அடிபடும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பெயர்கள்!
சின்னத்திரை நடிகை நிலானி தொடர்ந்தார்...
""நான் ரியல் எஸ்டேட் பிசினஸும் பார்த்துக்கிட்டிருக்கேன். நிறைய சீரியல் ஆக்டர்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தன் என்கிட்ட, நோட்டு மாத்துற விஷயத்தை எடுத்துச் சொன்னான். நான் நல்லா திட்டிட்டேன். "ஏன்டா நீ படிச்சிருக்கல்ல... செல்லாத நோட்டுக்களை மாத்துறதுக்கு சாத்தியமே இல்லியே? எதுக்கு இந்தமாதிரி தேவையில்லாத வேலை பண்ணிட்டு இருக்கீங்க?' சட்ட விரோதம்கிறத தாண்டி, இது உண்மை கிடையாதுங்கிறத அவனுக்கு புரிய வச்சேன். இதுல கொடுமை என்னன்னா, சம்பந்தமே இல்லாம, பிரபலமா இருக்கிற ஹீரோ லெவல்ல உள்ளவங்களுக்கு இந்த சார்தான் பண்ணிக் கொடுக்கிறாருன்னு யாரோ ஒருத்தரை கை காட்டினாங்க. இவ்வளவு ஏன்? இந்த ஃபீல்டுல இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பெயரையும் சொன்னாங்க.
நானும் என் நண்பரும் சதுரங்க வேட்டை ரேஞ்சுல ஒரு சினிமா எடுக்கணும்னு நினைச்சோம். இந்த நோட்டு மாத்துற விஷயத்தை வச்சு ஒரு காமெடி மூவி பண்ணணும்கிறது என்னோட ஐடியாவா இருந்துச்சு. அந்த சினிமாவுல, எந்த மாதிரி கேரக்டர்ஸ் வரணும்? இந்த ஃபீல்டுல உள்ள கேரக்டர்ஸ் எப்படி நடந்துக்கிறாங்க? என்னென்ன பேசிக்கிறாங்க? இதையெல்லாம் தெரிஞ்சிக்கணும்னு நான் சிலபேர்கிட்ட பேசினது உண்மைதான். இந்த நோட்டு மாத்துற விஷயத்தை சினிமாவா எடுத்தால் நிறைய எதிர்ப்பு வரும். நோட்டு மாற்றும் மோசடியில் இத்தனை புரோக்கர்கள் ஈடுபடறாங்க. நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணிக்கிட்டிருக்கு?''’என்றார் ஆதங்கத்துடன்.
இத்தொடரில், குறிப்பிட்டிருந்த சிலரிடம் விளக்கம் கேட்பதற்காக தொடர்புகொண்டோம். சென்னையில் ஒரு குழுவின் தலைவர் என்று சொல்லப்படும் ஸ்ரீனிவாசன் “""நீங்கள் சொல்லும் பார்ட்னர்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்னைப் பற்றி உங்களிடம் சொன்னவர்கள் யாரென்று கூறுங்கள்''’என்று முதலில் ஒருமாதிரி பேசிவிட்டு, அடுத்து ""வழக்கறிஞர் மூலம் பாஸ்கரிடம் கடன்பெற முயற்சித்தேன். அதற்கு முன்தொகை தந்தேன். கடன் கிடைக்காத நிலையில், முன்தொகையை திரும்பப் பெறுவதற்காக நண்பர்கள் துணையோடு பஞ்சாயத்து நடத்தினேன்''’ என்று வேறு மாதிரி விளக்கம் தந்தார்.
மேலும் ""ஸ்ரீனிவாசன் தரப்பினர் 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்த சாந்தி, அவருடைய கணவர் பாஸ்கரோடு சேர்ந்துகொண்டு, சென்னை தி.நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டுபவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததை பலரும் அறிவார்கள். 2016-ல் கவுன்சிலர் பதவி முடிவுக்கு வந்ததும், பாஸ்கர் பலரிடமும், சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் கார்த்திகேயனும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயரதிகாரியும் தனக்கு உறவினர்கள் என்றும், துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸை எந்த நேரத்திலும் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருப்பதாகவும் கூறி, பலரிடமும் பணம் பெற்றுவருகிறார்.
