.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த மவுலிவாக்கம் கட்டடம் 2014-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. 62 மனித உயிர்களை பலிகொண்டது. அதேபோல் கடந்த வாரம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்த கட்டடம் கட்டுமான நிலையிலேயே விபத்துக்குள்ளாகி 32 பேரின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கியது.

building-collapse

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடி என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஜூலை 21 இரவில் இடிந்து விழுந்தது. ""இடிபாடுகளில் சுமார் 50 பேர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்'' என்கிற தகவல் நக்கீரனுக்குத்தான் சம்பவ இடத்திலிருந்து முதலில் சொல்லப்பட்டது. உடனே நாம் களத்தில் குதித்தோம்.

""இரவு சுமார் 7 மணி இருக்கும். அப்ப திடீர்னு ஒரு சவுண்டு வந்துச்சு. எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தோம். அப்ப எங்க பகுதியில் கட்டப்பட்டு வந்த மருத்துவமனை கட்டடத்திலிருந்து அங்கு வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் "மா' "மா' என இந்தியில் அலறியபடி ஓடி வந்தார்கள். ஒருத்தரு கான்க்ரீட் கலவைகள் உடலெல்லாம் மூடியபடி கண் தெரியாம நடந்து வந்தாரு. சிலருக்கு இடுப்புல அடிபட்டிருந்தது. அந்த மருத்துவமனை பக்கத்துல நின்றிருந்த ஆட்டோ, அந்த டிரைவரோடவே நசுங்கிக் கிடந்தது.

Advertisment

இத்தனைக்கும் காரணம், மருத்துவமனைக்கு ஒட்டியபடி தண்டவாளம் போன்ற இரும்புத் தளவாடங்களை வைத்து கார் பார்க்கிங் மற்றும் ஜெனரேட்டர் ஷெட் கட்டிக்கிட்டிருந்தாங்க. அது அப்படியே இடிஞ்சு விழுந்திருந்ததை பார்த்தோம். நசுங்கிய ஆட்டோ டிரைவர் முதல் பாதிக்கப்பட்டவங்களை எங்களால் முடிந்தவரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தோம்'' என்றார்கள் பகுதிவாசிகள்.

மொத்தம் 50 தொழிலாளர்கள் விபத்து நடந்த இடத்தில் வேலை செய்தார்கள். அவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்கள். கட்டுமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு பில்லர்களும் அதன்மேல் கொட்டப்பட்ட கான்கிரீட் கலவைகளும் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் வேகமாக பரவியது. கலெக்டர், போலீஸ் கமிஷனர், தீயணைப்புப் படை, பேரிடர் மீட்புக் குழு என அனைவரையும் வரவழைத்து விட்டது என்றாலும் பப்லு என்கிறவரை ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிணமாகத்தான் மீட்டார்கள். ராஜன் சபுத்ரி என்பவர் மருத்துவமனையில் இறந்தார். மருத்துவமனையில் உள்ள 16 பேரில் பலர் ஆபத்தான நிலையில் இருந்தனர்.

building-collapseமவுலிவாக்கம் போலவே ஏரிக் களிமண் நிறைந்த பகுதி இது. மழைநீர் தங்கி வெளியேறும் இந்தப் பகுதியில், இரும்புத் தண்டவாளங்கள் போன்ற பில்லர்களை பொருத்தி அதன்மேல் கான்க்ரீட் தளம் போட முயற்சி செய்தபோது இளகிய மண் எடை தாங்காமல் வேலை செய்த ஐம்பது பேரையும் பதம் பார்த்துவிட்டது'' என நம்மிடம் விளக்கினார்கள் அங்கிருந்த கட்டுமானப் பொறியாளர்கள்.

Advertisment

அந்த கட்டுமானத்தை சோதனை செய்த சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், பார்க்கிங் கட்டுமானம் கட்ட அனுமதி வாங்கவில்லை என இரண்டு பொறியாளர்களை கைது செய்தனர். "ஏன் அனுமதி வாங்கவில்லை' என கேட்டதற்கு "பார்க்கிங் கட்டிய இடம் நத்தம் புறம்போக்கு நிலம். அதனால் அனுமதி கிடைக்கவில்லை' என்றார்கள்.

ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த அந்த இடத்தில் கோவையைச் சேர்ந்த ஜெம் நிறுவனம் மருத்துவமனை கட்டி வருகிறது. இதில் எப்படி புறம்போக்கு நிலம் என பகுதி மக்களிடம் விசாரித்தோம். அவர்கள் இந்த நிலத்தின் வரலாற்றை சுருக்கமாக விளக்கினார்கள்.

