புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் புள்ளாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகன்கள் முருகேசன், பாஸ்கரன். முருகேசன் மாலத்தீவில் வேலை செய்துவருகிறார். பாஸ்கர் வடகாடு- மாங்காடு பேப்பர்மில் சாலையில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைத்திருந்தார்.
மகன்கள் இருவருக்கும் திருமணமாகி முருகேசனுக்கு விமலாராணி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளது. பாஸ்கரனோ ஊர்க்காவல் படையில் பணியிலிருந்த பானுமதி என்ற பெண்ணைக் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து வசந்தன் என்ற மகன் உள்ளார். பாஸ்கர் மாற்று ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததால் பெற்றோர் அந்தப் பெண்ணை ஏற்கவில்லை, அதனால் பானுமதி பிரிந்து சென்றுவிட்டார். குழந்தை வசந்தன், பாஸ்கருடன்.
ஒரே வீட்டில் பாஸ்கரின் பெற்றோர், அண்ணன் முருகேசன் குடும்பம் கீழ் வீட்டிலும் பாஸ்கர் தன் மகனுடன் மேல் வீட்டிலும் வசிக்கின்றனர். இந்த நிலையில்தான் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பாஸ்கர் வீட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் வடகாடு பேப்பர்மில் சாலையோர பள்ளத்தில் பாஸ்கர் ரத்தக்காயங்களுடன் தனது மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடப்பதை பார்த்தவர்கள், பாஸ்கரின் பெற்றோருக்கும் வடகாடு போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். நிலை தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் பாஸ்கரின் தந்தை வீரப்பன், அதிகாலை 3 மணிக்கு யாரோ 3 பேர் வந்து கோயிலுக்குப் போவோம் என்று என் மகனை அழைத்து வந்தனர் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரேதப் பரிசோத னையில், பாஸ்கர் விபத்தில் இறக்க வில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. பிறகு போலீசார் புலன்விசாரணையை முடுக்கிவிட்டனர். சில செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் தன் தம்பி இறந்த தகவலறிந்து அண்ணன் முருகேசன் ஊருக்கு வருவதாக அவர்களது அப்பா வீரப்பன் கூறியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பாஸ்கரின உடலை உறவினர்கள் தகனம் செய்தனர். அதன்பிறகு அண்ணன் முருகேசன், அண்ணி விமலா ராணி, அப்பா வீரப்பன், அம்மா வசந்தா ஆகியோரிடம் தனித்தனியாக மேற் கொண்ட விசாரணையில் அவர்களின் குட்டு வெளிப்பட்டிருக்கிறது.
மனைவி பானுமதியை பாஸ்கர் பிரிந்தபிறகு அவர்களது குழந்தையை முருகேசன் மனைவியே கவனித்து வந்துள்ளார். ஒரே வீட்டில் இருந்ததாலும் முருகேசன் வெளிநாட்டில் இருந்ததாலும் பாஸ்கரனுக்கும் அண்ணி விமலாராணிக்கும் தகாதஉறவு ஏற்பட்டுள்ளது. இதனைப் பெற்றோர் கண்டித்ததால் பாஸ்கர் பெற்றோரைத் தாக்கியுள்ளார். தகவல் வெளிநாட்டிலுள்ள முருகேசனுக்கு தெரிந்தநிலையில் தன் மனைவியிடம் விசாரித் துள்ளார். தன்னை பாஸ்கர் மிரட்டுவதாக விமலாராணி கூறி யுள்ளார்.
இந்த நிலை யில்தான் "26ஆம் தேதி, நான் ஊருக்கு வருகிறேன். என்னுடன் கேரளாவிலிருந்து சிலர் வருகிறார்கள். நீ உங்க அம்மா வீட்டுக்குப் போ' என்று தன் மனைவியை குழந்தை களுடன் அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள் ளார். வெளிநாட்டி லிருந்து ஊருக்குவந்து மாடியில் தூங்கிய தன் தம்பி பாஸ்கர் தலையிலும், நெஞ் சிலும் கல்லைத் தூக்கிப்போட்டு பாஸ்கர் நிலைகுலைந் ததும்... ஒரு கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு, ஒரு பெட்சீட்டில் வைத்து மாடியிலிருந்து கீழே கொண்டுவந்து, தன் தந்தை, தாயாரிடம் சொல்லிவிட்டு பாஸ்கரின் மோட்டார் சைக்கிளி லேயே அவரது சடலத்தை ஏற்றி, தன் தந்தையை அழைத்து, தன் உடலுடன் தம்பியின் சடலத்தை கட்டச்சொல்லி தன் வீட்டிலிருந்து 300மீ தூரத்தில் கொண்டுபோய் பள்ளத்தில் தள்ளிவிட்டு, விபத்துபோலக் காட்ட மோட்டார் சைக்கிளையும் அருகில் போட்டு வீட்டிற்கு வந்து ரத்தக்கறை படிந்த துணிகளை அள்ளிக்கொண்டுபோய் கல்லணைக் கால்வாய் தண்ணீரில் வீசியிருக்கிறார்.
பிறகு தந்தை வீரப்பன், மகன் முருகேசனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று மாங்காடு பூச்சிக்கடை பஸ் நிறுத்தத்தில் பேராவூரணி பேருந்தில் ஏற்றியனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்து எதுவும்தெரியாததுபோல இருந்துள்ளார். இந்த நேரத்தில் தன் தாய் வீட்டிலிருந்த விமலாராணி தன் மாமியாருக்கு போன்செய்து சம்பவம் முடிந்ததா என்று கேட்டுள்ளார்.
பேராவூரணி பஸ் ஏறிய முருகேசன் குருவிக்கரம்பை பகுதியில் பாஸ்கரின் செல்போனிலிருந்த சிம்கார்டை உடைத்துப் போட்டுவிட்டு, கிழக்கு கடற்கரைச் சாலைவழியாக ராமேஸ்வரம் வரை சென்று தனது ரத்தக்கறை படிந்த சட்டை மற்றும் தன் தம்பி பாஸ்கரின் செல்போன் ஆகியவற்றை கடலில் வீசிவிட்டு, எதுவும் தெரியாததுபோல தன் தம்பி சாவிற்காக இரவில் வெளிநாட்டி லிருந்து வந்ததுபோல வந்துள்ளார். முருகேசன் பாஸ்போர்ட்டை போலீசார் வாங்கிப் பார்த்தபோது, அவர் முதல்நாளே வந்துவிட்டு நடிப்பது தெரிந்துள்ளது.
புதுக்கோட்டை ஏ.டி.எஸ்.பி. முரளிதரன் உள்ளிட்ட போலீசார் விசாரணை முடிவில், கொலைசெய்து நாடகமாடிய முருகேசன், விமலாராணி, வீரப்பன், வசந்தா ஆகியோரை கைதுசெய்து, கொலைக்குப் பயன்படுத்திய கல்லையும் கைப்பற்றியுள்ளனர்.
குடும்பமே பாஸ்கரை கொலைசெய்து விட்டு "பாபநாசம்' பட பாணியில் நாடக மாடியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.