க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கி வரும் ஆறுமுகசாமி கமிஷனில் தினமும் வித்தியாசமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இதில் முக்கியமானது பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவருமான மனோஜ் பாண்டியன் ஆணையத்தில் அளித்திருக்கும் சாட்சியம். அவர் அளித்த சாட்சியத்தில் எடுத்த உடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வைத்தியநாதன் சொன்ன கருத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். """ஜெ.வின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் இருக்கின்றன. அந்த மர்மங்களை பற்றி உரிய விளக்கம் கிடைக்கவில்லை. ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை அறிய ஜெ.வின் உடலை அவரது சமாதியிலிருந்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நான் உத்தரவிட தயார்' என ஜெ.வின் மரண மர்மம் பற்றிய வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்தார்.

jayaleg

ஜெ.வின் மரணத்திற்கு காரணமான விஷயங்கள் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடந்தது. ஜெ.வுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெ., 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மயங்கிச் சரிந்தார். ஜெ. மயங்கிச் சாய்ந்தபோது சசிகலா, வீரபெருமாள் என்கிற ஜெ.வின் பாதுகாப்பு அதிகாரி, ஜெ.வுக்கு வைத்தியம் பார்க்கும் சசிகலாவின் உறவினரான டாக்டர் சிவக்குமார் ஆகியோருடன் ஜெ.வுக்கு பணிவிடை செய்யும் ராணி, மகாலட்சுமி ஆகிய ஐந்து பேர் இருந்தனர்.

பணிவிடை செய்யும் பெண்கள் இருந்தால் அவர்கள் மூலம் ஜெ.வுக்கு கொடுக்கப்பட்ட விஷம் தொடர்பான விஷயம் வெளியே வந்துவிடும் என்பதால், அவர்களை சசிகலா குடும்பம் ஒளித்து வைத்திருக்கிறது'' என மனோஜ் பாண்டியன் சாட்சியம் அளித்தார். மனோஜ் பாண்டியன் வழக்கறிஞர் என்பதால் அவரை குறுக்கு விசாரணை செய்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனால் பெரிதாக அவரது சாட்சியத்தை உடைக்க முடியவில்லை. "2012ஆம் ஆண்டுக்கு பிறகு மனோஜ் பாண்டியன் போயஸ் கார்டனுக்கு செல்லவில்லை' என ராஜா செந்தூர் பாண்டியன் தனது குறுக்கு விசாரணையில் பதிவு செய்தார். அதை மனோஜ் மறுத்தார். சாப்பாட்டில் விஷம் வைத்தார்கள். அது பணிப்பெண்களான ராணி, மகாலட்சுமிக்கு தெரியும் என்ற சந்தேகம் உள்ளது என்றே தெளிவாக பதிவு செய்திருக்கிறார் மனோஜ்.

Advertisment

jayaleg

இந்த பெண்களில் ராணியைப் பற்றி ஜெ.வின் செயலாளராக இருந்த பூங்குன்றன் தனது சாட்சியத்தில் "ராணிக்கு திருமணம் செய்து வைத்தார் ஜெ.' என சொல்லியுள்ளார். அந்த ராணி மற்றும் மகாலட்சுமிக்குத்தான் ஜெ. மயங்கி விழுந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்றும் அதற்கு முன்பும் நடந்தவைகளும் உணவில் விஷம் என்கிற விஷயமும் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க ஆணையம் தீர்மானித்துள்ளது. ஆனால் அவர்களது முகவரியை தர சசிகலா தரப்பு மறுத்துவிட்டது. அதனால் ஆணையம் தமிழக போலீசாரின் உதவியை நாட தீர்மானித்துள்ளது என்கிறது ஆணைய வட்டாரம்.

