தி.மு.க.வினர் பல மாதங்களாக எதிர் பார்த்துக்கொண்டிருந்த துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் மாற்றம், இலாகா மாற்றம் ஆகிய வற்றை செய்து முடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வராகப் பதவி உயர்வளிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள் இளித்துறை ராமச்சந்திரன், மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கேபினெட்டிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக பனமரத்துப் பட்டி ராஜேந்திரன், செந்தில்பாலாஜி, கோவி.செழி யன், சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில்பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர் வைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தபோது முதன்முறையாக அமைச்சரவை யில் சேர்க்கப்பட்டு ஒன்றரை வருடத்துக்கு முன்பு நீக்கப்பட்ட சா.மு.நாசரை மீண்டும் அமைச்சர் பதவியில் இணைத்துக்கொண்டு அவருக்கு சிறு பான்மையினர் நலத்துறையை வழங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பனமரத்துப்பட்டி ராஜேந்திர னுக்கு சுற்றுலாத்துறையும், கோவி.செழியனுக்கு உயர்கல்வித் துறையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கலைஞர் தலைமையிலான 2006-2011 தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில், 2009-ல் மு.க. ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் அன்றைய முதல்வர் கலைஞர். அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்த லுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், உதயநிதியை துணை முதல்வராக்கியிருக் கிறார் ஸ்டாலின். தந்தை வழியில் செயல்பட்டு மகனுக்கு அமைச்சரவையில் புரமோஷன் வழங்கி யிருக்கிறார் ஸ்டாலின். அந்த வகையில், கூடுதல் சுமை உதயநிதியின் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது.
கவர்னர் ரவியின் அறிவிப்பில் துணை முதல்வர் உதயநிதி என சொல்லப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி துணை முதல்வர் பதவிக்கு பதவியேற்பு கிடையாது என்பதால் துணை முதல்வர் என்கிற அறிவிப்பையும் கவர்ன ரால் கொடுக்கமுடியாது. ஆனால், கவர்னரின் உத்தரவில் துணை முதல்வர் உதயநிதி என வரவேண்டும் என்று விரும்பினார் ஸ்டாலின். இது குறித்து கவர்னரின் கவனத்துக்கு தி.மு.க. அரசு கொண்டு சென்றபோது, அதனை ஏற்க மறுத்திருக் கிறார் கவர்னர். இந்த சூழலில்தான், டெல்லிக்கு பறந்தார் ஸ்டாலின். மோடியை சந்தித்தார். வெறுமனே அப்படி அறிவிப்பது சாத்தியமில்லை. கூடுதலாக ஏதேனும் ஒரு இலாகாவை ஒதுக்குங்கள். அதை அறிவிக்கிறபோது துணை முதல்வர் என்ற வார்த்தையை இணைக்கலாம் என யோசனை சொல்லப்பட்டது. ஸ்டாலின் ஒப்புக்கொள்ள, டெல்லியிலிருந்து கவர்னருக்கு அறிவுறுத்தப்பட் டது. அதனை ஏற்று தனது செய்திக் குறிப்பில் துணை முதல்வராக உள்ள உதயநிதிக்கு, கூடுதல் இலாகாவாக திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்து முதல்வர் பரிந்துரைத்திருக்கிறார் என்று சொல்லியுள்ளார் கவர்னர் ரவி.
துணை முதல்வர் அறிவிப்புடன் அமைச்சர்கள் மாற்றமும் இலாகா பறிப்பும் நடந்துள்ளது. இது குறித்து தி.மு.க. மற்றும் கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, "பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருப்பதுதான் இந்த மாற்றத்தின் ஹைலிலைட்! சமீபகாலமாகவே அவரை பற்றிய நெகட்டிவ் விசயங்கள் ஆதாரப்பூர்வமாக முதல்வருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கேரளாவுக்கு மணல் மற்றும் தாது பொருட்கள் கடத்தலுக்கு ஆதரவாக இருந்தார் மனோ தங்கராஜின் மகன் ரெய்மோன். இவரின் ஆதர வுடன் தான் கடத்தல் அதிகரித்தது. கடத்தலுக்கு உடந்தையாகவும், கடத்தலுக்கு பின்னணியிலும் இவர் இருந்ததால் மாவட்ட கலெக்டரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
அதேபோல, தமிழக அரசுக்குச் சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பார்வதிபுரம் ஆராச்சார் நிலத்தை, போலி டாகுமெண்டுகளுடன் சிலர் அபகரிக்க முயற்சித்தனர். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இது தொடர்பான வழக்கில், மாவட்ட நிர்வாகத்தை மேல்முறையீடு செய்யாமல் தடுத்தும், கன்னியாகுமரி மாநகராட்சியில் அந்த நிலத்திற்கு தனியாருக்கு அப்ரூவல் வழங்க வலியுறுத்தியும் ஏக நெருக்கடி கொடுத்துவந்தார் மனோ தங்கராஜ் மகன். இந்த நில விவகாரம் குறித்து நக்கீரனில் விரிவாக பதிவு செய்யப்பட்டதை நோட் பண்ணிக்கொண்ட உளவுத்துறை, மாவட்டத்தில் விசாரித்து உண்மைகளை அறிந்துகொண்டு முதல்வருக்கு நோட் போட்டது. அமைச்சரின் அதிகாரம் எல்லைமீறிச் சென்றதில் கடுப்பானார் முதல்வர்.
