தமிழ்த் திரைப்படங்களில் அந்தந்த காலத்து அரசியல், சமூகச்சூழலை நையாண்டி செய்து வசனங்கள் அமைப்பது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சோ காலத்திலிருந்து சத்யராஜ், மணிவண்ணன், விவேக், யோகி பாபுவரை தொடர்கிறது. மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுவதால், இத்தகைய நையாண்டிகளை அவ்வப் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெறச் செய்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஜனவரி 15-ம் தேதி ஜீ தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான "ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில், நடப்பு அரசியலை மறைமுகமாகக் கிண்டலடித்த க்ளிப்பிங்ஸ் வைரலாக... தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பாக, தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், 23-ம் புலிகேசி மன்னரைப் போலவும், மந்திரியைப் போலவும் வேடமிட்ட இரு சிறுவர்கள் பேசிக்கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மன்னர் வேடத்திலிருந்த சிறுவன், "நமது நாட்டு வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது? கருப்புப் பணம்... எல்லா பணத்தையும் செல்லாதுன்னு சொல்லிடப் போகிறேன். அப்படி செஞ்சா கருப்புப் பணம் ஒழிஞ்சிடும்ல?'' என்று கேட்க, அரங்கத்தினர் "ஆஹா... ஆஹா...' என கைத்தட்டுகிறார்கள்.
மந்திரி வேடத்திலிருக்கும் சிறுவனோ, "இதே மாதிரிதான் ஒரு சம்பவம். சிந்தியாங்குற நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரித்தான் முட்டாள்தனமா பண்ணாரு'' என்றதும்... மன்னர் அவரிடம், "கருப்புப் பணத்தை ஒழிச்சிட்டாரா?'' என்று கேட்க, "கருப்புப் பணத்தை எங்க ஒழிச் சாரு? கலர்கலரா கோட் மாட்டிக்கிட்டுத்தான் சுத்துனாரு" என்று மந்திரி பதில் சொல்வார். நாட்டு நிலைமையை உணர்த்தும் அந்த வசனத்துக்கு, நடுவராக அமர்ந்திருந்த சினேகா உள்பட அனைத்து பார்வையாளர்களும் கைத்தட்டலை அள்ளிவிட்டனர்.
இதேபோல பெருநிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வாரிவழங்கி, அவர் களின் சேவகர்களைப்போல் செயல்படும் மத்திய அரசையும், தமிழகத்தில் பிரதமருக்கு இருக்கும் எதிர்ப்பையும், பொதுத்துறை நிறு வனங்களை விற்பது குறித்தும் நையாண்டியாக வசனங்கள் அமைத்துள்ளார்கள். இந்த வசனங்கள் அனைத்துக்குமே நிகழ்ச்சியின் நடுவர்கள், பார்வையாளர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கைதட்டி ரசித்ததைப் பார்க்க முடிகிறது. எனவே, அந்த வீடியோ க்ளிப்பிங், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடங்கி, சமூக வலைத்தளத்திலுள்ள அனை வரும் வைரலாக ஷேர் செய்யத் தொடங்கினார் கள். உடனே மோடி ஆதரவாளர்கள் மத்தியில் இந்த வீடியோவுக்கும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலையின் கவனத்துக்கு இவ்விவகாரம் கொண்டுசெல்லப்பட்டதும், அவரும் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜீ தொலைக்காட்சியின் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு தமிழக பா.ஜ.க. அனுப்பிய கண்டனக் கடிதத்தில், "அரசியல் குறித்த எந்த புரிதலுமில்லாத சிறுவர்களை வைத்து, பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் உள்ளிட்டவை குறித்து கிண்டலடித்து காமெடி நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளனர். அந்நிகழ்ச்சி யில் நடிகை சினேகா, மிர்ச்சி செந்தில், காமெடி யன் அமுதவாணன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்துள்ளனர். இந்திய பிரதமரின் மாண்பைக் குலைக்கும்விதமான வசனங்கள் குறித்து அரங்கிலிருந்த யாருமே எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் அதனை ஊக்குவித்திருக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக ஜீ டிவி நிர்வாகத்தினர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட் டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தி-ருந்தும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நமது பணத்தை, சேமிப்பை வங்கியிலிருந்து எடுப்பதற்காக பலமணி நேரமாக வங்கி வாசல்களில் நின்றிருந்த கொடுமையை நாம் அனுபவித்திருக்கிறோம். கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறியதையும் இன்றுவரை நிறைவேற்றவில்லை. அந்நிகழ்ச்சியில் குறிப் பிட்டதுபோல பல நாடுகளுக்கும் மோடி சுற்றுப்பயணம் செய்ததும், அதிக விலை மதிப்புள்ள பலவண்ணக் கோட்டுகளை மோடி மாட்டியிருந்ததும் அனைவராலும் விமர்சிக்கப் படும் விஷயம்தான். அதேபோல தற்போது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதும் உண்மைதான். எனவே அந்த நிகழ்ச்சியை அனைவரும் ரசித்துப் பார்த்தனர்.
நம் ஒன்றிய அரசின் செயல்பாடுகளை, நடப்பு அரசியலை நையாண்டி கலந்து பேசியதற்கே இவ்வளவு ஆத்திரப்படும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. ஆதரவு யு ட்யூப்பர்களான மாரிதாஸ், கிஷோர் கே சாமி போன்றோர், தனி நபர்கள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் தமிழக அரசு மீதும் தவறான தகவல்களைப் பரப்பிய காரணத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, "கருத்துச் சுதந்திரம்' என்ற பெயரில் அவர்களுக்கு ஆதரவாக நின்றதையும், சட்டரீதியிலான உதவிகள் செய்ததையும் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கிறார்கள். 'இன்னும் 6 மாதங்களில் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்துவேன்' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் ஒருமுறை கூறியிருந்தது நம் நினைவில் வந்து செல்கிறது.
ஏன் இந்த இரட்டை வேடம்... அதுவும் சின்ன புள்ளத்தனமா?