""மச்சான்... கையெல்லாம் நடுங்குதுடா.. சாப்பாடு சுத்தமாவே இறங்க மாட்டேங்குதுடா.. தூக்கம் மருந்துக்குகூட வரமாட்டேங்குதுடா... இப்படியே போனா நான் பைத்தியம் ஆயிருவேனோன்னு பயமா இருக்கு. ப்ளீஸ்டா மச்சான்.. எங்கியாவது இருந்து ஒரு கோட்டர் பிராந்தி வாங்கி குடுடா... ப்ளீஸ்... இந்த வார்த்தைகளைத் தான் கோவை சூலூரைச் சேர்ந்த பெர்னார்ட்... கடந்த 8-ந் தேதிவரை... பார்க்கும் நண்பர் களிடம் எல்லாம் புலம்பிய படியே சொல்லியவை.

cc

மூன்று பெண் பிள்ளைகளின் தகப்பனான பெர்னார்டுக்கு அவரது நண்பர்கள் அறிவுரை சொல்லி, வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வீட்டிலும் மனைவி ப்ரியாவிடம், ""நான் திருப்பூர்லேயே வேலையில் இருந்திருந்தாகூட எப்படியாவது சரக்கு வாங்கியிருப்பேன்'' என்றே சொல்லி வந்தார் பெர்னாட். அவரது நிலையை அறிந்திருந்தார் மனைவி. அவரும் ஆறுதல்படுத்தினார். ஆனாலும், மதுப் பழக்கத்திற்கு ஆளான பெர்னார்டால் சும்மா இருகக முடியவில்லை.

8ந் தேதியன்று, வீட்டில் கை கழுவ வைத்திருந்த சானிடைசர் திரவத்தை வெறும் வயிற்றில் குடித்தார். ஆல்கஹால் கலந்திருந்ததால் லேசாக போதை ஏறியது. தொடர்ந்து குடித்தார். சாப்பிடவில்லை. ""இப்பதான் பழைய ஆளா இருக்கேன்’’என மனைவியிடமும், “சீக்கிரம் திருப்பூருக்கு போய் சம்பாதித்து உங்களுக்கு வேண்டியதை வாங்கித் தருவேன்'' என பிள்ளைகளிடமும் கூறிவிட்டு, இரவு உறங்கி விட்டார் .

Advertisment

dd

நள்ளிரவு 1 மணியின் போது... பெர்னார்டுக்கு நெஞ்சு அடைத்தது. சூலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துப்போனார் ப்ரியா. சீரியஸ் என்பதால் ஜி.ஹெச் கொண்டு போகச் சொன்னார்கள். அங்கே அட்மிட் ஆன சில நிமிடங் களிலேயே பெர்னார்ட்டை குடித்து விட்டது மரணம் .

மூன்று பெண் குழந்தைகளோடும், கொரோனா தந்த அளவான உறவினர்களோடும் சுங்கம் ரவுண்டானா அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் பெர்னார்ட்டை அடக்கம் செய்து விட்டு தன் குழந்தைகளோடு அனாதையாய் நின்றாள் ப்ரியா .

Advertisment

""பெர்னாட் போலவும் அவரது குடும்பமும் போலவும்தான் பலரது நிலைமை இருக்கிறது'' என்கிறார் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பன்னீர்செல்வம்.

நோய்த் தொற்று பரவும் என்பதால் மதுக் கடைகளை அரசு இழுத்து மூடி விட்டதை வரவேற்கிறோம். ஆனால், இதற்கு முன்பு அவர்களுக்கு மது ஆசையைத் தூண்டியது யார்? 10 மணிக்கு கடை மூடினாலும் கையில் பணம் இருந்தால் காலை-இரவு எந்நேரமும் மது கிடைக்கும் என குடிமகன்களின் புத்திக்கு சொல்லிக் கொடுத்ததும் இந்த அரசு தானே..? .

dd

தினக்கூலி வாங்குபவருக்குகூட... வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் ஊற்றி ஓடவிடுவதைப் போல, அவர்களின் உடலில் மதுவை ஊற்றி நரம்புகளை இயங்க வைத்தது இந்த அரசு தானே...? காலையில் குடிப்பதற்கென அவன் சட்டைப் பையில் சேமித்து வைத்து இருக்கும் 100 ரூபாய் நோட்டு... குழந்தைகளுக்கு பால் பாக்கெட்டாகவும், பிஸ்கெட்டுகளாகவும் மாறி இருக்கும். இந்த சமூகத்தையே குடி நோய்ச் சமூகமாய் மாற்றி விட்டு... அரசு மக்கள் உயிர் மீது அக்கறை கொள்கிறது... என நல்லவராக வேஷம் போட அரசாங் கம் முயன்றால் அது கேடில்தான் முடியும் .

அதேபோல... போதை மறுவாழ்வு மையங்களில் கட்டணம் இல்லாத சிகிச்சை அளிப்பதோடு, போதை மறுவாழ்வு மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும். அடைபட்ட வீட்டுக்குள் எந்த வேலையுமில்லாமல், தனக்குத் தானே பேசிக் கொண்டு, பலர் புத்தி பேதலித்து போய்க் கொண்டிருப்பதை அரசு கவனத்திற்கொள்ள வேண்டும் .

ஊரடங்கு தொடரும் என்ற நிலையில்... பணமுமில்லாமல், வயிற்றுப் பசிக்காக, குடிப் பசிக்காக கொலை, கொள்ளை என்பதெல்லாம் சர்வ சாதாரண நிகழ்வாய் ஆங்காங்கே நடக்கும் அபாயம் ஏற்படலாம்.

அந்த அபாயம் ஏற்படுதலை தவிர்க்க வேண்டியது அரசின் கடமை. அதோடு பெர்னார்ட்டை போல குடியால் இறந்தவர்களின் குடும்பங்கள் மீதும் அரசு அக்கறை காட்டி, நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு படிப்பையும் கொடுக்க வேண்டும்'' என்கிறார் அக்கறையாய் .

-அ.அருள்குமார்