தென் மாவட்டங்களில் மீண்டும் பெண் சிசுக்கொலை என்பது கொரோனாவைப் போலவே அதிர வைக்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ராமநாத புரத்தைச் சேர்ந்த சுரேஷ் கவிதா தம்பதியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சுரேஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருபவர். அவ்வப்போது ஊருக்கு வந்துபோவது வழக்கம். இவர்களுக்கு மகள் பாண்டிமீனா (பத்து வயது) 4-ஆம் வகுப்பு படித்துவருகிறார். இரண்டாவது மகள் ஹரிணி 2-ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவர்கள் இருவரும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.

dd

இந்நிலையில்தான், கவிதா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி பிரசவத்திற்காக கடந்த 20-ந் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 26-ம் தேதி கவிதாவுக்கு சுகப்பிரசவம் ஆகி, பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டு நாட்கள் கழித்து தாயும், குழந்தையும் தங்கள் சொந்தவீட்டிற்கு வந்துள்ள னர். மார்ச் 2-ம் தேதி கோழிக்கறி சாப்பிட்டதோடு, நிலக்கடலையும் சேர்ந்து சாப்பிட்டதாகவும்... அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமாகி குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறி வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் அந்தப் பெண்சிசுவை அடக்கம் செய்ததாக அப்பகுதி மக்களிடம் கவிதா கூறியிருக்கிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது மக்களும் பீதியில் இருந்துவருகிறார்கள். அதனால இப்படி திடீரென பெண் சிசு இறந்ததைக் கண்டு அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் தங்கள் வாட்ஸ்-ஆப் மூலம் கொரோனா வைரஸால் பச்சைக் குழந்தை இறந்திருக்கிறது என்று செய்தி பரப்பியிருக்கிறார்கள். இந்த விஷயம் மாவட்ட குழந்தை நலம் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சந்திரசேகர் காதுக்கு எட்டவே, உடனே அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தேவியிடம் இதுகுறித்து விசாரணை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில்தான் வி.ஏ.ஓ. தேவி, ராமநாதபுரத்திற்கு சென்று கவிதா விடமும் அவருடைய மாமியார் செல்லம்மாளிட மும் விசாரணை நடத்தியுள்ளார். விசாரணை யின்போது இருவரும் கொரோனா வைரஸ் பற்றி பேசாமல் முன்னுக்குப்பின் முரணான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

dd

சந்தேகம் அடைந்த வி.ஏ.ஓ., போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் கவிதா மற்றும் அவருடைய மாமியார் செல்லம்மாள் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து டி.எஸ்.பி. சீனிவாசன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்அகமது மற்றும் வி.ஏ.ஓ. தேவி ஆகியோர் முன்னிலையில் தனித்தனியாக அதிரடி விசாரணை செய்தபோதுதான் கவிதாவும் அவருடைய மாமியார் செல்லம்மாளும் பதறவைக்கும் அந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள்.

""ஏற்கனவே எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. மூன்றாவது பையன் பிறக்கும் என்று பார்த்தால் மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்துவிட்டது. அதைக் கண்டு வீட்டுக்காரரும் சத்தம் போட்டுவிட்டு ஊருக்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி யிருக்கும்போது மூன்று பெண் குழந்தைகளை வளர்த்து எப்படி கரைசேர்க்க முடியும். அதுனாலதான் நானும் மாமியாரும் குழந்தையை கொலைசெய்ய முடிவுபண்ணி, வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள எருக்கலாம் செடியில் இருந்து பாலை எடுத்துவந்து குழந்தைக்கு ஊற்றி கொலை செய்தோம்'' என்று உண்மையைச் சொன்னதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து விட்டனர். அதன்பின் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை, கவிதா மற்றும் மாமியார் அடையாளம் காட்ட, சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்தனர். அதைத்தொடர்ந்து, பெண் சிசுக்கொலை செய்த தாயார் கவிதா மற்றும் மாமியார் செல்லம்மாளை காக்கிகள் கைதுசெய்து சிறையில் தள்ளியுள்ளனர்.

இச்சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியை அடுத்து இருக்கும் புள்ளநெரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அவருடைய மனைவி சௌமியா தம்பதிகளுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து இம் மாதம் 2-ம் தேதிதான் கொலை செய்தனர். அதே நாளில்தான் ஆண்டிப்பட்டி ராமநாதபுரத்தை சேர்ந்த கவிதாவும் அவருடைய மாமியார் செல்லம்மாளும் அந்த பச்ச பெண்சிசுக்கு எருக்கலாம் பால் கொடுத்து கொலை செய்து இருக்கிறார்கள். பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்காக 1991-96 ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டத்தை ஜெ. கொண்டுவந்தார். அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள், ஒரே மாதத்தில் இரண்டு பெண் சிசுக்கொலை செய்யப்பட்டும் பதற்றமில்லாமல் இருக்கிறார்கள்.

-சக்தி