நாங்கள் சென்றது ஒன்றரை மாதங்கள் முன்பு. அந்த சமயத்தில் மணிப்பூர் பகுதிகளுக்கு யாரும் அதிகம் செல்லவில்லை. பாதுகாப்புக் காரணம் கருதி யாரும் அரசியல் பேசுவது, இணையத்தில் போட்டோக்கள் பகிர்வது எதுவும் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
விடிகாலை. சென்னையிலிருந்து கல்கத்தா, கல்கத்தாவிலிருந்து திமாபூர் சென்கிறோம்.
திமாபூர் நாகலாந்தில் இருக்கிறது. வடகிழக்கு பற்றி நமக்கு எந்த மேப் அறிவும் இல்லை என்பது எனக்கு உறைத்தது. முதலில் மேப் பார்த்து ஏழு மாநிலங்களின் அமைப்பை அறிந்தேன். மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை 30 லட்சம். மணிப்பூரில் மூன்று முக்கிய இனங்கள் இருக்கின்றன. ஒன்று மெய்தி, இரண்டு குக்கி ஜோ, மூன்றாவது நாகா.
குக்கி என்னும் குழு ஜோ (க்ஷ்ர்) குழுவின் உபகுழு. ஜோ குழுவினர் வடகிழக்கில் பல்வேறு மாநிலங்களில் வசித்துவரும் பழங்குடியினர். சசின், மைசோ, பெய்டி, ஹீமர் என பல குழுக்கள் உண்டு. ஒவ்வொரு பகுதியி லும் ஒவ்வொரு பெய ருடன் இருப்பர்.
பொதுவாக மணிப்பூரில் மெய்தி மக்களின் ஆதிக்கம் அதிகம்.
மொழி ஆதிக்கமும் உண்டு. அதேசமயம் குக்கி, நாகா பாரம்பரியமும் இணைந்ததுதான் மணிப்பூர். குக்கி நாகா இனத்தினர் பலர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனர். மணிப்பூரில் இனக்குழுக்களின் சிக்கல்கள் பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றன. ஆனால் மெய்திக்கும், குக்கிக்கும் பெரும்பகை வரலாறோ, வெறுப்பு வரலாறோ இல்லை.
என்னுடன் வந்த மருத்துவர், வெளி நாட்டுக்கு எடுத்துச்செல்லும் பெரிய சூட்கேஸ் அளவில் மருந்துகளைக் கொண்டுவந்திருந்தார். மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு பிளைட்டில் செல்லும் வசதி உண்டு. ஆனால் நாங்கள் நாகாலாந்தில் இறங்கி திமாபூர், கோஹிமா வழியாக செல்லக் காரணம் இம்பாலிலிருந்து குக்கி பகுதிகளுக்கு செல்லும்பொழுது எந்தப் பொருளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட் டார்கள். இம்பாலிலிருந்து மருத்துவப் பொருட் களை எடுத்துச் செல்லும்பொழுது தடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
நாகலாந்து வழியாக மதியம் சேனாபதி என்ற ஊரை வந்தடைந்தோம். சேனாபதி என்பது நாகா மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம். குக்கி மக்கள், மெய்தி மக்கள், நாகா மக்கள் அவரவர் அவரவர் மொழியில் பேசுகின்றனர். நாகாக்களும் குக்கிகளும் ஓரளவு ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். மெய்தி மக்கள் ஹிந்தி பேசுபவர்களாக உள்ளனர்.
மதிய உணவுண்ண சேனாபதி ஊரிலுள்ள உணவு விடுதிக்குச் சென்றோம். அதனை நாகா பெண்ணொருவர் நிர்வகித்தார். பழைய மாதிரி வியாபாரம் இல்லை. பொருளாதாரம் நசிந்து கிடக்கிறது என்பதை அவருடனான உரையாட லில் தெரிந்துகொண்டோம். நான் என் உண்ணாவிரதத்தை இங்கே முடித்துக்கொண்டேன்.
