ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த அவலூரைச் சேர்ந்தவர் விவசாயி கங்கன், இவருக்குச் சொந்தமாக களத்தூர் கிராமத்தில் 84 சென்ட் நிலமிருந்தது. அதனை 2006-ல் விற்க முயற்சிசெய்துள்ளார். பெரும்புலிப்பாக்கத்தைச் சேர்ந்த வேலு, "நான் இடத்தை விற்றுத் தர்றேன்' எனச்சொல்லி அந்த இடத்தின் பவரை தனது தம்பி ஜெயராமன் பெயரில் கேட்டுள்ளார், கங்கனும் தந்துள்ளார். அப்போது கங்கனின் பக்கத்து நிலத்துக்காரர் சுப்பிரமணி, "இந்த நிலம் என்னோடது. பட்டா என் பெயரில் இருக்கு' என பிரச்சினை செய்துள்ளார். நீதிமன்றத்துக்கு பிரச்சினை சென்றுள்ளது.
அதன்பின் நடந்தவற்றை கூறிய கங்கன், “"இந்த நிலம் எனக்குச் சொந்தமானதுன்னு 2018-ல் தீர்ப்பு வந்தது. எங்கிட்ட பணமில்லாம தீர்ப்பு காப்பி வாங்காமலே இருந்தேன். என் நிலத்தில் வேலு வந்து பயிர் செய்துகிட்டிருந்தான். "என் நிலத்துல நீ எதுக்கு பயிர் செய்யறே'ன்னு கேட்டேன். "இது என்னோட நிலம், நீ வித்துட்டே'ன்னு கூசாம பொய்சொன்னான். நான் 2008-ல் தந்த பவர் வச்சி ஜெயராமன் விற்றதாவும், வேலு அதை வாங்கினதா இருந்துச்சி. வி.ஏ.ஓ பட்டா மாத்தித் தந்திருக்கார். நானும் அவலூர் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி. ஆபிஸ்ல புகார் தந்தேன். கண்டுக்கல. மீண்டும் 2014 ஆகஸ்ட் மாதம் புகாரை வாங்கினாங்க''’என்றார்.
நிலமோசடியால் தற்கொலை செய்துகொண்ட ராஜேந்திரனின் மனைவி விமலா, மகள் சந்தியா இருவரும் நம்மிடம், “"பெரும்புலிப்பாக்கத்தில் எங்களுக்கு 53 சென்ட், 49 சென்ட் என இரண்டு இடமிருந்தது. அந்த இடத்தின் மீது எங்களுக்கும் எங்க பங்காளிக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. அந்த இடத்தை நான் வாங்கித்தர்றேன்னு 2008-ல எங்கப்பாகிட்டயிருந்து தன் தம்பி ஜெயராமன் பேர்ல 20.2.2008-ல் பவர் வாங்கினவன், ஒரே வாரத்தில் 27.2.2008-ல தன்னோட பெயருக்கு விற்பனைப் பத்திரமா மாத்திருக்கான். 08.05.2009-ல் அந்த நிலத்தை தன்னோட மனைவி துளசிக்கு 10 ஆயிரத்துக்கு அடமானக் கடன் போட்டிருக்கான். அப்போ தான் எங்கப்பாவுக்கு தெரியவந்து வேலுகிட்ட கேட்டதுக்கு, அப்படி செய்தால்தான் நிலத்தை நல்ல விலைக்கு விற்கமுடியும்னு சொல்லியிருக்கான். தன்னை ஏமாத்திட்டான்னு தெரிஞ்சி 17.7.2009ல் தற்கொலை செய்துக் கிட்டார்.
