நான் எத்தனையோ கல வரங்களைக் கவனித்துள்ளேன். இந்த அளவுக்கான இன ஒழிப்பு போன்ற தீவிரமான ஒன்றை முதன்முறையாகப் பார்க்கிறேன். இதை எழுதும்போது மணிப்பூரில் கடும் ஆயுதங்கள் தாங்கிய ஐந்து நபர்களைக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். அவர்களை விடுவிக்கக் கோரி மீரா போய்பா அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

Advertisment

சட்டப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற கும்பல் மனப்பான்மை தீவிரமாகி வருவது நாட்டுக்கு நல்லதல்ல. நாளை இது எங்கே இட்டுச்செல்லும் என்பதை நினைத்தால் பயமாக உள்ளது.

நகரங்களுக்கு நடுவிலிருந்த குக்கி வீடுகளைக் குறிபார்த்து, திட்டமிட்டு அழித்ததோடு, குக்கி மக்களின் அலுவலகங்களையும் தரைமட்டமாக்கி உள்ளனர்.

nn

Advertisment

பிறகு அடுத்த முகாம் சென்றோம். குழந்தைகள் பள்ளியிலிருந்து முகாமுக்கு வந்துகொண்டிருந்தார்கள். அது ஆச்சரியமளித்தது. எப்படி என்று கேட்டபொழுது அந்தத் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஹாக்ஹோலெட் கிப்ஜென் குடும்பம், குழந்தைகளைப் படிக்க வைக்கிறது. இவர் இப்பகுதியின் முன்னாள் பா.ஜ.க. தலைவரும்கூட. 400-க்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கு படிப்பதாகச் சொன்னார்கள். அந்தக் குழந்தைகள் அனைத்தின் முழு படிப்புச் செலவும் எம்.எல்.ஏ.வினுடையது. அவரின் மனைவி ஜோஜம் கிப்ஜெனிடம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

பல்வேறு கிராமங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தப்பித்து இந்த இடங்களை வந்து சேர்ந்திருக் கின்றனர். அசாம் ரைபிள் மற்றும் தன்னார்வல அமைப்புகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். சிலர் தாங்களே தப்பித்து அருகேயுள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

எல்லா முகாம்களும் ஒரு சிஸ்டத்தின்கீழ் இயங்குவதைக் கவனிக்கலாம். கிட்டத்தட்ட அரசு செய்யும் விஷயங்களை முகாம்களை அமைத்தவர்கள் பொறுப்பேற்றுச் செய்கின்றனர். வசதியானவர்களிடம் உதவி பெற்று உணவளிக் கின்றனர். அதைத் தவிர பல்வேறு அமைப்புகள் அரிசி, பருப்பு வழங்குகின்றன. சுர்சான்பூர் சென்றபோது ஆம்புலன்ஸில் அரிசி வந்திறங்கியது. அது மிசோரம் அரசாங்கம் அனுப்பிய அரிசி. தினமும் ஐம்பதாயிரம் பேர் உணவு உட் கொள்ளவேண்டும். அதற்கான பட்ஜெட் எளிதானது அல்ல. மாதம் ஒரு கோடிக்கு மேல் தேவைப்படும். எப்படியோ இதுநாள்வரை சமாளித்துக்கொண்டிருக்கின்றனர். அதைத்தவிர பல்வேறு செலவுகள். அரசு உதவி இவர்களுக்கு இல்லை. அரசின் உதவியை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு மனமும் இல்லை. அரசே வேண்டாம் என்கிறார்கள். தங்களை மெய்திகளிடமிருந்து தனியாகப் பிரிக்கவேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கை. அது சாத்தியமா எனத் தெரியவில்லை.

எம்.எல்.ஏ. மனைவி ஜோஜம் பல்வேறு கதைகள் சொல்வதற்கு தயாராக இருந்தார். அவரிடம் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் பாதுகாப்பு பற்றி கேட்டறிந்தேன் யாருக்கும், எத்தனை பெரிய மனிதருக்கும் அங்கு முழுமையான பாதுகாப்பு கிடையாது. யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்.

இம்பாலில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. கூட கலவரத்தில் தப்பிக்க முடியவில்லை. இத்தனை சிக்கல் இருக்கும்போது ஏன் அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நீங்கள் ஓட்டுப் போட்டீர்கள் எனக் கேட்டேன். "ஊரில் தலைவர்கள் சொல்வதை அப்படியே கேட்போம். அதனால் அவர்கள் பேசி முடிவெடுத்து, எங்களை சில கட்சிகளுக்கு போடச்சொல்வார்கள். அவர்களுக்கே நாங்கள் முன்னுரிமை கொடுத்து ஓட்டுப் போடுவோம்'' என்றார்கள் அவர்கள்.

கிராமங்களுக்குச் செல்லும்பொழுது ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அமைப்பால் நாங்கள் தடுத்து நிறுத்தப்படுவோம். அவர்கள் போதை மருந்து கண்காணிப்பாளர்கள். கையில் குச்சி வைத்திருப்பார்கள். பொருட்களை தீவிரமாக செக் செய்வார்கள். ஆல்கஹால் உட்பட எதையும் அனுமதிப்பதில்லை. இதற்காக நிஷாபன் என்ற அமைப்பு செயல்படுகிறது.

