க்கீரனின் கடந்த இதழில் அட்டைப்பட செய்தியாக பதிவு செய்யப்பட்ட அரசு கேபிள் டி.வி. ஊழல் விவகாரம், கோட்டையிலும் கேபிள் டி.வி. வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அரசு கேபிள் டி.வி. சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மந்த்ரா இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் ராஜனை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்திருக்கிறது சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபர் க்ரைம் போலீஸ்! விசாரணையில் பல உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார் ராஜன். அந்த உண்மைகள் உயரதிகாரிகள் பலரின் முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

Advertisment

இந்த விவகாரத்தின் பின்னணிகளை நாம் தொடர்ந்து விசாரித்தபோது, "முதல்வர் மு.க.ஸ்டாலினை எப்படியெல்லாம் அதிகாரிகள் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதையறிந்து ஏகத்துக் கும் அதிர்ச்சி.

cc

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் கனெக்சன் எடுத்துள்ள மக்களுக்கு இலவச செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என 2016 தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது அ.தி.மு.க. அதன்படி மீண்டும் அ.தி.மு.க. அரசு பதவி யேற்றதும் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க டெண்டர் அறிவித்தது.

டெண்டரில் மந்த்ரா மற்றும் பாலாஜி ஆகிய 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது அரசு கேபிள் டி.வி. நிறுவனம். அதன்படி சீனா மற்றும் தைவானில் இருந்து இறக்குமதி செய்து செட்டாப் பாக்ஸ்களை வழங்கின அந்த நிறுவனங்கள். இதில் நடத்துள்ள சிக்கல்களையும் ஊழல்களையும் கடந்த இதழில் விரிவாக நாம் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை வெளிவராத சில உண்மைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ’"டெண்டரின் மதிப்பு சுமார் 614 கோடி ரூபாய். மாதத்தவணையில் இதற்கான தொகையை கேபிள் டி.வி. நிறுவனம் டெண்டர் எடுத்த நிறுவனங்களுக்கு வழங்கும். அதனால், வங்கியில் கடன் பெற்று அந்த தொகையை வைத்து செட்டாப் பாக்ஸ்களை இறக்குமதி செய்து வழங்கின அந்த நிறுவனங்கள்.

Advertisment

cc

செட்டாப் பாக்ஸ் டெண்டர் விடப்பட்ட போது ஜி.எஸ்.டி. என்கிற பிரச்சனை கிடையாது. ஆனால், பர்ச்சேசிங் ஆர்டர் வழங்கப்பட்டு, பாக்ஸ்களை கொள்முதல் செய்கிற சமயத்தில் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்து விட்டது.

ஜி.எஸ்.டி. தொகை குறித்து அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரிகளிடம் முறையிடுகிறார் ராஜன். கேபிள் டி.வி. நிறுவனமோ, பணத்தை நீங்க கட்டிடுங்க; கடைசியில் கொடுத்துடுவோம் என சொல்கிறது. அதன்படி, பாக்ஸ்களை வழங்கி வருகிறார். டெண்டர் ஒப்பந்தத்தின்படி, 3 ஆண்டுகளில் பாக்ஸ்களை முழுமையாக வழங்கிட வேண்டும். வழங்கப்படவில்லையெனில் 5 சதவீத அபராதத் தொகையை ராஜன் கட்ட வேண்டும். அதேபோல, வழங்கப்பட்ட பாக்ஸ்களுக்கு உரிய தொகையை கேபிள் டி.வி. நிர்வாகம் தரவில்லை யெனில் அதற்கான வட்டியை கேபிள் டி.வி. நிர்வாகம் ராஜனுக்கு தரவேண்டும். இதுதான் ஒப்பந்தம்.

ffஇந்த நிலையில், 3 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய பாக்ஸ்கள் குறிப்பிட்ட காலத்தில் முழுமையாக வழங்கப்படவில்லை. மேலும், சட்டமன்ற தேர்தல் வந்ததாலும் பாக்ஸ்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஜி.எஸ்.டி. தொகையில் தவறு இருப்பதாகவும் அதனை சரிசெய்து எங்களுக்குரிய பணத்தை தரவேண்டும் என்றும் கடந்த எடப்பாடி ஆட்சியிலேயே ராஜன் தரப்பில் முறையிடப்பட்டது. சரி செய்யப்படவில்லை.

