கலைஞரின் மறைவினால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவினால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என தெரியாத நிலையிலும் முக்கிய கட்சிகளில் சீட் கேட்கும் ஃபைட் ஆரம்பமாகிவிட்டது.
திருவாரூர்
கலைஞர் முதன்முறையாக இத்தொகுதியில் போட்டியிட்ட 2011 தேர்தலில் 50,249 வாக்குகளிலும், 2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வித்தியாசத்தில் 68,666 வாக்குகளிலும் வெற்றி வாகை சூடினார். இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதே இல்லை. அதை இந்தமுறை மாற்றியமைக்க வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறது ஆளும் தரப்பு. அமைச்சர் ஆர்.காமராஜ் இதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார். "இப்போது திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றால்தான், பொதுத் தேர்தலில் தி.மு.க.வுக்கு நெருக்கடியை உண்டாக்க முடியும்'’என அமைச்சர் காமராஜை உசுப்பேத்திவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதற்கு தோதாக, திருவாரூர் அ.தி.மு.க. ஒ.செ. பி.கே.யு. மணிகண்டன் தனது கையிருப்பை நம்பி அமைச்சரை வலம் வருகிறார். திருவாரூர் மாவட்ட நுகர்பொருள் பண்டக சாலையின் தலைவராக இருக்கும் கலியபெருமாளும் நம்பிக்கையுடன் வலம் வருகிறார். கடந்தமுறை கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வமும் முண்டா தட்டுகிறார். ஆனால் அமைச்சர் காமராஜுக்கோ சீனியர் கட்சிக்காரரான முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்த சிவபக்கிரிசாமிக்கு சீட் கொடுக்கலாம் என்ற யோசனை இருக்கிறதாம்.
தி.மு.க. தரப்பிலோ கலைஞரின் மகள்கள் செல்வி, கனிமொழி, ஸ்டாலின் மகன் உதயநிதி ஆகிய மூவரில் ஒருவர் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்போது தான் கலைஞர் குடும்பத்துக்கும் திருவாரூர் தொகுதிக்குமான பந்தம் நீடிக்கும் என்று நம்புகிறார்கள். கலைஞர் போட்டியிட்ட 2 முறையும் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்ததில் செல்விக்கு நல்ல பெயரும் அறிமுகமும் உள்ளது. அதேசமயம் தலைவர் இரண்டுமுறை போட்டியிட்டதால தான் தன்னால் போட்டியிட முடியவில்லை. எனவே இந்த முறை எப்படியாவது தொகுதியை கேட்ச் பண்ணிவிட வேண்டும் என வரிந்து கட்டுகிறார் மா.செ. பூண்டி கலைவாணன்.
"கலைவாணன் எம்.எல்.ஏ.வாகிவிட்டால், மாவட்ட அரசியலில் தனது மகன் ராஜாவுக்கு செக் வைப்பார் என்பதால், டி.ஆர்.பாலு குறுக்கே நின்று பயமுறுத்துகிறார்' என்கிறது உ.பி.க்கள் தரப்பு. அமைச்சர் காமராஜுடன் கலைவாணனுக்கு ரகசிய டீல் எனவும் பரபரப்பு கிளம்புகிறது.
அ.ம.மு.க. முகாமிலோ, குடவாசல் ராஜேந்திரன், கடலைக்கடை பாண்டியன், மா.செ. எஸ்.காமராஜ் ஆகியோரில் ஒருவரை ஆலோசித்து வருகிறார் தினகரன். தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்கப் போவதாக அ.தி.க. தலைவர் திவாகரன் அறிவித்தாலும் அவரது மகன் ஜெய் ஆனந்துக்கு போட்டியிடும் ஆசை ரொம்பவே இருக்கிறது.
திருப்பரங்குன்றம்
அ.தி.மு.க.வுக்கு சாதகமான இந்த தொகுதியில் அழகிரியின் அதிரிபுதிரிகளால் தி.மு.க. தரப்பில் டென்ஷன் கடுமையாக இருக்கிறது.
ஆளும் கட்சியைப் பொறுத்தவரை எடப்பாடியின் சிஷ்யரான எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகன் சத்யன், ஓ.பி.எஸ்.சின் சிஷ்யரான மாஜி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் நிச்சயம் என்பது தற்போதைய நிலவரம்.
தி.மு.க.விலோ, கடந்த இடைத்தேர்தலில் ஏ.கே.போஸிடம் வெற்றியைப் பறிகொடுத்த டாக்டர் சரவணன் முன்னணியில் இருக்கிறார். இவரது உறவினர்கள் அதிகம் வசிப்பதாலும் தொகுதியின் முக்கால்வாசி கிராமங்களில் மருத்துவ முகாம்களை நடத்தியிருப்பதாலும் நம்பிக்கையுடன் இருக்கிறார் டாக்டர் சரவணன். இதற்கு அடுத்த இடத்தில் சேடப்பட்டி முத்தையாவின் மகனும் மாஜி. மா.செ.வுமான மணிமாறனும் சீட்டைக் கைப்பற்ற களத்தில் தீவிரமாக குதித்துள்ளார். இதற்கிடையே நீண்ட காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தவரும் மாஜி மேயரும் இத்தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.வுமான செ.இராமச்சந்திரனும் கோதாவில் குதித்துள்ளார்.
"துரை தயாநிதியை களத்தில் இறக்கினால் ரஜினி ரசிகர்களின் ஆதரவு இருக்கும்' என அழகிரி தரப்பில் கிளம்பியிருக்கும் பேச்சு, தி.மு.க.வுக்கு புது சோதனை. டி.டி.வி.தினகரனோ, கா.காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம். நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்திருப்பதால், போட்டியிட தயாராக இருக்கிறார் வக்கீல் வெற்றிகுமரன். பா.ஜ.க.வில் சீனிவாசனும் சுரேந்திரனும் வரிந்து கட்டுகிறார்கள்.
-க.செல்வகுமார், அண்ணல்