மிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி உரிமை மத்திய பா.ஜ.க. அரசால் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும் சூழலில், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னை திரும்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மூன்று ஆண்டுகளாக இந்த கூட்டத்தைப் புறக்கணித்த ஸ்டாலின், தற்போது அதில் கலந்து கொண்டது எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.

தமிழகத்திற்குரிய நிதியை பெற்று வருவேன் என்கிற முழக்கத்துடன் கடந்த 23-ந்தேதி காலையில் டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு, தி.மு.க. எம்.பி.க் களும் பொதுமக்களும் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதனை கவனிப்பதற்காக முதல்நாளே டெல்லிக்குச் சென்றிருந்தார் அமைச்சர் எ.வ.வேலு.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஸ்டாலின், டெல்லிக்கு வரும்போதெல்லாம் காங்கிரசின் சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்திப்பது வழக்கம். இந்தப் பயணத்தின்போதும் அவர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அந்தச் சந்திப்பில், பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர். அரசியல் நிலவரங்கள் குறித்து பேச்சு எழுந்தது.

stalin-modi

அப்போது, "இந்தியா கூட்டணி (எதிர்க்கட்சி களால் அமைக்கப்பட்ட கூட்டணி) உங்களால் வலிமை கொண்டுள்ளது'' என சோனியா சொல்ல, "அப்படி ஒரு கூட்டணிக்கு முன் முயற்சி எடுத்தது நீங்கள்தான். இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, மதவாத சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக் கிறது. இதே தளத்தில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்'' என்றிருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க.-காங் கிரஸ் கூட்டணி உறவு, தமிழக அரசியல் சூழல் குறித்தெல்லாம் இயல்பாக விவாதித்துக்கொண்டனர்.

பிரதமர் மோடி தலைமையில் 24-ந்தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின். இந்த கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி உள்ளிட்டோர் புறக்கணித்திருந்தனர்.

Advertisment

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொரு ளாதார வளர்ச்சிதான் எங்களின் தொலைநோக்குப் பார்வை. இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்கள் பங்களிப்பு வலுவாக இருக்கும். 18 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், 1.14 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத்திட்டம், தோழி விடுதிகள், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், 4 ஆண்டுகளில் 30 புதிய தொழிற்பூங்காக்கள், 16 புதிய சிறிய டைடல் பூங்காக்கள் என எங்கள் திட்டங்களால், நகரமயமாக்க லில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.

பி.எம்.ஸ்ரீ. திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், எஸ்.எஸ்.ஏ. நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2,200 கோடி மத்திய நிதி தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. தாமதமின்றி இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.

stalin-modi

Advertisment

கடந்த 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கான பகிர்வு வரிவருவாய் பங்கு 41 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் 33.16 சதவீதம் மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான மாநில பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவது, தமிழகம் போன்ற மாநிலங்களின் நிதிநிலையை மேலும் பாதிக்கிறது.

ஒருபுறம் மத்திய வரிப்பகிர்வு குறைவதால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி ஆகியவற்றால் பெரும் சுமை மாநில அரசுகளுக்கு ஏற்படுகிறது. எனவே, மத்திய வருவாயில் மாநிலங்களுக் கான வரிப்பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்துவதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று அழுத்தமாகப் பேசினார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை 30 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான பிரதமர் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை இந்தக் கூட்டத்தில் பாராட்டி னார் ஸ்டாலின். அவரது பாராட்டை முதல்வர்கள் பலரும் வியந்து பார்த்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஸ்டாலின், மோடியை தனித்துச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருக் கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என பிரதமர் அலுவலகம் மறுத்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கலாம் என்று சொல்லப்பட்டதை ஸ்டாலின் தரப்பில் ஏற்கவில்லை.