Advertisment

ஆட்சி மாற்றம் நடந்து தி.மு.க. பொறுப் பேற்றபிறகு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக நியக்குநராக ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப் பட்டார். ஜெயசீலனிடம் இருக்கும் நட்பின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவரிடம் ஒரு உதவியை எதிர்பார்த்தார். அதனை ராஜனிடம் சொல்லி செய்துகொடுக்க முடியுமா என பாருங்கள் என கேபிள் டி.வி. நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளைப் பார்க்கும் சூப்பிரண்ட் டெண்ட் உலக நாதனுக்கு உத்தரவிட்டார் ஜெயசீலன்.

ராஜனிடம் இதனை உலக நாதன் சொல்ல, அதை அலட்சியப் படுத்திவிட்டார் ராஜன். இந்த சூழ லில், குறிப்பிட்ட காலத்துக்குள் செட் டாப் பாக்ஸ் முழுமை யாக வழங்கப்படாத தால், மந்த்ரா, பாலாஜி நிறுவனங்களுக்கு அப ராதக் கட்டணத்தை விதித்தது கேபிள் டி.வி. நிறுவனம். ஒப்பந்தத்தின்படி 5 சதவீத அபராதக் கட்டணம் விதிப்பதற்குப் பதில் 10 சதவீதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெய சீலனை சந்தித்து, அபராதக் கட்டணம் 10 சதவீதம் விதிக்கப் பட்டது தவறு என்பதையும், டெண்டர் விதிப்படி செட்டாப் பாக்ஸ்களுக்குரிய தொகையைத் தராததால் அதற்கான வட்டியை நீங்கள் தான் தரவேண்டும் என்பதையும், அதன்படி குறிப்பிட்ட தொகையை வட்டியாக கேபிள் டி.வி. நிர்வாகம் தரவேண்டும் என்பதால் அதனைத் தரவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் ராஜன்.

அது குறித்து உலகநாதனிடம் ஜெயசீலன் கேட்க, "அதெல்லாம் தரத்தேவையில்லை சார்' என சொன்னதை நம்பினார் ஜெயசீலன். அதேசமயம், கேபிள் டி.வி. நிர்வாகத்தின் நிதித்துறையோ டெண்டர் நிறுவனங்களுக்கு இவ்வளவு தொகை தரவேண்டும் என சொன்னது.

ஆனாலும் ஜெயசீலன் இதற்கு ஒத்துழைக்க வில்லை. இந்த நிலையில், கேபிள் டி.வி. நிறுவனத் தின் சேர்மனாக குறிஞ்சி சிவக்குமார் நியமிக்கப்படு கிறார். அவரிடமும் ராஜன் முறையிட, அவர் கேட்பது நியாயம்தானே என ஜெயசீலனிடம் சொல்கிறார் குறிஞ்சி சிவக்குமார். ஆனாலும் இந்த பஞ்சாயத்து ஓயவில்லை. துறையின் செக்ரட்டரி நீரஜ் மிட்டலிடம் சொல்கிறார் ராஜன். அவரும் ஒத்துழைக்கவில்லை.

இறுதியில், துறையின் அமைச்சர் மனோதங்க ராஜிடம் புகார் கொடுக்கிறார் ராஜன். இதனை யடுத்து, துறையின் செக்ரட்டரி நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ்., ஜெயசீலன், குறிஞ்சி சிவக்குமார், ராஜன் ஆகியோரை அழைத்து ஒரு மீட்டிங் போடுகிறார் மனோதங்கராஜ். அப்போது, இரு தரப்பிலும் விசாரணை நடத்தியபோது, பல உண்மைகள் அம்பலமானது. குறிப்பாக, கேபிள் டி.வி. நிறுவனம், ராஜனுக்கு எவ்வளவு தொகை தரவேண்டும் என்பது ஆதாரப்பூர்வமாக தெரியவருகிறது. ஆனால், ராஜன் மற்றும் குறிஞ்சி சிவக்குமார் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வால் இதனை நீரஜ் மிட்டலும், ஜெயசீலனும் ஏற்க மறுத்தனர்.