இரவு எத்தனை மணி ஆகியிருந்தாலும் செக் செய்ய வருகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஷிப்ட் போட்டுக்கொண்டு பெண்கள் இருக்கிறார்கள். யார் வந்தாலும் அவர்கள் கண்களிலிருந்து தப்பவே முடியாது. அந்த அளவுக்கு கடும் கண்காணிப்பு. நம் ஊரில் ஆண் தலையாரி பார்த்துள்ளோம். இங்கு எல்லாமே பெண்கள்தான். காவல் காப்பது, எல்லையில் நிற்பது, தொழில் என, பல வேலைகளில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். பழங்குடி சமூகங்கள் ஏன் தந்தைவழி சமூகமாக இல்லாமல் தாய்வழி சமூகமாக இருக்கின்றன என யோசிக்க ஆரம்பித்தேன். பெண் அமைப்பான மீரா போபாய் பற்றி பேச்சு வந்தது. அவர்களை சந்திக்க முடியுமா எனக் கேட் டேன். இம்பாலில் முயற்சி செய்யுங்கள் என்றார்கள்.

மாலையில் டாக்டர் சாங்க்லாய் அவர்களைச் சந்தித்தேன். அவர் மெல்லிய குரலில் பேசினார். இம்பாலில் 13 வாகனங்கள், மூன்று அடுக்குக் கட்டடம், மேலே அலுவலகம், கீழே வீடு, சர்ச் வளாகம் என வசதியாக சமூக அந்தஸ்துடன் வாழ்ந்தவர். இந்தக் கலவரம் அவரையும் வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

"கலவரம் வந்தபொழுது கூட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளைத் தாக்கவிடாமல் பார்த்துக்கொள்ள லாம்' என அமைதியாக அமர்ந்திருந்ததாகக் கூறினார். கூட்டம் நெருங்க... நெருங்க எதற்கும் அடங்காத கூட்டம் என தெரிய ஆரம்பித்தது. தப்பிப்பதற்குள் பல விஷயங்கள் நடந்துவிட்டன. சில சர்ச்சுகளில் பெண்கள் பிரேயர் செய்யும் நிலையி லேயே சுட்டுக்கொல்லப்பட்டதை மெல்லிய குரலில் சொன்னார். முட்டி போட்ட நிலையில் பெண்கள் இறந்திருந்ததைப் பார்த்து மனம் உடைந்ததாகத் தெரிவித்தார். உணர்ச்சிவசப்படாமல் பேசும் இயல்புடைய அவருக்கே தாங்கமுடியாத பல விஷயங்கள் நடந்துள்ளன.

அவர் கண் முன்னால் அலுவலகம், வேலை செய்த சர்ச் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்தார். ஒரு பொருள் மிஞ்சாமல் கொளுத்தியிருந்தனர். 13 வாகனங்களும் கொளுத்தப்பட்டன. உயிர் தப்பிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. பல வருடங்களாக இம்பால் பகுதியில் வசிப்பவர்கள். இம்பால் பகுதியிலிருக்கும் சர்ச்சுகளை இடித்து நொறுக்கியுள்ளனர். இன்று பள்ளத்தாக்கு பகுதியில் ஒரேயொரு தேவாலயம்கூட இருக்க வாய்ப்பில்லை. தீக்கிரையாக்கியதோடு விடவில்லை. சர்ச்சுகள் சுத்தமாய் தரைமட்டமாக்கப்பட்ட கதையைச் சொல்லும்பொழுது அடிவயிற்றில் ஏதோ செய்தது. பல இடங்களில் உள்ளே இருப்பவர்கள் தப்பிக்க முடியாத அளவுக்கு தேவாலயத் தகர்ப்புடன் கொலைகளும் நடந்துள்ளன. மதவெறி, மக்களை எங்கெல்லாம் கொண்டுசெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டு மணிப்பூர் கலவரம்.

அப்பொழுது தனி அதிகாரம் கொடுப்பது பற்றி சாங்க்லாயுடன் பேச்சு வந்தது. தனி அதிகாரம் உள்ள எல்லைகள் மிகச் சிக்கலானவை. ஆனால் தனி அதிகாரத்தைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை என்றார். தனக்கும் தனி அதிகாரத்தில் நம்பிக்கை இல்லை. இருப்பினும் சேரவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக வருத்தத்துடன் கூறினார்.

அன்று "கேண்டில் விஜில்... அதாவது நூறாவது நாளை முன்னிட்டு விளக்கேற்றும் அஞ்சலி நடக்கிறது வருகிறீர்களா?' எனக் கேட்டார். உடனடியாகக் கிளம்பினேன். கருப்பு உடை அணிந்துகொண்டு பெண்களும், ஆண்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர். அந்த மேடையைக் கவனித்தேன் இறந்தவர்களின் புகைப்படங்கள், மலர்வளையங்கள் வைத்திருந்தனர். ஒவ்வொருவராக வந்து மெழுகுவர்த்தி ஏற்றிச்சென்றனர். எல்லாரிடமும் சோகம் தென்பட்டது.

இனியும் தம் மக்களை இழக்கக்கூடாது என்று காவல் காக்கிறார்கள். அவர்கள் கையில் ஆயுதங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் வேறு வழியில்லை. ஆர்மி வந்து பதுங்கு குழிகளை அழித்தாலும், முழுமையான பாதுகாப்பை ஆர்மியால் கொடுக்க முடியவில்லை.

சமீபமாக ஒரு செய்தி வந்தது, போலீஸ் மற்றும் மாநில அதிரடிப்படை இரண்டும் ஆர்மியில்லாத பகுதிகளுக்கு வந்து குக்கி மக்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. "நடவடிக்கை எடுங்கள்' எனக் குரல் கொடுத்தால், கலவரங்களை வீடியோ எடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். மணிப்பூர் பற்றி வெளியே பேசுபவர்கள் மீது நடவடிக்கை வருகிறதே தவிர, அங்கு வேறெந்த நடவடிக்கையும் இல்லை. இப்பொழுதும் அங்கு அமைதி திரும்பவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதற்குப் பதில் ஆயுதம் ஏந்தியவர்களை ஆதரிக்கும் விஷயமே நடக்கிறது.

(தொடரும்)