ந்தியா முழுக்க 255 மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசு மதிப்பிட்டு, 255 இணைச்செயலாளர்கள் தலைமையில் குழு அமைத்து நடத்தப்படும் ஆய்வு வெறும் கண்துடைப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய குடிநீர்த் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆலோசனையின் பேரின் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 255 மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் 15 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. புதுக்கோட்டையில் மத்திய பொது விநியோகத்துறை பொருளாதார ஆலோசகர் மற்றும் இணைச் செயலாளர் மணிஷா சென்ஷர்மா, மத்திய உணவு பொது விநியோகத்துறை துணைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆலிஸ் ரோஸ்லின் டேடே, மத்திய நதிநீர் வாரிய தொழில்நுட்ப அலுவலர் சந்தியா யாதவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்த வந்தனர்.

watter

ஆய்வுக்கு சென்ற பகுதிகளில் இவர்கள் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக வந்திருப்பதாக கருதி பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். சில கிராமங்களில் நீர்வரத்து வாய்க்கால்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணைகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் செயல் என்று அதிகாரிகள் கோபமாக கூறினார்கள். கோயில்பட்டி கிராமத்தில் சாலை ஓரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்தனர். இத்தோடு முதல் நாள் ஆய்வு முடிந்தது.

Advertisment

இரண்டாம்நாள் கீரமங்கலத்தில் விவசாயிகள் மனுவோடு வந்தனர். அதை சிலர் தடுத்தனர். ஆனால், அதையும் மீறி மனு கொடுக்கப்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும், காற்றில் ஈரப்பதத்தை உறிஞ்சும் தைலமரக்காடுகள், முந்திரிக்காடுகளை அரசே முழுமையாக அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். செரியலூர் ஜமீன், இனாம் கிராமங்களில் பாத்திரம் கழுவும் தண்ணீரை பூமிக்குள் செல்ல கட்டப்பட்டுள்ள உறிஞ்சு குழி தொட்டிகளையும், சொட்டுநீர் பாசன விவசாயத் தோட்டத்தையும் பார்வையிட்டனர். தஞ்சை மாவட்டத்தில் வில்லுனி ஆற்றில் இணைந்து கடலுக்கு செல்லும் அம்புலி ஆறு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை கண்டனர். ஆற்றுக்குள் அதிகாரிகளை இறங்கவிடாமல் தமிழக பொறியாளர் ஒரு வரைபடத்தை காட்டினார். இந்த ஆற்றில் தண்ணீரை தேக்க ரூ. 2.50 கோடியில் தடுப்பணை ஒன்று கட்டப் போவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அப்பகுதி இளைஞர்களான கண்ணன், குமார் ஆகியோர், 3 வருடங்களுக்கு முன்பு இளைஞர்களாக இணைந்து சொந்த செலவில் மண்ணால் தடுப்பணை கட்டி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றதாக கூறினார்கள். அந்த இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் விரும்பினர். ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்றவுடன் அதிகாரிகள் புறப்பட்டனர். ஆனால், அங்கே போனால் தாமதம் ஆகும் என்று சொல்லி ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை திரும்ப அழைத்துச் சென்றனர். இதையடுத்து "எதற்காக ஆய்வுக்குழு வரணும். மக்கள் பணத்தை வீணாக்கவா' என்று கண்ணன் கேட்டார். எதையும் தமிழக அதிகாரிகள் காதில் வாங்கவில்லை.

நக்கீரன் சார்பிலும் ஆய்வுக்குழுவிடம் சில விவரங்களை தெரிவித்தோம்.…""வரத்து வாரிகளிலும், காட்டாறுகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால்தான் மழைத் தண்ணீர் ஏரி குளங்களுக்கு செல்லும். ஏரி, குளம், குட்டை, கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால்தான் தண்ணீரை சேமிக்க முடியும். இதைச் செய்யாமல் தடுப்பணைகள் கட்டுவதாலும், பாத்திரம் கழுவும் தண்ணீரை உறிஞ்சுகுழிகளில் செலுத்துவதாலும் எந்த பயனும் இல்லை. இதைச் செய்யாவிட்டால், ஆய்வு செய்வதும், அதற்காக செலவிடும் மக்கள் வரிப்பணமும் வீண்தான்''’என்றோம். அதைக் கவனமாகக் கேட்ட ஆய்வுக்குழுவினர் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

Advertisment

மாவட்ட அதிகாரிகள் திட்டமிட்டிருந்த இடங்களுக்கு மட்டுமே ஆய்வுக்குழுவை அழைத்துச் சென்றனர். குழு வரும் இடங்களை முன்கூட்டியே சொல்லாமல் வைத்திருந்தார்கள். கேள்விகளோ, மனுக்களோ குழுவினரிடம் வராமல் பாதுகாக்க முயன்றனர். அதையும் மீறி பல இடங்களில் மத்திய குழுவினரிடம் மனுக்கள் மட்டுமின்றி குறைகளையும் மக்கள் கொட்டினர்.

கொத்தமங்கலத்தில் இளைஞர்களே சொந்த செலவில் சீரமைத்து வரும் குளங்கள், வரத்து வாய்க்கால்களை பார்வையிட்ட ஆய்வுக்குழுவினர் அவர்களை பாராட்டினார்கள். தமிழக அதிகாரிகளோ ஒரு வரத்து வாய்க்காலை வெட்டிக் கொடுப்பதாகவும், ஒரு சிறிய குளத்தை தூர்வாரிக் கொடுப்பதாகவும் சொன்னார்கள்.

அதே கிராமத்தில் தன் வீட்டு கூரையில் விழும் ஒரு துளி மழைத் தண்ணீரையும் வீணாக்காமல் தொட்டியில் சேமித்து குடிதண்ணீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வரும் வீரமணியை குழுவினர் பாராட்டினார்கள். இந்த நீர் சேமிப்பு அமைப்பு இந்தியாவின் முன்மாதிரியாக உள்ளதாகவும், ஆட்சியர் அலுவலகம் அழைக்கும்போது வரவேண்டும் என்றும் கூறிச் சென்றார்கள். இப்படி இரண்டு நாட்கள் ஆய்வுகள் முடிந்த நிலையில் 3-வது நாள் திருச்சி சென்று விமானத்தில் டில்லி சென்றுவிட்டனர். இந்த ஆய்வுகளால் கிடைக்கப்போவது என்ன என்பதே கேள்வியாக இருக்கிறது.

-இரா.பகத்சிங்