ccஇந்த உண்மைகளை முதல்வருக்குத் தெரிவிக்க திட்டமிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ். ஆனால், அதற்குள் நீரஜ் மிட்டலும், ஜெயசீலனும், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனிடம், ராஜனும் சிவக்குமாரும் என்னை மிரட்டுகிறார்கள் என பொய்ப்புகார் சொல்ல, அதன்பிறகு உளவுத்துறை தலைவர் வழி யாக சில காய்கள் நகர்த்தப்பட்டன. இதனையடுத்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசரம் அவசரமாக குறிஞ்சி சிவக்குமாரின் சேர்மன் பதவியைப் பறித்தனர் அதிகாரிகள்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் மனோதங்கராஜ், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்த உண்மைகளை முதல்வரிடம் தெரிவித்தார். இந்தச் சூழலில், 5 லட்சம் ஹெச்.டி.பாக்ஸ்கள் தேவைப்படுகிறது என ராஜனிடம் சொல்ல, பர்ச்சேசிங் ஆர்டர் தாருங்கள்; பாக்ஸ்களை இறக்குமதி செய்து தருகிறேன் என ராஜன் சொல்ல, 2021 பிப்ரவரி தேதியிட்டு ஆர்டர் வழங்கப்பட, அதனை ஏற்க மறுத்துவிட்டார் ராஜன்.

இந்த நிலையில், சீனாவி லுள்ள ஹோஸ்பெல் நிறு வனத்திடமிருந்துதான் பாக்ஸ் களை வாங்கி கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு சப்ளை செய்கிறார் ராஜன். அதனால், ஏ.எம்.சி. மற்றும் கண்டிஷன் ஆக்சஸ் சிஸ்டம் மென்பொருள் உள் ளிட்டவைகளை நேரடியாக எங்களிடமே தாருங் கள் என கேபிள் டி.வி. நிறுவனத்திலிருந்து கோஸ் பெல் நிறுவனத்துக்கு மெயில் அனுப்புகிறார்கள்.

கோஸ்பெல் நிறுவனமோ, ராஜனுக்குரிய பணத்தை நீங்கள் கொடுக்காததால் எங்களுக்கு அவர் பணத்தை செட்டில் பண்ணாமல் இருக் கிறார். முதலில் பணத்தை செட்டில் பண்ணுங்கள் என பதில் மெயில் அனுப்புகிறது. ஆனால், பணத்தைத் தர அதிகாரிகள் சம்மதிக்காததால், அரசு கேபிள் டி.வி.யின் சேவையில் தடங்கலை ஏற் படுத்துகிறது கோஸ்பெல் நிறுவனம். இதனால்தான் பாதிப்பு ஏற்பட்டு பிரச்சனை வெடித்தது. அதனால் கைது செய்யப்பட வேண்டுமானால் கோஸ்பெல் நிறுவனத்தினரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், ராஜனை கைது செய்ய வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். இந்த நிலையில், கோஸ்பெல் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சனையை சரி செய்ய நீரஜ் மிட்டல், ஜெயசீலன் ஆகியோர் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. ராஜன் அல்லது கோஸ்பெல் நிறுவனம் நினைத் தால் மட்டுமே முடியும் என்பதால், நீதிமன்றத்தின் மூலமாக ராஜனை நிர்ப்பந்தப்படுத்தி ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட தடங்கலைச் சரிசெய்தனர் உயரதிகாரிகள். கடைசியில் ராஜனின் டெக்னிக்கல் டீம்தான் சரி செய்தது. கேபிள் டி.வி. விவகாரத்தில் உயரதிகாரிகளின் அட்ராசிட்டி எல்லை மீறிப் போனது. தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். தங்களின் தவறுகளை மறைக்க முதல்வரிடம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அளந்துவிட்டுள்ளனர் உயரதிகாரிகள். உயரதி காரிகள் சொல்வதை முழுமையாக முதல்வர் நம்பாமல் இருப்பது அவரது நிர்வாகத்துக்கு நல்லது''’என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ்.கள்.

இந்த விவகாரம் குறித்து குறிஞ்சி சிவக்குமாரை தொடர்புகொண்டு கேட்ட போது, "எதையும் சொல்வதற்கில்லை'' என்று தொடர்பை துண்டித்துக்கொண் டார். துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீரஜ்மிட்டல், ஜெயசீலனை தொடர்பு கொண்டபோது, அவர்களின் எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன.

-இரா.இளையசெல்வன்