அப்போ எங்கம்மாகிட்ட "புகார் எதுவும் தராதீங்க. நான் 20 லட்சம் பணத்தைத் தந்துடறேன்'னு சொல்லியிருக்காரு. எங்கப்பா இறந்த மூன்றே மாதத்தில் அந்த நிலத்தை பெரும்புலிபாக்கத்தைச் சேர்ந்த குப்பனுக்கு விற்றிருக்காரு. ஊர் முக்கியஸ்தர்களை வச்சி பணம் கேட்டதுக்கு அவன குடும்பத்தோட கொளுத்திடுவேன்னு மிரட்டினான். ஆம்பள துணையில்லாத நமக்கு பாதுகாப்பில்லன்னு 2015-ல் எங்க பாட்டி ஊரான காஞ்சிபுரம் வதியூர் வந்துட்டோம். அதுக்கப்புறம் சிலர் தந்த தைரியத்தால 2025, மே மாதம் ஐ.ஜி.யிடம் புகார் தந்தோம். ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அழைத்து விசாரிச்சாங்க''” என்றார்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, "நான் காவேரிப்பாக்கம் பகுதியில் விவசாய நிலம் வாங்கறதுக்குச் சொல்லி வச்சிருந்தேன். அப்போ சக்திவேல் என்கிற புரோக்கர் என்னை அணுகி பெரும்புலிப் பாக்கத்தை சேர்ந்த வேலுவின் மனைவி துளசி, அவுங்களோட மகள்கள் மணிமேகலை, பூங்கொடி பெயரில் விவசாய நிலம் 1.95 ஹெக்டர் இருக்கு. அந்த நிலத்தின் பெயரில் காவேரிப்பாக்கம் கார்ப்பரேஷன் வங்கியில் இரண்டு கடன் இருக்கு. அந்த கடனை அடைச் சிட்டா டாக்மெண்ட் வந்துடும், அப்படியே உங்க பேர்ல ரிஜிஸ்டர் செய்துடலாம்னு சொன்னாங்க. என் பெயருக்கு பவர் தந்தாங்க. நான் அந்த நிலத்தை சென்னையைச் சேர்ந்த தணிகாசலம் என்பவருக்கு 28 லட்ச ரூபாய்க்கு விற்பதா முடிவாச்சி. அவர் 27,88,750 ரூபாய்க்கு மூன்று பேர் பெயரில் செக் தந்தார். அவுங்க கடனை அடைச்சிட்டு அந்த டாக்குமெண்ட்கள வாங்கி, இன்னொரு வங்கியில் அந்த நிலத்தின்மீது மறுபடி கடன் வாங்கியிருக்காங்க. அதோடு எனக்கு தந்த பவரை 2017, ஆகஸ்ட் மாதம் ரத்துசெய் திருப்பது வில்லங்கம் போட்டுப் பார்த்தபோது தெரிஞ்சது. இப்போ "நிலத்தை தா அல்லது வாங்கிய பணத்தை தா'ன்னு சொன்னால், தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தான். நான் தந்த புகார் மீது 2017, அக்டோபர் மாதம் எப்.ஐ.ஆர். போட்டாங்க. 7 ஆண்டுகளா இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை’'' என்கிறார்.
பவர் என்கிற பதிவை வைத்து பலரையும் ஏமாற்றி நிலத்தை அபகரித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேலுவின் அப்பா சாராயம் வித்துக்கிட்டு இருந்ததால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு இவரைப் பார்த்தாலே அச்சம். இவனின் மோசடியால் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். சிலர் மட்டும் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் போராடி வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்கை சந்தித்து முறையிட்டனர். அதன் பின்பே ராணிப்பேட்டை எஸ்.பி, குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி சீட்டிங் மன்னன் வேலுவை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். தம்பி ஜெயராமனை போலீஸ் தேடிவருவதாகச் சொல்கிறார்கள்.
ஏமாற்றி வாங்கிய சொத்துக்கள் சிலது தவிர மற்றவை மனைவி, மகள்கள், சின்னவீடு பெயரில்தான் வைத்துள்ளார். அவர்களிட மிருந்து எங்கள் நிலத்தினை மீட்டுத் தரவேண் டும் அல்லது அதற்குண்டான தொகையை பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்குமா காவல்துறை?
-