இந்தியாவில் ஆண்டுதோறும் நடந்த குற்றங்களை மாநிலவாரியாகத் தொகுத்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிடும். அந்த அறிக்கை எந்தெந்த மாநிலத்தில் எவ்விதமான குற்றங்கள் நடக்கின்றன, எந்தெந்த மாநிலங்கள் சட்டம் ஒழுங்கைப் பேணுகின்றன என்ற பார்வையை அளிக்கும்.
பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் முந்தைய ஆண்டுகளின் அறிக்கைப்படி, தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு 5,367 பெண்களுக்கெதிரான குற்றங்களும் 2018-ஆம் ஆண்டு 5,822 குற்றங்களும், 2019-ஆம் ஆண்டு 5,934 குற்றங்களும் பதிவாகியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித் தாலும் அது அச்சுறுத்தும் விகிதத்தில் இல்லை.
2019-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் 59,853 குற்றங்கள் பதிவான உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 41,550 குற்றங்கள் பதிவான ராஜஸ்தான் மாநிலம் 2-ஆம் இடத்தில் உள்ளது. 37,144 குற்றங்கள் பதிவான மராட்டிய மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. மாறாக, வெறும் 5,343 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளுடன் இந்தப் பட்டியலில் வெகுபின்னே உள்ளது தமிழகம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களைவிட மிகக்குறைவாக உள்ளதற்கு முக்கிய காரணம் தமிழகத்திலுள்ள மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் தொடர்பான காவல்துறை அதிகாரிகளின் சீரிய முயற்சியே.
திருச்சியை மையமாகக் கொண்டுள்ள மத்திய மண்டலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 1,144 பெண் களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றை வகை பிரித்தால் பாலியல் பலாத்கார வழக்குகள் 72, வரதட்சணைக் கொடுமை மரணம் 5, வரதட்சணை கொடுமை 67, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் 835, பெண்கள் துன்புறுத்தப்பட்ட வழக்கு 165 என நீளும்.
பாலியல் பலாத்காரம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் 234 வழக்குகளும், பிற சம்பவங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் 76 வழக்குகளும் என மொத்தம் 310 வழக்குகள் பதிவாகி யுள்ளன.
2020-ல் 1,574 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் 318 வழக்குகளும், பிற சம்பவங்களில் போக்சோ சட்டத்தின்கீழ் 112 வழக்குகளும் என மொத்தம் 430 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
நடப்பு ஆண்டில் 2021 கடந்த மாதம் 31-ஆம் தேதிவரை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 780 பதிவாகியுள்ளன. கொரோனா ஊரடங் கும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. பெரும்பாலான சிறுமிகள், கர்ப்பம் தரித்த பின்னரே அவர்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் குற்றம் வெளியே வருகிறது. இன்னும் சில சிறுமிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும்போது தான் வெளியே தெரிகிறது. எனவே குழந்தைகள், மாணவி கள், பெண்கள் என அனைவர் மீதான குற்றங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தேவை.
ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்துவந்தாலும், மற்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் இதற்கான நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் திருச்சி மாவட்டத்தில் 383 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. உரிய முறையில் புகார்கள் பெறப்பட்டு குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு அதிகாரிகளும் முடிந்தவரை பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க முயற்சி செய்துவருகின்றனர். காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் கூறுகையில், "பொதுமக்களோடு இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மகளிர் காவல்நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு பொதுமக்களோடு மகளிர் காவலர்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தாய் தந்தையை இழந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மத்திய மண்டலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் திருச்சி நகர பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு எதுவும் இல்லை.
திருச்சி நகர பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவாக பதிவாகியிருப்பது அதிகாரிகளின் முயற்சியையும், அக்கறையையும் காட்டுகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஆதரவு தந்து குற்றங்கள் இல்லாத சமுதாயமாக மாற்றிட முயற்சி செய்வோம்'' என்றார்.