வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் தொடர்போராட்டத்தில் விவசாயிகள் அளவுக்கே கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம், அணிவகுத்து வந்த ட்ராக்டர்கள். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதே ட்ராக்டர்களைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

rr

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை தொகுதியிலிருக்கும் அம்மையநாயக்கனூர் அருகே பிரபல டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையான "டாஃபே' செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் தயாரிக்கும் டிராக்டர்கள் வட மாநிலங்களுக்கும் 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

நாளொன்றுக்கு 100 டிராக்டர்கள் வரை தயாரிக்கிறார்கள். அந்த அளவுக்கு தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்தாலும்கூட ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் நிர்வாகத் தரப்பில் கடந்த சில வருடங்களாக வைத்தும்கூட எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களான திருமுருகன், கண்ணன் ஆகியோர் திண்டுக்கல்லிலுள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

Advertisment

இதனால் கொதிப்படைந்த நிர்வாகம், அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. இதனால் நிர்வாகத்தைக் கண்டித்து பணியிலிருந்த 300 தொழி லாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்திலும் பணிக்குப் போக வேண்டிய 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொழிற்சாலை முன்பாகவும் போராட்டத்தில் குதித்தனர். அதைக்கண்டு சி.ஐ.டி.யு. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.

""இந்த "டாஃபே' டிராக் டர் தொழிற்சாலை ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்களைத்தான் பணிநிரந்தரம் ஆக்கியிருக்கிறார்களே தவிர மீதித் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஊதிய உயர்வும் கொடுக்கவில்லை. இதைத்தான் இங்குள்ள "டாஃபே ஊழியர் முன்னேற்ற சங்கம்' மற்றும் "டாஃபே தொழிலாளர் முன்னேற்ற சங்கம்' ஆகிய இரண்டு சங்க நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஏழு நிர்வாகிகளைத் தான் நிர்வாகம் திடீரென தற்காலிக பணிநீக்கம் செய்தது. அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்று தொழிலாளர்கள் மதிய சாப்பாட்டைப் புறக்கணித்தோம். பதிலுக்கு நிர்வாகமும் "தொழிற்சாலை ஓடாது' என்று அதிரடியாக நோட்டீஸ் ஒட்டிவிட்டனர்

tafe

Advertisment

மற்ற தொழிற்சாலைகள் எட்டுமணி நேரத்திலேயே டீக்கும் சாப்பாட்டுக்கும் நேரத்தை ஒதுக்கிக் கொடுப்பார்கள். இங்கு அப்படிக் கொடுப்பதில்லை பணிமுடிந்து வெளியே செல்லும்போது தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்பதற்காக உடனே பஸ்சை எடுத்துவிடுவார்கள். இதைப்பற்றி எல்லாம் எங்க நிர்வாக சேர்மன் அம்மா மல்லிகா சீனிவாசனிடம் முறையிடலாம் என்றால் இந்த இருபது வருட காலத்தில் இரண்டு முறைதான் இங்கு வந்திருக்கிறார்

துணைத்தலைவர் சீனிவாசன் மற்றும் உதவிப் பொதுமேலாளர் மணிகண்டன், உற்பத்தித் துறை உதவி மேலாளர் சரவணன் ஆகிய மூன்று மும்மூர்த்திகளின் கண்ட்ரோலில்தான் இந்த தொழிற்சாலை செயல்படுகிறது. அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்துவருவதால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் நலனில் அக்கறைகொண்ட மல்லிகா சீனிவாசன்தான் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன்வரவேண்டும்''’என்றனர் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

இது சம்பந்தமாக சி.ஐ.டி.யு. தொழிற் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஆறுமுக நயினாரிடம் கேட்டபோது... “""போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் டெண்டு போட்டு உட்காரு வதற்காக தார்ப்பாய் கட்டினார்கள். அதைக் கட்டக்கூடாது என தொழிற்சாலையின் செக்யூ ரிட்டி சரவணபிரபு அடாவடி செய்து தடுத்து நிறுத்திவிட்டார். அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்திருந்தனர். அதைப் படம் எடுத்த பத்திரிகையாளர்களையும் படம் எடுக்கக்கூடாது என மிரட்டினார். அதனால்தான் தொழிலாளருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறோம். தற்போது ஆர்.டி.ஓ. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. அதில் தொழிலாளர்களின் நிரந்தரப் பணி குறித்தும் சம்பள உயர்வு குறித்தும் பேசி தொழி லாளர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணவிருக்கிறோம். வருங்காலத்தில் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது. மீறி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தால் தொடர் போராட்டத்தில் குதிப்போம்''’என்று கூறினார்.

இது சம்பந்தமாக "டாஃபே' தொழிற் சாலையின் துணைத்தலைவர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்க பலமுறை செல்போனில் தொடர்புகொண்டும் கூட... லைனில் பிடிக்க முடியவில்லை. ஆனால் தொழிலாளர்கள் போராட்டம் மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி இப்பிரச்சினையில் தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன்வருவாரா? என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

-சக்தி