தமிழக அமைச்சரவை மாற்றம் ஏகப்பட்ட அதிரடிகளு டன் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் இருந்த அமைச்சர்களில் 60 சதவிகிதம் பேருக்கு, "அமைச்சரவை மாற்றம் நடப்பதால் நீங்கள் எந்த வேலைக்கும் வெளியூர் செல்லக்கூடாது, சென்னையில் இருக்கவேண்டும்'’என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சில எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் காத்திருந்தார்கள். இந்த முறை தேவேந்திரகுல வேளாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் எனச் செய்திகள் பெரிதாக வெளிவந்தது. அதனால் தமிழரசி, ஒட்டப்பிடாரம் சுப்பையா, லட்சுமணன், வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் எனப் பலர் சென்னையிலேயே தங்கவைக்கப்பட்டனர். ஐ.பெரியசாமி திண்டுக்கல் செல்வதற்கு வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் போட்டிருந்தார். முதல்வர் அலுவலக அறிவுறுத்தலின்படி அந்த டிக்கெட்டை அவர் கேன்சல் செய்தார். இப்படி அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த அமைச்சரவை மாற்றம் சைலன்டாக நடந்து முடிந்திருக்கிறது.
"நீ அமைச்சராக இருக்கிறாயா அல்லது சுதந்திரமாக இருக்கப்போகிறாயா?'’எனக்கேட்டு செந்தில்பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்வோம் என ஓகா தலைமையிலான சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டதால் அமைச்சரவை மாற்றம் உறுதியானது. பொன்முடி ஆபாசமாகப் பேசியதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டது. இந்த இரண்டும் சேர்ந்துகொண்டு பெரிய அமைச்சரவை மாற்றத்துக்கு தி.மு.க. தயாராகிறது என்கிற பிம்பத்தை உருவாக்கியது. பி.டிஆர்.பழனி வேல் தியாகராஜன் ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என சட்டமன்றத்திலேயே வெளிப்படையாகவே தெரிவித்தார். செந்தில்பாலாஜி ராஜினாமா செய்துவிட்டார். ஆ.ராசா மூலம் பொன்முடியிட மிருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில்பாலாஜி ராஜினாமா செய்வதை தி.மு.க. தலைமை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக என்ன செய்யலாம் என தி.மு.க. தலைமை தீவிரமாக ஆலோசித்து செந்தில்பாலாஜிக்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவெடுக்கப் பட்டது.
இந்தியாவில் நடப்பில் பதவியிலிருக்கும் மாண்புமிகுக்கள் ஆயிரம் பேர் மீதாவது வழக்குகள் கோர்ட்டில் உள்ளன. 96-ல் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா 2001ல் முதல்வர் ஆனார். சமீபத்தில் செந்தில்பாலாஜியைப் போல பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான ஹேமந்த்சோரன் ஜார்கண்ட் முதலமைச்சராக உள்ளார். அஜித்பவார் மகராஷ்டிரா துணை முதலமைச்சராகவுள்ளார். இவர்கள் இருவரும் செந்தில்பாலாஜியைப் போல செக்ஷன் 21 என்கிற மனிதாபிமான அடிப்படையில் ஆன பிரிவின் கீழ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள். இது தவிர பா.ஜ.க.வில் சேர்ந்ததால் ஹேமந்த் சர்மா, நவீன் ஜிண்டால், மம்தாவின் உறவினரான சுவேந்து அதிகாரி, டி.எம்.ரமேஷ், சஞ்சய்சேத், கீதா, பாபனா கவாலி ஆகியோர் பல்வேறு பதவிகளில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் செந்தில்பாலாஜி போல செக்ஷன் 21ன்படி ஜாமீனில் வந்தவர்கள். இவர்கள் எப்படி பதவி வகிக்கிறார்கள். செந்தில் பாலாஜியை மட்டும் அமைச்சர் பதவியை விட்டு ராஜினாமா செய்யச் சொல்வது சரியா? -என ஒரு விரிவான அபிடவிட் ஒன்றை தி.மு.க.வின் சட்டத்துறை தயாரித்துள்ளது. அதை மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் மூலம் தாக்கல் செய்கிறார்கள்.
செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்கிற தகவலை தமிழக அரசு தெரிவிக்கும் அதே வேளையில், இவர்கள் எல்லாம் பதவியிலிருக்கும்போது பாலாஜி மட்டும் பதவியில் இருக்கக்கூடாதா எனும் கேள்வியை தி.மு.க. எழுப்புகிறது. அத்துடன் தனியாக ஒரு வழக்கையும் இது தொடர்பாக பதிவு செய்கிறது. மந்திரி பதவிக்கு மனோதங்கராஜும், ராஜகண்ணப்பனுக்கு வனத்துறையும் வழங்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் நெல்லை, குமரி மாவட்ட பாலிடிக்ஸ் தான். மனோதங்கராஜ் நீக்கப்பட்டவுடன் சபாநாயகர் அப்பாவு, குமரி மாவட்டத் தில் தலையிடுகிறார் என்கிற புகார்தான் மனோவை மறுபடியும் அமைச்சராக் கியது. நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான கண்ணப்பனுக்கு வெயிட்டான துறை தர வேண்டும் என வனத்துறை அளிக்கப்பட்டது. நெல்லை, குமரி இரண்டும் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி அமைந்த பிறகு தி.மு.க. அதிக கவனம் செலுத்த வேண்டிய மாவட் டங்கள் என சபரீசனின் ‘"பென்'’ அமைப்பு கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் மந்திரியே இல்லாத மாவட்டமாக இருந்த குமரியின் ஒரே எம்.எல்.ஏ.வான மனோவுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்தது. முதல்வரின் இந்த அதிரடியால் தி.மு.க. பெருசுகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புக்கள்.