூலி மற்றும் எலக்ட்ரிஷியன் வேலைசெய்யும் சரவணனிடம் நாம் பேசியபோது, "நான் பத்தாவது ஃபெயில் சார், அதுக்கு மேல படிக்கவைக்க வசதியில்ல. நான் எலக்ட்ரிஷியன் வேலை கத்துக்கிட்டேன். அந்த வேலை இல்லாதப்ப விவசாயக் கூலி வேலைக்குப் போவேன். என் மனைவி சித்தாள் வேலை, நிலத்துல கூலி வேலைக்குப் போவாங்க. பனை விதைகள், புங்கம், வேப்பங்கன்று செடிகள் பதியம் போட்டு கேட்கிறவங்களுக்கு இலவசமா தந்துக்கிட்டு இருக்கேன். இதுவரை 2.5 லட்சம் பனை விதைகள் உற்பத்திசெய்து அரியலூர், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தந்திருக்கேன்.
நான் ஸ்கூல் படிக்கறப்ப எனக்கும் ஏதாவது விளையாட்டுல சேர்ந்து விளையாடணும், ஜெயிக்கணும்னு ஆசையிருந்தது. எனக்கு வழிகாட்ட, கற்றுத்தர ஆளில்லை. எப்படியாவது என் பிள்ளைகளை விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்க வைக்கணும்னு முடிவுசெய்தேன். என் மூத்த மகள் பள்ளியில் சேர்ந்ததுமே விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கச்சொல்லி ஊக்குவிச்சேன். குத்துச்சண்டை, கபடி, சிலம்பம், கோகோ கத்துக்கிட்டாங்க. குத்துச்சண்டையில் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்காங்க. அதைப்பார்த்து சின்ன மகளும் நானும் ஸ்போர்ட்ஸுக்குப் போவேன்னு சொல்லி குத்துச்சண்டை, கபடி, சிலம்பம் கத்துக்கிட்டாங்க. இரண்டுபேரும் இதுவரை 50 போட்டிகளுக்கு மேல கலந்துக்கிட்டு வெற்றிபெற்று விருதுவாங்கி யிருக்காங்க'' என்றார்.
சங்கீதப்ரியாவிடம் பேசியபோது, "அப்பாவோட ஆசைக்காக மட்டும் நாங்க விளை யாடல, எனக்கும் அதன்மீது ஆர்வமிருந்தது. கிராமத்திலிருந்து எங்கப்பா எங்களை பயிற்சிக் காக ஆரணி, சென்னைன்னு அழைச்சிக்கிட்டுப் போகும்போது ஊர்ல சிலர், கிராமத்திலிருந்து பொட்டப்புள்ள அங்கபோய் என்னத்த ஜெயிக்கப்போகுது அப்படின்னு கிண்டலா, ஏளனமா சொன்னாங்க. அப்பா அந்தப் பேச்சுகள் எதையும் காதுல போட்டுக்கல. பலமுறை வெளிமாநிலத்துக்குப் போய்ட்டு வர்ற செலவுக்கு பணமில்லாம கடன் வாங்கித் தருவார். ஒருமுறை அம்மாவோட கம்மலை அடமானம் வச்சி பதினைஞ்சாயிரம் பணம் தந்து அனுப்பி, விரும்பியதை செய்ங்க அப்படின்னு ஊக்குவிச் சாங்க. இன்னைக்கு பல விருதுகள் வாங்கறோம்னா அதுக்கு அப்பாவும், அம்மாவும்தான் காரணம்.
நான், தங்கச்சி, தம்பி மூவரும் அஸ்ஸாமில் நடந்த குத்துச்சண்டையில் எங்கள் ஆவணியாபுரம் அரசுப் பள்ளி சார்பில் போட்டியில் கலந்துக்கிட்டு வெற்றிபெற்று, சென்னையில தங்கம், வெண்கலம் ஒரே மேடையில் வாங்கி னோம். எங்களின் இந்த வெற்றிகளைப் பார்த்து இப்போது ஊர் மட்டுமல்ல, நண்பர்கள் உட்பட அனைவரும் பாராட்டறாங்க''’என்றார் நெகிழ்ச்சியுடன்.
12ஆவது பயிலும் சஹானா, ஓவியம், கவிதை, பேச்சுப்போட்டி எனக் கலக்குகிறார். வண்ணத்துப்பூச்சி என்கிற இதழ் இவரை மின்னிதழ் ஆசிரியராக்கியுள்ளது. அவரிடம் பேசியபோது, “"அக்காவைப் பார்த்துதான் எனக்கு ஊக்கம் வந்தது. உனக்கு எதெது விருப்பமோ எல்லாத்தையும் கத்துக்கன்னு சொன்னதும் அக்கா மாதிரியே சிலம்பம், குத்துச்சண்டை கத்துக்கிட்டேன். 10 நிமிடத்தில் 311 திருக்குறள் சொல்லி ஜாக்கி வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடிச்சிருக்கேன். திருக்குறளை செம்புத் தகட்டில் எழுதி முதல்வரிடம் தரணும்னு ஆசைப்பட்டேன்.
இதை அப்பாகிட்ட சொன்னதும் கும்பகோணத்திலிருந்து செம்புத் தகடுகளை வாங்கிவந்து தந்தாரு. அதில் செய்யுளை ஆணி வைத்து எழுதும்போது தகடு கிழிந்ததால் மை இல்லாத பேனாவில் 1330 திருக்குறளையும் அழுத்தி எழுதினேன். மாணவிகள் படிக்க புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதாமாதம் நிதியுதவி, நான் முதல்வன் திட்டத்தில் வேலைக்குச் செல்ல பயிற்சி தரும் திட் டத்தை செயல்படுத்தியுள்ள முதலமைச்சர் அப்பாவிடம் ஒப்படைக்கணும்னு எழுதி னேன். எழுதிமுடித்து ஒரு வருடமாகிடுச்சி. முதலமைச்சர் அய்யாவை சந்திப்பதற்கான வழி என்னன்னு தெரியல.
ஆரணி தொகுதி எம்.பி.ய பாருங்கன்னு அப்பாவின் நண்பர்கள் சொல்லியிருக்காங்க. அவர் என் மகள் இப்படி செய்திருக்கு, முதலமைச்சர் அய்யாவைச் சந்திக்க ஏற்பாடு செய்து தரமுடியுமான்னு கேட்டுருக்காரு. அமைச்சர் எ.வ.வேலுதான் முடிவுசெய்யணும் அப்படின்னு சொல்லிட்டாராம். அவரைப் போய் எப்படி சந்திக்கறதுன்னு தெரியாம விட்டுட்டாரு. 5 க்கு 5 அளவுள்ள இந்த செம்புத் தகட்டில் எழுதப்பட்ட திருக்குறள், கண்ணாடி ஃப்ரேம் போட்டுவச்சது அப்படியே இருக்கு''’என்றார்.
சிலம்பம் சுற்றுவதுபோல் சுத்தி சுத்தி தமிழ்நாடு, பிற மாநிலங்களில் சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்திய இச்சிறார்கள், முதலமைச்சருக்கு பரிசு தயார் செய்துவிட்டு அதை எப்படித் தருவது எனத்தெரியாமல் சுற்றி வருகிறார்கள்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்