1957ஆம் ஆண்டு, காமராஜரின் முயற்சியால், பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நாளொன்றுக்கு சுமார் 6000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருவதோடு, கடந்த 2021-22ஆம் நிதியாண் டில் 12,545.96 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. தற்போது பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக திறந்த வெளி சுரங்கங்களை விரிவுபடுத்தவும், புதிய சுரங்கங்களை ஏற்படுத்தவும், நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளது
இதற்காக கடந்த 18-08-2022 அன்று முதலாவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடத் தப்பட்டது. "என்.எல்.சி. கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும்போது வழங்க வேண்டிய நியாயமான இழப்பீட்டுத் தொகை, நிரந்தர வேலை ஆகியவற்றை இதுவரை வழங்கவில்லையென்றும், பொறி யாளர் தேர்வில் 299 பேரில் ஒருவர்கூட தமி ழர்கள் இல்லையென்பதையும் சுட்டிக்காட்டி, என்.எல்.சி. குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்'' என வலியுறுத்தினர்.
செப்டம்பர் 30ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்த கலந் தாய்வுக் கூட்டத்தில், ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு, முதலில் 1000 பேருக்கு ஒப்பந்த வேலை என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. கூட் டணியிலுள்ள மற்ற கட்சிகள், டிசம்பர் 26 அன்று நெய் வேலியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தின. தமிழக வாழ் வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். வி.சி.க. தலைவர் திருமாவளவன், "என்.எல்.சியால் நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலும் வேலைவாய்ப்பும், இலாபத்தில் பங்கும் தரவேண்டும். இங்கு தி.மு.க இல்லை, இதனால் அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது என்று சிலர் திரித்துப் பேசு கிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டத்திற்கு வர இயலாது. தி.மு.க நம்முடைய போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்'' என்றார்.
இந்நிலையில், ஜனவரி 7, 8 தேதிகளில் நிலம் எடுக்கப்படவுள்ள பகுதிகளில் 2 நாள் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்வதாக பா.ம.க. தலைவர் அன்புமணி அறிவித்தார். அதனால் அதற்கு முதல்நாள் ஜனவரி 6ஆம் தேதி, வடலூரில் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடா னது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "பண பலன்களும், 1500 பேருக்கு ஒப்பந்த வேலை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்றார். அடுத்த இரண்டு நாட்கள், அறிவித்தபடி அன்புமணி நடைப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த மார்ச் 6ஆம் தேதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2006ல் நிலம் கொடுத்தவர் களுக்கு பணி நியமன ஆணைகள் மற்றும் ஏக்கர் ஒன்றுக்கு கருணைத்தொகையாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "என்.எல்.சிக்காக தற்போது 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தப் போவதாக சொல்லப்படுவது தவறானது. தற்போது 2,500 ஏக்கர் நிலம்தான் தேவைப்படுகிறது. இந்த நிலங்கள் ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்கள். அவர்களுக்கு திருப்தியுடன் வேலை வாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படுகிறது'' என்றார்.
மார்ச் 9ஆம் தேதி காலையில், வளையமாதேவி கிராமத்தில், தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் செல்வம் என்பவரின் நிலத்தை என்.எல்.சி. அதிகாரிகள் சமன்படுத்தினர். மேலும் அந்த நிலத்தைத் தாண்டி கிராம மக்கள் அவரவர் நிலங்களுக்கு வர முடியாதபடி தடுப்பை ஏற்படுத்தினர். உடனடியாக மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ சிவக்குமார், வளையமாதேவி கிராமத்திற்கு சென்றபோது அவரை யும் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், 11ஆம் தேதி கடலூர் மாவட் டத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் அன்புமணி அறிவித்தார். அன்றைய தினம், கடலூர், விருதாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய நகரங்களில் மருந்தகங்கள், தேநீர் கடைகள் தவிர்த்து 75% கடைகள் மூடப்பட்டன.
அடுத்ததாக, 20ஆம் தேதி திடீரென என்.எல்.சி. அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்தில் நிலங்களை அளவீடு செய்யச்சென்றனர். அதை எதிர்த்து சிலர் தீக்குளிக்க முயன்ற தால் என்.எல்.சி. அதிகாரிகள் அங்கி ருந்து புறப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி சட்டப்பேரவையில் கொண்டுவரப் பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத் துக்கு பதிலளித்துப் பேசிய அமைச் சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண் டும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற் படாமலும் என்.எல்.சி. திட்டங்கள் நிறைவேற்றப்படும்'' என்றார்.