பாஸ்கரும் அவருடைய நண்பர்கள் அஜித்தும் பஷீரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் அ.தி.மு.க. கொடி கட்டிய சிகப்பு கலர் மஹிந்திரா-லமய காரில் வலம் வருகிறார்கள். அஜித்குமாரின் கையில், அதானி குரூப்பிற்கு ரூ.20 லட்சம் கோடிக்கு பணம் மாற்றிக் கொடுப்பதற்கு, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட ஏஜெண்ட் என்ற சான்றிதழ் இருக்கிறது. இவர்கள் எங்களிடம் ‘பழைய நோட்டுக்களை மாற்றித் தருவதற்கு மும்பை மற்றும் டெல்லியில் அதானி குரூப், ரிலையன்ஸ் மற்றும் டி.சி.எஸ். போன்ற பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. நாங்கள் நேரடி தொடர்பு வைத்திருக்கிறோம்’ என்றார்கள். இவர்களுக்கு ஏராளமான புரோக்கர்கள் இருக்கிறார்கள். பாஸ்கரின் அலுவலகத்துக்கு தினமும் குறைந்தது 100 பேராவது வந்து செல்கிறார்கள். பழைய செல்லாத நோட்டுகளுக்கு புது கரன்ஸிகளாக மாற்றித்தருகிறோம் என்று பாஸ்கர் தரப்புதான் ஏமாற்றிவருகிறது. இந்த மோசடிக்கு ஓ.பி.எஸ்., அவருடைய மகன்கள் மற்றும் அவருடைய தம்பி ராஜா ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள். காவல்துறை ஆதரவுடன் அத்தனையும் நடக்கிறது''’என்றனர்.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி, சென்னை கிழக்கு மண்டல இணைஆணையர் அன்புவை தொடர்புகொண்டோம். அண்ணாநகர் கிழக்கு, சொரன்டோ கெஸ்ட் ஹவுஸ் -அறை எண் 213-ல் செல்லாத நோட்டுகளை மாற்றும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சிலருடைய பெயர் விபரங்களைச் சொன்னோம். "நான் தகவல் கொடுத்துவிடுகிறேன், சம்பந்தப்பட்ட காவல்நிலையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்'’என்றார். அன்றிரவு 10-30 மணிக்கு, அந்த அறையில் தங்கியிருந்த மோசடி பேர்வழிகள் நந்தகோபால் மற்றும் முருகானந்தத்தை அண்ணாநகர் கே-4 காவல்நிலையத்துக்கு அள்ளிச்சென்ற காக்கிகள், ஆளும் கட்சியினர் தந்த அழுத்தத்தால், மறுநாள் வெளியில் விட்டனர். காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் ‘"கோடிகளில் பழைய நோட்டுகளை, குடோன் பிடித்து ஸ்டாக் வைத்திருப்பதும், காலக்கெடு முடிந்தபிறகும் தவறான வழிகளில், தரகர்கள் மூலம் மாற்ற முயற்சிப்பதும் சட்டப்படி குற்றமல்லவா? ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளும் கட்சியினரின் கருப்புப்பணம் என்பதாலா?'’என்று முதலில் போனிலும், அடுத்து நேரிலும் கேட்டோம். நமது கேள்விக்குப் பதிலளிப்பதை, ஆய்வாளர் செந்தில்குமார் ஏனோ தொடர்ந்து தவிர்த்தார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே ஒரு வகையான தேசிய மோசடிதான். இதன் பின்னணியில், இந்தியா முழுவதும் நோட்டு மாற்றும் கும்பல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. எப்படித் தெரியுமா?
-சி.என்.இராமகிருஷ்ணன்
(வரும் இதழில் நிறைவுபெறும்)