Advertisment

அதேபோல் ஜெ.வின் கால் அகற்றப்பட்டது குறித்த சந்தேகம் ஆணையத்திற்கு இன்னமும் விலகவில்லை. ஜெ.வுக்கு சிகிச்சையின்போது கால்கள் இருந்தனவா என நீதிபதி ஆறுமுகசாமி பலரை கேட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளரான ராம் மோகன் ராவ் "ஜெ. சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது காவிரி நீர் வழக்கு பற்றி பேசினார்' என சொன்னார். அப்போது நீதிபதி ஆறுமுகசாமி "அந்த சந்திப்பின்போது ஜெ.வுக்கு கால்கள் இருந்ததா? அதை நீங்கள் பார்த்தீர்களா?' என எதிர்க்கேள்வி கேட்டு அவரது பதிலையும் பதிவு செய்தார்.

ராம் மோகன் ராவை தொடர்ந்து ஜெ.வின் டிரைவர் கருப்பசாமி, கண்ணன் மற்றும் கடைசியாக ஜெ.வின் உடலை பதப்படுத்திய டாக்டர் சுதா சேஷையன் ஆகியோரும் ஜெ.வின் கால்களைப் பற்றிய சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். கால் விஷயத்தில் நீதிபதி தனி கவனம் செலுத்துவதை சசிதரப்பு கவனித்தது. ராம் மோகன் ராவிடம் நீதிபதி தானாக முன்வந்து ஜெ.வின் கால்களைப் பற்றி விசாரித்துள்ளார் என தெரிந்து கொண்ட சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஜெ.வின் டிரைவர்களை கால்கள் விவகாரத்தைப் பற்றி பேச வைத்தார்.

jayalegஇறுதியாக அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த கதிரியக்கத்துறை தலைவரான டாக்டர் மீரா, ""நாங்கள் ஜெ.வின் இதயத்திலிருந்து உடல்களின் மற்ற பகுதிகளுக்கு இரத்தம் சீராக செல்கிறதா என சோதனை செய்தோம். ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்கள் டாப்ளர் டெஸ்ட் எனப்படும் இந்த சோதனையை செய்தோம். ஜெ. இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு "ஜெ.வின் இதயத்திலிருந்து கால்களுக்கு இரத்தம் செல்கிறதா' என அவரது தொடைப் பகுதியில் இரத்தம் எடுத்து இதயத்திற்கு செல்லும் ஆர்ட்டிகிள், வென்ட்ரிக்கிள் ஆகிய இரு குழாய்களிலும் சோதனை செய்தோம்'' என்றார். அதை குறுக்கு விசாரணை செய்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், "டாக்டர் மீரா ஜெ. இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு கால்களில் டாப்ளர் சோதனை செய்தார். எனவே ஜெ.வுக்கு சிகிச்சையின்போது கால்கள் இருந்தது' என பத்திரிகையாளர்களிடம் சொன்னார்.

நாம் மீராவின் வாக்குமூலம்பற்றி அவரிடமே கேட்டோம். அவர், "அதைப்பற்றி பேச முடியாது' என மறுத்துவிட்டார்.

அப்பல்லோ மருத்துவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ""பொதுவாக கால்களுக்கு இதயத்தில் இருந்து செல்லும் இரத்த ஓட்டத்தை தொடைப்பகுதியில் உள்ள நரம்புகளில்தான் பரிசோதனை செய்தோம்'' என்றார்கள்.

"டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவுக்குப் பின் தேசியக்கொடி போர்த்தப்பட்ட ஜெ.வின் உடலில் தொடைப் பகுதிக்கு கீழே கால்கள் காணப்படவில்லை. ஜெ.வின் கால்கள் எங்கே' என கேட்டதற்கு, ""நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்ததால், ஜெ.வின் முழங்கால்கள் சூம்பி போய்விட்டன. அதனால் ஜெ.வின் கால்கள் மடித்து வைக்கப்பட்டன'' என அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது. இறந்தவரின் கால்களை மடித்து வைக்க முடியுமா என்றும் ஜெ.வின் கால்கள் என்ன ஆனது என்றும் நக்கீரன் கேள்விகள் கேட்டது. இப்போது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சசிதரப்பு அளிக்கும் விளக்கம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

உண்மையில் ஜெ.வின் மரணத்தில் உள்ள சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. விசாரணையின் "க்ளைமாக்ஸ் நெருங்கி வருகிறது' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

படங்கள்: ஸ்டாலின்