அதாவது, "அமித்ஷாவை சந்தித்தால், ஸ்டாலினின் வருகை நிதி ஆயோக் கூட்டம் அல்ல; பெர்சனல் விவகாரங்களுக்காகத்தான் என்ற தோற்றத்தை உருவாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டது. ஆனால், அதனை உணர்ந்ததி னாலோ என்னவோ அமித்ஷாவை சந்திப்பதை மறுத்து விட்டார் ஸ்டாலின்'' என்கின்றனர் டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள்.

அதேசமயம், நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும் கூட்ட அரங்கத்தில் மோடியும் ஸ்டாலினும் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவியிருக்கிறார். அதனால்தான் மோடி-ஸ்டாலின் சந்திப்பின்போது நாயுடுவும் இருக்கிறார்.

இதுகுறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "ஸ்டாலினின் உரை மிகவும் எதார்த்தமாக இருந்தது என மோடி சொன்னதற்கு புன்முறுவலுடன் நன்றி கூறினார் ஸ்டாலின். தமிழக நிதி நிலவரம் பற்றி உங்களிடம் தனியாக 15 நிமிடம் பேச வேண்டும் என ஸ்டாலின் விரும்பு வதை, மோடியிடம் சந்திரபாபு நாயுடு சொல்ல, "ஏற்கனவே சில சந்திப்புகளுக்கு நேரம் கொடுக் கப்பட்டுவிட்டதால் இப்போது இயல வில்லை. முக்கிய விசயம் எனில் இங்கேயே சொல்ல லாம்' என்றிருக் கிறார் மோடி. அதன்பிறகு மோடி யும் ஸ்டாலினும் அந்த அரங்கத்தி லேயே சில நிமி டங்கள் பேசிக் கொண்டனர்'' என்கிறார்கள்.

டெல்லி விமானநிலையத்தில் பத்திரிகை யாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், "நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் பற்றி விவரித்து விட்டு, ‘’கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடியை 5 நிமிடம் சந்தித்து மீண்டும் இந்த கோரிக்கை களை வலியுறுத்தினேன். அதனை நிறை வேற்றுவதாக மோடி சொல்லியிருக்கிறார். செய்வாரா என்பது போகப் போகத்தான் தெரியும்'' என்றார்.

இதற்கிடையே, "மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், இந்த முறை ஏன் கலந்துகொண்டார்? ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இதற்கெல்லாம் பயந்துதான் நிதி ஆயோக் கூட்டத்துக்கு சென்றார். பிரதமரை சந்தித்தும் பேசியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது கறுப்பு பலூன் விடுவதும், ஆளும் கட்சியானதும் வெள்ளைக் கொடி ஏந்துவதும் என இரட்டை வேடம் போடுவது தி.மு.க.தான்'' என்று குற்றம்சாட்டுகிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல த.வெ.க. தலைவர் விஜய்,’"நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்பு செல்லாமல் இருந்ததற்கான காரணங்களை அடுக்கினார் ஸ்டாலின். அதே காரணங்கள் இப்போதும் இருக்கும் நிலையில், ஏன் செல்ல வேண்டும்? எல்லாம் அமலாக்கத்துறை படுத்தும்பாடு. 1000 கோடி ஊழல் தோண்டப்பட்டால் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்துதான் கூட்டத்தில் கலந்துகொண்டார் ஸ்டாலின். தி.மு.க.-பா.ஜ.க. மறைமுகக் கூட்டும் பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது'' என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

இந்த சூழலில், இத்தகைய குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்கும் வகையில், "மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. அமலாக்கத் துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவைகளை துணிவுடன் எதிர்கொண்டு சட்டரீதியான போராட்டத்தின் மூலம்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை.

அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டமீறலானவை என்பதை உச்சநீதிமன்றக் கருத்துகள் மூலம் உறுதிசெய்திருக்கிறோம். எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே அரைத்துக் கொண்டி ருப்பார்கள். திருந்தவோ, வருந்தவோ மாட்டார் கள்'' என்று செம ஹாட்டாக தாக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரின் இந்த டெல்லி பயணம் சாதித்ததா? போக போகத் தெரியும்..