அடுத்த நாள், 25ஆம் தேதி நெய்வேலி வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி, விவசாய சங்கப் பிரதி நிதிகளையும், பொதுநல அமைப் பினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, "30 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் 8 அடியில் இருந்த தண்ணீர் 1000 அடிக்கு சென்றுவிட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் "நிலம் வைத்திருப்பவர்களுக்கு வேலை வழங்கப்படும்' என்கிறார். ஆனால் இங்கே நிலம் வைத்திருப்பவர்கள் 5 சதவீதம் பேர்தான். அந்த நிலங்களை நம்பியுள்ள கூலித்தொழிலாளர் கள் 95% பேர். அவர்களுக்கு என்ன செய்வீர்கள்? 91 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக நான் கூறுவதை தவறான தகவல் என தொழில் துறை அமைச்சர் கூறியுள்ளார். இதற்கான ஆதா ரங்கள் உள்ளது. வேண்டுமானால் அவர் விவாதத் திற்கு வரட்டும். அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்.எல்.சி மின்சாரம் இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும்' என்பதுபோல பேசியுள்ளார். ஒரு நாளைக்கு தமிழ்நாட்டிற்கு 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. பல்வேறு மின் திட்டங்கள் மூலம் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழகம் உற்பத்தி செய்கிறது. இதில் என்.எல்.சி. மூலம் வெறும் 800 முதல் 1000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இந்த 1000 மெகாவாட் மின்சாரத்தை சூரியமின் சக்தி, காற்றாலை உள்ளிட்ட வேறு மின்திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தமிழக முதலமைச்சர் இப்பிரச்சினை யில் உடனடியாக தலையிட வேண்டும்'' என்றார்.
அன்று மாலை வடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "பா.ம.க. தலைவர் அன்புமணி ராஜ்யசபாவில் என்.எல்.சி. பிரச்சனை குறித்து பேச வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இங்கு வந்து மக்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்'' என்றார்.
இதுகுறித்து புவனகிரி சட்டமன்ற உறுப் பினரும், அ.தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட செய லாளருமான ஆ.அருண்மொழித்தேவன் கூறுகை யில், “"2018-ல் 1200 பேரை என்.எல்.சி. வேலைக்கு எடுத்தார்கள். "அதில் வெறும் 8 பேர்தான் தமிழர் கள்' என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 2019ல் இன்று அமைச்சராக இருக்கக்கூடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் "ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாயும், நிரந்தர வேலையும் தராதவரை, ஒரு பிடி மண் ணைக்கூட தரமாட்டோம்' எனக்கூறி கடுமையான போராட்டத்தை நடத்தினார். ஆனால் இன்றைக்கு நிலங்களை எடுப்பதற்காக காவல்துறையுடன் சென்று விவசாயிகளை அச்சுறுத்துகிறார்கள். கடந்த மார்ச் 20ஆம் தேதி, கடலூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில், என்.எல்.சி நிறுவனத் துக்கு தமிழக அரசு நிலம் எடுத்து தரக்கூடாது என்று 138 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அப்படி தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சிகளை மிரட்டும்விதமாக மாவட்ட ஆட்சியர் விவரம் கேட் கிறார் என்று பெண் அதிகாரி பேசும் ஆடியோ வலம்வந்து கொண்டிருக் கிறது. இதுதான் தி.மு.க. ஆட்சியின் நிலைப்பாடா?'' என்றார்.
இதனிடையே "என்.எல்.சி.யின் புதிய சுரங்கத்திற்காகவோ, மற்ற திட் டங்களுக்காகவோ நிலம் கையகப் படுத்தும் முயற்சி நடக்கவில்லை' என்று அமைச்சர்கள் கூறியதற்கு பதில்தரும் விதமாக, என்.எல்.சி.யின் மூன்றாவது புதிய சுரங்கச் செயல்பாடுகளுக்கான பல்வேறு ஆதாரங்களை பா.ம.க.வின் பசுமைத் தாயகம் அமைப்பு வெளியிட்டது. அதற்கு பதில்தரும் வித மாக கடலூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பதி லளிக்கப்பட்டது. மேலும், கடலூர் மாவட்டம் பாதிக்கப்படப்போவதாக யூகத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவது தேவையற்றது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட மின் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்று மின் திட்டங் களை துரிதப்படுத்தும் அதேசமயம், விவசாயத்தை யும், நீரையும், சுற்றுச்சூழலையும் எதிர்காலத் தலைமுறைக்கு சேதாரமில்லாமல் தருவதுதான் மத்திய, மாநில அரசுகளின் மானுடக் கடைமை யாக இருக்கும்.
-சுந்தர்