இனி அவை அகதி முகாம் அல்ல... "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்' எனப் பெயர் மாற்றி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களிலும் வசிக்கும் மக்களுக்கான புதிய குடியிருப்புகள்-அடிப்படை வசதிகள்-நல உதவித் திட்டங்களை நவம்பர் 2 அன்று, வேலூர் அருகே மேலமொணவூரில் தொடங்கி வைத்து, முகாமையும் நேரில் பார்வையிட்டு, நிலவரங்களை அறிந்தார். அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் துறையின் அமைச்சர் மஸ்தான், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள், மறுவாழ்வுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்று, நல உதவித் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள மின்னூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அவர்களுக்கு மலையடிவாரத்தில் புதிய குடியிருப்பைக் கட்டித்தர திட்ட மிடப்பட்டது. அதற்கு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முகாம்வாசிகளும் தங்களுக்குத் தற்போதைய இடத்திலேயே வீடுகள் கட்டித் தரவேண்டும் என்றும், மாற்று இடம் என்றால் நெடுஞ்சாலையை ஒட்டியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மலையடிவாரம் என்றால் பிள்ளைகளின் படிப்பு, மருத்துவ வசதி எல்லாமும் சிரமம் எனத் தெரிவித்தனர்.
நவம்பர் 26ஆம் தேதி, ஆம்பூர் அருகே நடைபெற்ற நலத்திட்ட விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். அதே நாளில், மின்னூர் மறுவாழ்வு முகாமிற்கு இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினரான நமது நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் நேரில் சென்று பார்வையிட்டார்.
நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் மிகக்குறுகலான சாலை சேறும் சகதியுமாக இருந்தது. அதில் பயணித்து, முகாமை அடைந்தபோது, அங்கும் மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. வீடுகளில் ஓடுகள் சரிந்த நிலையில், தரை முழுவதும் ஈரமாக இருந்தது. ஓடு விழுந்து பாதிக்கப்பட்ட குழந்தை, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்தது. முகாம்வாசிகள் தங்களுடைய பரிதாப நிலையை ஆலோசனைக் குழு உறுப்பினரிடம் விளக்கினர். அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்டவர், அங்கிருந்தபடியே அமைச்சர் எ.வ.வேலுவைத் தொடர்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்து, மின்னூர் முகாமை நேரில் பார்வையிடும்படி கேட்டுக் கொண்டார்.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மதியம் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வா மற்றும் மாவட்டத்தின் உயர்அதிகாரிகளுடன் மின்னூர் முகாமை நேரில் பார்வையிட்டார். முகாம் பகுதியில் அரசு நடத்தும் அங்கன்வாடி மையத்திலிருந்த குழந்தைகளிடம் அவர்களின் பெயர்களை கேட்டு உரையாடினார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டதும், "தங்களை இங்கிருந்து இடமாற்றம் செய்யக்கூடாது, இங்கேயே வீடு கள் கட்டித் தரவேண்டும், சாலைகள் அமைத்துத் தரவேண் டும். பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்'' என்றனர்.
உடன் வந்திருந்த மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆலோசனை நடத்தி னார். முகாம் அமைந்துள்ள இடமும், அருகில் உள்ள இடமும் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்பதை வரைபடம் மூலம் அமைச்சரிடம் உறுதி செய்தனர். உடனே அமைச்சர், "மலையடிவார இடம் தொலைவாகவும் பாது காப்பற்றதாகவும் உள்ளது என்கிறார்கள். அதனால் இங்கேயே அவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுங் கள்'' என உத்தரவிட்டார்.
முகாம் மக்களிடமும், "இங்கேயே உங்களுக்கு வீடு கட்டித்தர உத்தரவிட்டுள்ளேன், சாலை வசதி அமைத்து தரப்படும், பாதுகாப்பாக சென்றுவர சாலைகளில் மின்விளக்கு அமைக்கப்படும்'' என்றதும் அதைக் கேட்டு, இலங்கைத் தமிழர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முகாம் பெண்கள், "எங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்திருந்தோம், இது குறித்து மனுவும் அளித்திருந்தோம். அமைச்சரின் உறுதிமொழியை கேட்டதும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நக்கீரனுக்கும் நன்றி'' என்றார்கள்.
முகாம் தலைவர் கிருஷ்ணகுமார், "எங்கள் கோரிக்கையைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு இங்கேயே வீடு கட்டித்தருகிறேன் எனச் சொன்ன அமைச்சருக்கும், முதலமைச்சருக் கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி'' என்றார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நக்கீரனுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், "இலங்கைத் தமிழர்கள் மறு வாழ்வு முகாம் எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர், அந்த மக்கள் தன்மானத் தோடு வாழ வழி செய்துள்ளார். இம்மக்க ளின் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதன்படி இங்கேயே 75 வீடுகள் கட்டவுள்ளோம். அவர்களுக்கு வேண்டிய சலுகைகள் எல்லாம் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு தரப்படுவது போல் ரேஷன் கடைகள் வழி யாக அரிசி வழங்கப்படுகிறது. பணக் கொடை ஆயிரம் ரூபாய் என்பது 1500 ரூபா யாக உயர்த்தப்பட்டுள்ளது. மழைக்கால மாக இருப்பதால் புதிய வீடுகள் கட்டும் பணி ஜனவரி மாதத்தில் தொடங்கும்'' என்றார்.
"இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்' என்ற பெயருக்கேற்ற செயல் தொடரட்டும்.