அதேபோல, பால்வளத்துறையில் எந்த வளர்ச்சியையும் மனோதங்கராஜ் செய்யவில்லை. பால் கொள்முதல் உயரவில்லை; பால் விவசாயி களுக்கு பணப்பட்டுவாடாவில் பிரச்சினைகள் என நிறைய வில்லங்கங்கள், ஊழல்கள். மனோவின் பி.ஏ. செந்தில், மகன் ரெய்மோன் கூட்டணி புகுந்து விளையாடியது. பி.ஏ. செந்தில் மட்டுமே நெல்லையில் சுமார் 2 கோடி ரூபாயில் பங்களா கட்டிவருகிறார்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர் ஸ்டாலின், அவரை நீக்கும் முடிவை எடுத்தார்'’ என்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றத்துடன் பலரின் இலாகாவையும் மாற்றியிருக்கிறார் ஸ்டாலின். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறைக்கும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பிற்பட்டோர் நலத்துறைக்கும், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவளத்துறைக்கும், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ.கண்ணப்பன் பால்வளத் துறைக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த மின்சாரத்துறை எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
பொன்முடியிடமிருந்து பறிக்கப் பட்ட உயர் கல்வித்துறை அமைச்சராக கட்சியின் சீனியர்களில் ஒருவரான கோவி.செழியனை நியமித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். பட்டியிலினத்தைச் சேர்ந்தவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். நல்ல படிப்பாளி. பேச்சாளர். முதல்வரின் குடும்ப விசுவாசி என்கிற பாசிட்டிவ் அம்சங்கள் இவருக்கு இருக்கிறது. பட்டியிலினத்தை சேர்ந்த கோவி.செழியனுக்கு மிகப்பெரிய துறையான உயர்கல்வி கொடுக்கப்பட்டிருப்பதை சீனியர் அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றனர்.
தி.மு.க.விலுள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தி.மு.க.விலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா பொதுத்தளத்திலும் தலித் மக்களுக்கு தலைவர் கள் என்கிற சூழல்களை உருவாக்கி வருவதற்கு செக் வைக்கும் விதமாகவும் கோவி.செழிய னுக்கு உயர்கல்வி கொடுக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியலை விவரிக்கிறார்கள் தி.மு.க. மா.செ.க்கள்.
செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை, அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட்டான அவரை சந்தித்த ஸ்டாலின், சிறையிலிருந்து வரும்போது இதே அமைச்சர் பதவி உனக்காக காத்திருக்கும் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக் கிறார் ஸ்டாலின். சிறைக்குச் சென்ற தால் அவரிடமிருந்த மின்சாரத்தை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத்தீர்வையை முத்துச்சாமியிட மும் கூடுதல் பொறுப்பாக கொடுத்திருந்தார் ஸ்டாலின். தற்போது அந்த 2 இலாகாவும் செந்தில்பாலாஜிக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
கண்டிசன் பெயிலில் அவர் இருப்பதால் உடனடியாக அவரை அமைச்சரவையில் இணைக்க வேண்டாம்; அப்படியே இணைப்ப தாக இருந்தால் சென்சிட்டிவான மின்சாரத்துறை ஒதுக்க வேண்டாம் என முதல்வரிடம் சில சக்திகள் சொல்லியிருக்கின்றன. ஆனால், அதனை புறக்கணித்துவிட்டார் ஸ்டாலின். மாற்றல் குறித்து நேர் மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலிக்கும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார் முதல்வர்.
இப்படி அமைச்சரவை மாற்றப் பின்னணியில் ஒவ்வொரு காரணங்கள் இருக்கிறது. அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றமும் வரவிருக்கிறது. அதற்கான ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளன. பல மாதங்களுக்கு பிறகு மாற்றங்கள் நடந்திருப்பதால், மாற்றத்திற்கேற்ப கோட்டையும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராகியுள்ளது என்கிறார்கள்.
____________________
துணை முதல்வருக்கு என்னென்ன அதிகாரம்! கோட்டை விவாதம்!
துணை முதல்வருக்கென சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறதா? என தி.மு.க.விலும் கோட்டையிலும் பரபரப்பாக விவாதிக்கப்படு கிறது.
உதயநிதிக்கு அமைச்சர் என்பதைக் கடந்து சட்டப்படி சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், முதல்வரின் பணிச்சுமைகளை குறைப்பதற் காக துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருப்ப தால் அனைத்து துறைகளிலும் அதிகாரம் செலுத்தும் முன்னுரிமை அவருக்கு இருக்கிறது. அதற்கேற்பத்தான் ஆட்சி நிர்வாகம் இனி நடக்கும்.
அதேபோல, அதிகாரப்பகிர்வு என்கிற வகையில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் அவர் இருப்பதற்கு சாத்தியம் உண்டு. இன்னும் சொல்லப் போனால், முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில், அவரது விருப்பத்தின் பேரில் அவரது துறைகளையும் கூட உதயநிதி கவனிக்கக் கூடும். முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், துணை முதல்வராக ஓபிஎஸ் இருந்தார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட துறையை கடந்து அவர் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
தி.மு.க. அரசில் அந்த நிலை இல்லை. அரசு நிர்வாகத்தில் உதயநிதியின் தலையீடுகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் உண்டு. அதேபோல, அரசு நிர்வாகத்தின் மீது வரக்கூடிய விமர் சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக் கடிகளும், பதில் சொல்லவேண்டிய பொறுப்பும் உதயநிதிக்கு இருக்கிறது. இதனை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதில்தான் இருக்கிறது துணை முதல்வர் பதவி மீது கட்டமைக்கப்பட்ட அரசியல். அந்த அரசியல் 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கான சாதக -பாதகங்களை உருவாக்கும்!
-இளையர்