சேனாபதியிலிருந்து காங்போக்பி மாவட்டம் வந்தோம். அங்கு பல கடைகள் அடைக்கப்பட்டி ருந்தன. கறுப்பு மையில் பெரிய அளவில் போராட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஒரு கடையில் அமர்ந்து டீ குடிக்கும்பொழுது ஜெர்ரிக்கு போன் செய்தேன். அவர் களச் செயற்பாட்டாளர். தமிழக நண்பர். அவரைச் சந்தித்து சைக்கோல் சென்றுவிட்டு திரும்ப வருவதாக எண்ணம். எங்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
சைக்கோல் போகும் பாதை படுபயங்கரமாய் இருந்தது. ஒரு ஜீப் செல்லும். அளவுக்கு குறுகிய பாதை. மழை, கரடுமுரடு சாலை, கிடுகிடு பள்ளம், காலை 11.30 மணிக்கு திமாப்பூரிலிருந்து கிளம்பி மாலை 7.30 வரை பயணம். மலைப்பாதை மிக மோசம். ஆரோக்கியமாய் இருப்பவர் களே பயணம் செய்யமுடியும்.
நாங்கள் சைக்கோலில் ஒரு பள்ளியை வந்தடைந்தோம். அங்கு எங்களுக்கு முன்பே இருவர் சேவை அமைப்புகளிலிருந்து வந்திருந்தனர். ஒருவர் மணிப்பால் மக்களின் கதைகளை எழுத வந்திருந்தார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இன்னொருவர் போர் முனைகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் பயிற்சிகளும் அளிப்பவர்.
அவர்களின் அனுபவத்தை கேட்டுக்கொண் டேன். நாங்கள் தங்கியிருந்தது பள்ளிக்கூடம். அங்கு ஒரு வகுப்பறை சுத்தம் செய்து தங்கவைத் திருந்தனர். பின்னால் ஒரு மலையிலிருந்து உருவான சிறு நதி ஓடியது
குக்கி இனத்தை சேர்ந்த வயதானவர் ஒருவர் சமைத்தார். கேஸ் அடுப்பு இருந்தது. சிலிண்டருக்கு சேனாபதி செல்லவேண்டும். அதுவும் ப்ளாக் கில்தான் வாங்க வேண்டும். போய்வருவது எளி தில்லை. கார் வசதி இருப்பவர்களால்தான் சிலிண் டர் வாங்கமுடியும். அந்தளவுக்கு தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. காடுகள் இருப்பதால் விறகு அடுப்புகளை உபயோகப்படுத்த முடிகிறது.
வெளியே ஒருவர் நேரம் கிடைக்கும் பொழு தெல்லாம் விறகு வெட்டிக்கொண்டு இருந்தார். ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு நாங்கள் தங்கிய இடமே எடுத்துக்காட்டு.
அங்கு சமைத்துத் தரும் குக்கி இனப்பெண் சட்டை, கைலி போன்ற உடை, தலையில் எப்பொழுதும் தலைப்பாகையுடன் பாரம்பரிய உடையில் இருந்தார். அவரில் ஏழ்மை தெரிந்தது.
நதியிலிருந்து நீர் எடுத்து உபயோகப்படுத்துவ தால் மஞ்சள் நீர்தான். மழை விடாமல் பெய்வதால் நதி மஞ்சளாகவே பாய்கிறது. குடிக்க சுனை நீர் பயன்படுத்துகின்றனர். பொழுது விடிந்தபின்பும் போன் வேலை செய்யவில்லை..
உள்ளுக்குள் ஓர் உணர்வு. பயம் என சொல்ல முடியாது. பதற்றம். அங்கு குழந்தைகள் பள்ளிக்கு வர ஆரம்பித்திருந்தனர். அந்த குழந்தைகள் கதி என்னாகும் என்ற எண்ணம் எழுந்தது. அன்று நான் இருபது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை டிரைன் செய்யவேண்டும். ஆனால் போன் வேலை செய்யாததால் பலர் வர முடியவில்லை. எனவே பைக்கில் முகாம்களுக்குச் சென்று, முகாமுக்கு ஒரு ஆங்கிலம் தெரிந்தவரை அழைத்துவந்திருந்தனர்.