""இந்த நிலத்தின் மொத்த பரப்பளவு ஐந்தரை ஏக்கர். இதன் ஒரிஜினல் உரிமையாளர் பாண்டியைச் சேர்ந்த ராஜகோபால். சுமார் 1500 ஏக்கர் நிலம் வைத்திருந்த பண்ணையாரான அவர் இந்த நிலத்தை வேலைக்காரியான பத்மினி பெயரில் எழுதி வைத்தாலும் நில உச்சவரம்பு சட்டத்தில் இந்த நிலம் சிக்குகிறது. அதனால் காலியாக இருந்த நிலத்தில் 180 பேர் வீடு கட்டி குடியிருந்து வந்தார்கள். அந்தப் பகுதியில் பேரூராட்சி தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்த கே.பி.கந்தன் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.

ஒருகட்டத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி, உறவினர் பிரேம் ஆகியோர் டைரக்டர்களாக இருக்கும் எடிசன் எண்டர்பிரைசஸ் பெயரில் வாங்கப்படுகிறது.

இந்த நில விவகாரம் தொடர்பாக துரைசாமிக்கும் கந்தனுக்கும் இடையே பனிப்போர் வெடிக்கிறது. துரைசாமி மீது மோசடிப் புகார் தெரிவித்தார் கந்தன். அது தவறான புகார் என மறுத்தார் சைதை துரைசாமி. இன்றுவரை அந்த நிலத்தில் 17 சென்ட் நிலத்தை கையில் வைத்திருக்கும் கே.பி.கந்தனுக்கும் துரைசாமிக்கும் இடையே வழக்கு நடக்கிறது. அதில் ஒரு பகுதியை ஜெம் மருத்துவமனைக்கு துரைசாமி விற்கிறார். வில்லங்கம் நிறைந்த இந்த பகுதியில் புறம்போக்கு நிலமும் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் விபத்துக்குள்ளான கட்டுமானம் கட்டப்பட்ட பகுதி'' என்கிறார்கள் பகுதிவாசிகள்.

இதுபற்றி சைதை துரைசாமியிடம் கேட்டோம். ""இதில் என்னை தொடர்புபடுத்துவதே தவறு'' என அழுத்தமாக மறுத்த அவர், ""எடிசன் எண்டர்பிரைசஸ் பெயரில் 2005-ம் ஆண்டு நிலம் வாங்கினேன். 2010-ம் ஆண்டு ஜெம் மருத்துவமனைக்கு விற்று விட்டேன். இந்த நிலத்தில் 17 சென்ட் இடத்தை கே.பி.கந்தன் மடக்கி வைத்திருக்கிறார்'' என்ற விவரங்களைத் தெரிவித்தார்.

கே.பி.கந்தன் இதுபற்றி நம்மிடம் பேச மறுத்துவிட்டார்.

இந்தப் பகுதியில் நடைபெறும் கட்டுமானங்கள் எல்லாம் சி.எம்.டிஏ. அனுமதி பெறாமல் நடக்கிறது என உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்குப் போட அதை சீரியசாக விசாரணைக்கு எடுத்திருக்கிறார் நீதியரசர் கிருபாகரன். இனியாவது உயிருக்கு உத்தரவாதம் கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.

-தாமோதரன் பிரகாஷ், அரவிந்த், ஜீவாபாரதி

_______________

அடாவடி டி.சி.!

building-collapse

கட்டட விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நக்கீரன் புகைப்படக் கலைஞர் குமரேசன் விரைந்து சென்று புகைப்படம் எடுத்தார். அப்போது அடையார் துணை ஆணையர் (டி.சி.) செஷாங் சாயின் தனது உதவியாளர் மூலம் நமது புகைப்படக்கலைஞரை அழைத்து, ""கேமராவை சீஸ் பண்ணிருவேன். யார் உங்கள இங்க வர அனுமதித்தது?'' என்று கேட்டு நமது கேமராவிலிருந்த எல்லா படங்களையும் அழிக்குமாறு மிரட்டி இருக்கிறார். அவரின் உதவியாளர்கள் நமது புகைப்படக்கலைஞரை சூழ்ந்து கொண்டனர். புகைப்படக்காரர் மறுக்கவே, இடிபாடுகளிலிருந்து சடலத்தைத் தோண்டி எடுக்கும் படத்தை வலுக்கட்டாயமாக அழிக்கச் செய்து, அதன்பின்னரே கேமராவை திருப்பித் தந்திருக்கிறார் அடாவடி டி.சி..