வந்திருந்த அனைத்துப் பெண்களும் அழகாக உடை உடுத்தியிருந்தனர். இதில் சிலர் என்.ஜி.ஓ. அமைப்பைச் சார்ந்தவர்கள். சிலர் விக்டிம்ஸ். (பாதிக்கப்பட்டவர்களை விக்டிம் என்றே அழைக்கின்றனர்.)
இவர்களை தயார்செய்து கேம்ப்பில் சைக்காலஜி சிக்கல்கள் இருப்பவர்களுக்கு சின்னச் சின்ன ஆலோசனைகள், கவுன் சிலிங் செய்ய தயார் செய்யவேண்டும். இதுதான் என் முதல் நாள் வேலை. அவர்களுக்கு நான் துணிவைத் தரவும், அதைப் பகிரவும் பயிற்சியளிக்கவேண்டும். அதற்கு இவர்கள் முதலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டும். முதலில் எப்படி கடும் துக்கத்திலிருந்து வெளியேவருவது என பேச ஆரம்பித்தோம்.
பயிற்சிபெற வந்திருந்தவர்களில் ஒரு பெண் தனது அனுபவத்தைக் கூறினார். “"நான் சமூக சேவை நிறுவனத்தின் இம்பால் கிளையை நிர்வகிக்கிறேன். கலவரம் ஆரம்பிக்கும் என தெரிந்ததும் அலுவலகத்தை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டேன். எனது அலுவலகம் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.''
ஒருபக்கம் அலுவலகம் எரிக்கப்பட, மறுபக்கம் என் அண்ணன் மனைவி குறித்த கவலை. அவர் கர்ப்பிணிப் பெண். ஒன்பது மாதம். அவர் என்ன செய்வார் என்ற கவலை. அந்தப் பெண்ணின் அம்மாவோ, நாங்கள் பத்திரமான இடம் நோக்கிச் செல்கிறோம். நீயும் வந்துவிடு என சொல்லி அழைத்திருக்கிறார். தப்பிக்க நினைக்கும்பொழுதே, வன்முறைக் கும்பல் நெருங்கிவரும் சத்தம் கேட்டிருக்கிறது. வேறுவழியில்லாமல் இடிபாடுகளைத் தாண்டி தன் வீட்டின் அறையில் பதுங்கிஅமர்ந்துள்ளார். போனை ஆப்செய்துவிட்டார். குக்கி வீடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதால், அங்கு யாராவது நடமாடினால் அவர்களைக் கொல்வதற்கு ஆயத்தமாக இருந்தனர் கலவரக்காரர்கள். இரவு முழுக்க அவர் வெளியேவராமல் ஒடுங்கிப் படுத்துக்கிடந்திருக்கிறார். இரவில் சிறு சத்தம்கூட அவருக்கு பெரும் கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
பொழுது விடிந்தும் அந்தப் பெண் வெளியில் வரமுடியாத சூழல். பதுங்கியிருக்கும்போதும் அவருக்கு உடல் நடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறது. அன்று இரவும் அவரால் வெளியே வரமுடியாத சூழல். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் இடிபாடு களுக்கிடையில் பதுங்கிக் கிடந்தபின் எப்படியோ அருகிலிருக்கும் இஸ்லாமியக் குடும்பத்தைத் தொடர்புகொண்டார். அவர்களின் உதவியோடு அசாம் ரைபிள் எனப்படும் பாதுகாப்புப் படையை சென்றடைந்து, அங்கிருந்து காங்போபி மாவட்டத்தை வந்தடைந்திருக்கிறாள்.
சரி, கிட்டத்தட்ட நிறைமாதக் கர்ப்பிணியான அவரின் அண்ணி என்னவானார்?
(தொடரும்)